சிக்கலாக்க வேண்டாமே
நாய், கிளி, ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு உணவு, பாதுகாப்பு, அன்பும் கொடுத்துவந்தால், அந்த இடத்தைவிட்டு அவை புதிய வாழ்வு தேடி வெளியேறுவதில்லை. கிடைத்திருக்கும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு சிம்பிளாக வாழ்ந்து முடிக்கின்றன.
மனிதரின் வாழ்க்கையும் இப்படி சிம்பிளானதே. ஆனால், நன்மைகள் மட்டுமே நடக்கவேண்டும் என்று ஆசைப்படுவதன் காரணமாகவே மனிதர்கள் சிக்கல் மேல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய தூக்கம் என உடலை சிறப்பாக பாதுகாத்துவந்தாலும், சில நோய்கள் பாதிப்பதை தடுக்கவே முடியாது. மிகத் தெளிவாகத் திட்டமிட்டு தொழில் தொடங்கினாலும் தோல்விக்கும் வாய்ப்பு உண்டு. எத்தனை பிரியமாக இருந்தாலும், உறவுக்குள் சண்டை வருவதும் சகஜமே. இவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வதே சிம்பிளான வாழ்வுக்கு அடிப்படை.
நமது எல்லா முடிவுகளும் சரியாகத்தான் இருக்க வேண்டுமா.. ஒருசில முடிவுகள் தவறாவதால் என்ன ஆகப்போகிறது..? எல்லா உறவுகளும் கடைசி வரை பிரியமாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இருக்கிறதா..? எல்லா நேரங்களிலும் தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டுமா என்ன..? மன அழுத்தம் ஏற்படுவதும் தவறில்லையே..?
இயற்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வெயில், மழை, பனி, புயல் என்று மாறிகொண்டுதானே இருக்கிறது. முழு நிலவுதானே அமாவாசையாக மாறுகிறது. மனிதருக்கும் நிலையற்ற தன்மை இருக்கத்தானே செய்யும்..?
எனவே வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, வேதனை, அன்பு, பிரிவு போன்ற எதையுமே நிரந்தரமாகப் பார்க்க வேண்டியதில்லை. இவை எல்லாமே நம் வாழ்க்கையில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் என்ற புரிதல் வருவதே முக்கியம்.
ஏற்றமும் தாழ்வுமே வாழ்க்கையின் இலக்கணம் என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிமையாகிவிடும். அதுவே, மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.