மந்திரச்சொல்
இரவு என்பது இருள் மட்டுமல்ல. அது தோல்வியாக இருக்கலாம். பிரிவாக இருக்கலாம். பணக்கஷ்டமாக இருக்கலாம். நோக்கமில்லாத காலமாக இருக்கலாம்.
எத்தனை முயற்சிகள் செய்தும் கிடைக்காத வெற்றியாக இருக்கலாம். ஆனால் எந்த இரவுக்கும் ஒரு எல்லை இருக்கிறது.
இருள் நிரந்தரம் அல்ல. தோல்விகள் நிரந்தரம் அல்ல என்பதற்கு உதாரணம் ஆபிரகாம் லிங்கன். அவர் பல தேர்தல்களில் தோல்வியடைந்தார். தொழிலில் சிரமங்களை சந்தித்தார். தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல துயரங்களை அனுபவித்தார்.
ஒரு கட்டத்தில் அவருடைய வாழ்க்கை முழுவதும் தோல்விகளால் நிரம்பியதாகவே தோன்றியது. ஆனால் அவர் அந்தத் தோல்விகளை தனது வாழ்க்கையின் முடிவு என்று பார்க்கவில்லை. பின்னர் அமெரிக்காவின் அதிபராக உயர்ந்தார். சில நேரங்களில் வாழ்க்கை நம்மை தாமதப்படுத்தும். ஆனால் அதற்காக அது நம்மை மறந்துவிட்டது என்று அர்த்தமில்லை.
அதேபோல், ஸ்டீவ் ஜாப்ஸ் அவரது சொந்த ஆப்பிள் நிறுவனத்திலிருந்தே ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். தான் உருவாக்கிய நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுவது எவ்வளவு பெரிய அதிர்ச்சி? ஆனால் அந்த “இரவு” அவருடைய வாழ்க்கையை முடிக்கவில்லை.
அவர் புதிய முயற்சிகளைத் தொடங்கினார். புதிய அனுபவங்களைப் பெற்றார்.
பின்னர் ஆப்பிளுக்குத் திரும்பினார். அதன்பிறகு உலக தொழில்நுட்ப வரலாற்றையே மாற்றிய மனிதராக உயர்ந்தார்.
முடிவு என்று நினைக்கும் இடத்தில், சில நேரங்களில் புதிய தொடக்கம் காத்திருக்கலாம். விடியல் வரும் என்று நம்புவது மட்டும் போதாது. விடியல் வரும் வரை நாம் விழித்திருக்க வேண்டும். தோல்வி வந்தால் முயற்சியை நிறுத்தக்கூடாது. பணம் குறைந்தால் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஒருவர் நம்மை விட்டு சென்றால் நம் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கக்கூடாது.
வாழ்க்கை இருட்டாக இருக்கிறது என்று பயப்படாதீர்கள். இருள் இருப்பதால்தான் வெளிச்சத்தின் மதிப்பு தெரிகிறது. தோல்வி இருப்பதால்தான் வெற்றியின் சுவை தெரிகிறது. கண்ணீர் இருப்பதால்தான் புன்னகையின் அருமை புரிகிறது. காத்திருப்பு இருப்பதால்தான் கிடைத்ததன் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
எனவே இன்று உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும், ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிடாதீர்கள். வாழ்க்கையில் கஷ்டம் எவ்வளவு நீண்டாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்பவரின் வெற்றியை என்றென்றும் தடுக்க முடியாது.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
