மந்திரச்சொல்
வாழ்க்கையில் எல்லோரும் ஏதேனும் ஒரு தருணத்தில் அவமானத்தை சந்திக்கும் சூழல் உருவாகலாம். அதுபோன்ற தருணத்தில், அந்த அவமானத்தை மனதிற்குள் நிரந்தரமாகத் வைத்திருப்பதா அல்லது வெளியேற்றுவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது.
முட்டாள் என்று அழைப்பதால் மட்டும் யாரும் முட்டாளாக மாட்டார்கள். ஒருவரால் முடியாது என்று சொல்வதால், அவர் வாழ்க்கை தோல்வியாகிவிடாது. ஒருவர் அவமானப்படுத்துகிறார் என்பதற்காக கோபப்பட வேண்டிய அவசியமில்லை.
சில நேரங்களில் பதில் சொல்லாமல் விலகுவதே மனவலிமை. நம்மை புரிந்துகொள்ளாத ஒருவரிடம், நியாயத்தை நிரூபிக்க நேரத்தைச் செலவிடுவதில் அர்த்தம் இல்லை.
அதேநேரம், என்னால் எதுவும் முடியாது, நான் மற்றவர்களைப் போல அழகாக இல்லை, எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, நான் வாழ்க்கையில் சாதிக்கத் தகுதியற்றவன், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது போன்ற நெகடிவ் எண்ணம் உள்ளவர்களே, அடுத்தவர் வார்த்தைகளால் அதிகம் காயப்படுகிறார்கள்.
இதுபோன்ற தருணங்களில் பிறர் சொல்வதில் உண்மை இருந்தால் குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தவறு செய்திருந்தால் திருத்திக்கொள்ளுங்கள். தோல்வியடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள். அதற்காக ஒருவர் தொடர்ந்து அவமானப்படுத்தினால், அதைச் சகித்துக்கொள்ள அவசியமில்லை. சுயமரியாதையைப் பாதுகாக்க எல்லைகளை வகுக்க வேண்டும்.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தனது பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் ஷாரூக்கான். அவருக்கு திரைப்படப் பின்னணி, குடும்பச் செல்வாக்கு இல்லை. அதனால் திரையுலகில் விமர்சனங்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொண்டார். ஆனால், மற்றவர்கள் தன்னை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கவில்லை.
தன்னுடைய தனித்துவமான நடிப்பு, உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டார். உங்களை மற்றவர்கள் எந்த இடத்தில் நிறுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல; உங்களை நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதுதான் ஷாரூக் வாழ்க்கை சொல்லும் செய்தி.
வாழ்க்கையில் சில சுயமரியாதை விதிகளைக் கடைப்பிடியுங்கள். அவமானப்படுத்தும் நபர்களிடம் உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சி செய்யாதீர்கள். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுங்கள். உங்களை மதிக்காத இடத்தில் தேவையற்ற அங்கீகாரத்திற்காகக் காத்திருக்காதீர்கள்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுடைய சுதந்திரம். ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் மதிப்பை நிர்ணயிக்கும் உரிமையை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள். உங்களை நீங்கள் மதிக்கத் தொடங்குவதே தன்னம்பிக்கை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
