மொழிப்பற்று அரசியல்
’’மனிதர்கள் தாய் மொழியை மறந்துவிட்டு வேறு மொழி பேசுவதற்கு ஆர்வமாக இருக்கிறார்களே…’’ என்று வேதனைப்பட்டார் மகேந்திரன்.
‘’மொழிப்பற்று முக்கியம் என்று நினைக்கிறாயா..?’’
‘’மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு தமிழ் என்றால் உயிர். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உயிர் விட்ட மனிதர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உண்டு. இனிமையான மொழி. இதை எப்படி மறக்கவும், மறுக்கவும் முடியும்’’ என்றார்.
புன்னகையுடன் தொடங்கினார் ஞானகுரு. ‘’மொழிப்பற்று தவறு இல்லை.. ஆனால் அதை போகிற இடத்துக்கெல்லாம் பற்றிக்கொண்டு போகத் தேவையில்லை…’’
‘’வெளிநாட்டுக்குப் போய்விட்டால் நம் தாய் மொழியை மறந்துவிட வேண்டுமா..?’’
‘’இந்த மொழி பேசவேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாரும் பிறப்பதில்லை. இயற்கையின் விபத்தாக தமிழ்நாட்டில் பிறப்பவர்கள் தமிழ் பேசுகிறார்கள். பழங்குடி இனத்தில் பிறக்கும் பிள்ளைகள் ஏதோ ஒரு மொழி பேசுகிறது. இதில் எந்த ஒரு மொழியும் உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை.
பிறந்த நிலத்தின் மொழி அவரவருக்குத் தாய் மொழியாக இருக்கிறது. தாய் மொழியின் தனித்தன்மை, இலக்கியம், சிறப்புகள் குறித்து பெருமை கொள்ளலாமே தவிர, இதுவே உன்னதம் என்று உயர்த்திப்பிடிக்க அவசியம் இல்லை.
பணக்கார நாடாக இருப்பதால் அமெரிக்கா நாடு சிறந்தது என்று அர்த்தமில்லை, ஏழை நாடு என்பதால் ஆப்பிரிக்க நாடுகள் மோசம் என்று அர்த்தமில்லை. தேசபக்தி என்பது பிறந்த நாட்டின் மீது, மண் மீதுள்ள பாசத்தினால் உண்டாகிறது. அதுபோல் தாய்மொழி என்பது பேசும் மொழியின் அடிப்படையில் அமைகிறது.
எந்தவொரு நாட்டின் அழகையும் ரசிப்பதற்கு மனிதருக்கு உரிமை உண்டு. அதேபோல் எந்த ஒரு மொழியை கற்றுக்கொள்ளவும், அந்த மொழியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பெறவும், அதன்பொருட்டு அந்த நாட்டிலேயே தங்கி கிரீன் கார்டு பெறவும் உரிமை உண்டு.
ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துபோகும் என்று சொல்வார்கள். உண்மைதான். அப்படி அழிந்துபோகிறது என்றால், அந்த அளவுக்கு அந்த மொழி பலவீனமாக இருக்கிறது என்பதே அர்த்தம். பலவீனமான உயிரினங்கள் மட்டுமின்றி பலமான டயனோசர் போன்ற உயிரினங்களும் அழிவது இந்த உலகில் சாதாரண விஷயம்தான்.
ஆனால், மனிதர்களை உசுப்பேற்ற நினைக்கும் அரசியல்வாதிகள் மட்டுமே மொழியை ஆயுதம் என்றும் கடவுள் என்றும் உயர்த்துகிறார்கள், மற்ற மொழிகளை அவமானப்படுத்தி, களேபரத்தை உருவாக்கி குளிர் காய்கிறார்கள். மொழிப்பற்றாளன் என்பதில் பெருமிதப்படுகிறார்கள்.
தமிழைத் தாயாக உருவகப்படுத்தி, மதிப்பும் மரியாதையும் கொடுப்பது மட்டும் போதாது. தமிழ் சீர்திருத்தம் செய்யப்பட்டதாலே இன்று கம்ப்யூட்டர் ஃப்ரெண்ட்லியாக மாறியிருக்கிறது. அதுபோன்ற சீர்திருத்தங்கள், மாற்றங்கள் தொடர்ந்து நடக்கவேண்டும். தமிழ் எழுத்துக்கள் எண்ணிக்கையைக் குறைத்து கற்பதற்கு மிகவும் எளிமையான மொழியாக இருக்க வேண்டும். தமிழ் மொழியின் வீச்சு உலகம் முழுக்க பரவ வேண்டும். ஆனால், அதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதனால் தமிழ் தாயாக மட்டுமே இருப்பாள், அவளுக்குக் குழந்தைகள் இருக்காது’’ என்று சிரித்தார் ஞானகுரு.
‘’அப்படியென்றால் தமிழை காப்பாற்ற வேண்டாமா..?’’
‘’மூத்த மனிதருக்கு என்ன மதிப்பும் மரியாதையும் கொடுப்பாயோ, அப்படியொரு மதிப்பு மொழிக்கும் போதும். அவரை தலையை தூக்கிக்கொண்டு திரியவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை’’ என்றார் ஞானகுரு.
