சிம்பிள் லைஃப் ஸ்டைல்
திருவோடு வைத்திருப்பது சந்நியாசிக்கு ஆடம்பரம் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா..? அந்த திருவோட்டை பாதுகாப்பதற்கு ஒரு தோள் பை தேவைப்படும். அடுத்து தண்ணீர் கேன், சாப்பிட ஸ்பூன், செருப்பு, தீப்பெட்டி என்று தேவை அதிகரித்துக்கொண்டே போகும். பின்னர் அந்த சந்நியாசி மீண்டும் குடும்பஸ்தன் ஆகிவிடுவார்.
அந்த வகையில் இப்போது, தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பதையே லைஃப் ஸ்டைல் என்று மக்கள் நினைக்கிறார்கள். பிறர் பார்த்து பிரமிப்பதற்காக பிரமாண்டமான பங்களா, வாசலில் இரண்டு கார்கள், காவலுக்கு வேலைக்காரர்கள், நாலைந்து காவல் நாய்கள் என்று வாழ்வதே சிறந்த லைஃப் ஸ்டைல் என்ற லட்சியத்துடன் வாழ்கிறார்கள்.
‘தினமும் மட்டனும், சிக்கனும் இருக்கணும், எல்லா இடத்துக்கும் காரிலேயே போய் பழகிட்டேன்… ஞாயிற்றுக்கிழமைன்னா ஹோட்டல் சாப்பாடு… ஹோம் மேடு சாக்லேட்… மாதம் ஒரு ஷாப்பிங்’ என்பது போன்ற வாழ்க்கை முறை அலுப்பு தட்டினாலும், இதை மாற்றிக்கொள்ள பலரும் விரும்புவதில்லை. இதையே தங்களுடைய லைஃப் ஸ்டைல் என்று பலருக்கும் காட்டிக்கொள்வதில் பெருமைப்படுகிறார்கள். பிறருக்காக வாழக்கூடிய இந்த லைஃப் ஸ்டைல் ஒருபோதும் சந்தோஷம் கொடுப்பதில்லை.
ஆம், குறைந்த பொருட்களுடன் வாழ்வதுவே மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடுக்கும்., எத்தனை குறைவான பொருட்கள் உங்களிடம் இருக்கிறதோ, அத்தனை அதிக நிம்மதி கிடைக்கும். இந்த வழியில், மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான குறைவான பொருட்களுடன் வாழ்க்கை நடத்துவது ஆகும். உதாரணமாக ஏழு செட் ஆடைகள் போதும் என்று முடிவு எடுப்பது. அதேபோல் ஒரு பெல்ட் ஒரு செருப்பு ஒரு ஷூ, ஒரு பிளேட், ஒரு ஸ்பூன் என்று பட்டியல் போடுகிறார்கள்.
வீட்டில் தேவையில்லாத பொருட்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை அறிய ஒரு வழிமுறை பரிந்துரை செய்யப்படுகிறது.
அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் ஒரு தனி அறையில் அடைத்துவிட வேண்டும். இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மட்டும் அந்த அறையில் இருந்து எடுத்து, நமது அன்றாட பழக்கத்துக்குரிய அறைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக காலையில் பல் விளக்க தேவையான பேஸ்ட், பிரஷ், சோப்பு போன்றவற்றை அந்த அறையில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். சமைக்கத் தொடங்கும்போது, தேவையான பாத்திரங்களை மட்டும் எடுக்க வேண்டும். இரவு உறங்கும் போது அதற்கு தேவையான தலகாணி, போர்வை என, ஒரு மாதம் எடுத்துக்கொண்டே இருக்கலாம்.
ஒரு மாதம் முடிந்த பிறகு நீங்கள் வெளியில் எடுத்து வைத்த பொருட்கள் மட்டுமே உங்கள் வாழ்வியலுக்குப் போதுமானது. ஒரு மாதம் எடுத்த பிறகும் அந்த அறையில் எஞ்சியிருக்கும் பொருட்கள், உங்களுக்குத் தேவை இல்லாத அதாவது அத்தியாவசியம் இல்லாத பொருட்களே.
இப்படி நாம் சேர்த்திருக்கும் தேவையில்லாத பொருட்களை விட்டு விலகுவதே மினிமலிசம் எனும் வாழ்வியல் கொள்கை.
இன்னும் எளிதாக சொல்வது என்றால், வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளை மூன்று மாதங்களுக்குள் ஒரு முறையேனும் நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அந்த பொருள் உங்கள் அத்தியாவசியப் பட்டியலில் வராது. உதாரணத்துக்கு மடக்கி வைக்கும் ஏணி ஒன்று வாங்கி வைத்திருப்பீர்கள். வீட்டில் ஒட்டடை அடிப்பதற்கு, பல்பு மாட்டுவதற்கு அது தேவைப்படலாம். ஆனால், வருடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே பயன்படக்கூடிய ஒரு பொருளை வீட்டில் அடைத்து வைப்பதற்கு அவசியம் இல்லை. தேவை ஏற்படும்போது வாடகைக்கு அல்லது அக்கம்பக்கம் இரவல் வாங்கிக்கொள்ளலாம். இவ்வளவுதான் மினிமலிசம்.
இது, தேவையில்லாத எத்தனையோ தொந்தரவுகளை குறைக்கும். உதாரணத்துக்கு வீட்டில் ஒரு பால் குக்கர் இருக்கிறது என்றால், அதையே தினமும் பயன்படுத்துவார்கள். வெவ்வேறு அளவுகளில் மூன்று பால் குக்கர் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு பால் குக்கரை கழுவ சோம்பேறித்தனப்பட்டு, அடுத்ததை பயன்படுத்துவார்கள். இதனால் சமையல் மேடையில் ஒரே நேரத்தில் மூன்று பால் குக்கருமே இருக்கும் நிலை உருவாகும். இது, தேவையில்லாத கூடுதல் சுமை.
நிறைய பொருட்கள் சேர்ந்துவிட்டால் நிறைய சந்தோஷம் கிடைக்கும் என்பது உண்மையல்ல, தேவையான அளவுக்கு குறைவான பொருட்கள் இருப்பதே நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும். அடிப்படைத் தேவைகளையும் அளவான பொருட்களையும் உடையவர்களே பணக்காரர்கள், அவர்களே இந்த உலகில் நிம்மதியாக வாழ தகுதி படைத்த மானுடர்கள்.
இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக மிக்ஸி வாங்கும்போது ஒரு குக்கர் கூடுதலாக வாங்கிவந்தால், அது மகிழ்ச்சி அல்ல, கிச்சனுக்கு கூடுதல் சுமை. பைக்கில் இருந்து காருக்கு மாறுவது வசதி என்பதைவிட கூடுதல் சுமை. கூடுதல் பெட்ரோல் செலவு, கார் நிறுத்துவதற்கு செட், வெளியே செல்லும்போது பார்க்கிங் கட்டணம், கார் இருப்பதாலே செல்லக்கூடிய பயணங்கள் என்று சுமை கூடிக்கொண்டே செல்லும்.
அதேநேரம், பொருட்களின் தேவைகளைக் குறைக்க குறைக்க மகிழ்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். அனுபவித்து மகிழுங்கள்.