மொட்டை மாடி தோட்டம்
இப்போது வீட்டு வாசலில், பின்புறத்தில், மொட்டை மாடியில் கொஞ்சம் இடம் இருந்தாலும், தோட்டம் போடும் பழக்கம் அதிகரித்துவருகிறது. அதுவும் குறிப்பாக வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்களுக்கு வீட்டுத் தோட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. நிறைய இல்லத்தரசிகளும் தற்பொழுது இந்தத் தோட்டக்கலையை தங்களது பொழுதுப்போக்கிற்காகச் செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
வீட்டுத் தோட்டத்தில் காய்கள், பழங்கள், கரிமசாலாப் பொருட்கள் விளையும் செடிகள், பூச்செடிகள், அழகு செடிகள் போன்ற எல்லாவற்றையும் வளர்க்க முடியும். குறிப்பாக நமது அன்றாட சமையலுக்குத் தேவைப்படும் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள், கறிவேப்பிலை, எலுமிச்சை, துளசி, பச்சிலை போன்றவற்றை மிகவும் எளிதாக வளர்க்கலாம்.
செடிகளை வளர்க்க ஆசைப்படுபவர்கள் முதலில் சரியான இடத்தைத் தேர்வு செய்யவேண்டும். அதாவது சூரிய ஒளி அவசியம். அதனால், போதுமான சூரியக்கதிர்வீச்சு வரும் இடத்தை தேர்ந்தெடுக்கவும். சூரியக்கதிர் தாவரங்கள் வளர்வதற்கும், தேவையான ஆற்றல் பெறுவதற்கும் உரிய வளங்களை தருகிறது. கண்டிப்பாகத் தாவரங்கள் தினமும் போதுமான அளவு வெயிலில் இருக்க வேண்டும். எனவே, வெயில் படாத மறைவான இடங்களில் காய்கறித் தோட்டத்தை போடக் கூடாது. வெயில் படாத இடங்களில் வளர்ப்பதற்கென ஒருசில செடிகள் இருக்கின்றன. ஆனால், பொதுவாக அழகு செடிகளை வளர்ப்பதைவிட, பயனுள்ள செடிகளை வளர்ப்பது அதிக சந்தோஷம் தரும்.
அடுத்தபடியாக நீர் தேவை. காய்கறித் தோட்டத்திற்கு தேவையான நீர் மட்டம் உள்ள மண்ணைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இது இயற்கையாகவே தண்ணீரை வடிக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும். மிகவும் அதிக அளவு அல்லது மிகவும் குறைவான அளவு தண்ணீர் தாவரங்களுக்கு ஏதுவானது அல்ல.
எந்த இடத்தில் நாம் காய்கறித் தோட்டம் போடவேண்டுமோ அந்த இடத்தில் உள்ள மண்ணை முதலில் தயார் செய்யவும். மண்ணில் இருந்து முதலில் கடினமான கல் மற்றும் புல் போன்றவற்றை அகற்றவும். அதில் குப்பை உரத்தை சேர்த்து மண்ணை தயார் செய்யவும். செடி வளர்ப்பதற்கான மண்ணாக இல்லை என்றால், அதற்குரிய சரியான மண்ணை தேர்வு செய்து வாங்கி நிரப்பலாம். சரியான இடத்தில், சரியான மண்ணை, சரியான விலையில் வாங்கவேண்டும்.
என்ன காய்கறிகள், பழங்களை பயிரிடலாம் என்பதை தெளிவாக தேர்வு செய்யவேண்டும். அதாவது, மண்ணின் வகைக்கு ஏற்பவும், எந்த தாவரம் இந்த மண்ணிற்கு ஏதுவானது என்றும், பருவநிலைக்கு ஏற்பவும் மற்றும் நமது அன்றாட தேவைகளுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். அதேபோன்று, எந்த தாவரம், எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு தவரத்திற்கும் தனித்தனி தேவைகள் இருக்கும். அததற்கு தேவையான ஊட்டப் பொருட்களை நாம் கொடுக்க வேண்டும். தாவரத்திற்கு தண்ணீர் ஊற்றுதல் தினமும் தண்ணீர் என்பது அவசியமானது. தண்ணீர் குடிக்காமல் மனிதர்களால் ஒரு நாள்கூட இருக்க முடியாது.அதேபோன்றுதான் தாவரத்திற்கும் தண்ணீர் அவசியம். முக்கியமாக இளஞ்செடியில் அதன் வேருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. மண்ணின் வளர்ச்சிக்கும் மற்றும் காய், பழ விதவிதமான உற்பத்திக்கும் தண்ணீர் உதவுகிறது.
நமக்குத் தேவையான செடிகளை பயிரிடுவது மட்டும் போதாது. அதனை தினமும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் ஒரு குணம் உண்டு. அதனை அறிந்துகொண்டு, அதற்கேற்ப பராமரிப்பு செய்ய வேண்டும். பூக்கள், காய்கள், பழங்கள் போன்றவை சரியான பதத்தில் வரும்போது, அதனை பறித்துவிடவும் வேண்டும்.
குறிப்பாகச் சொல்வது என்றால், பிறந்த குழந்தையைக் கவனிப்பது போன்று ஒவ்வொரு செடியையும் கவனிக்க வேண்டும். பலர் சமையலில் வீணாகும் பொருட்களை எல்லாம் செடிக்கு உரமாகப் போடுவார்கள். அது தவறு, தேவைக்கு அதிகமாக உரமும் செடிக்குத் தேவையில்லை. குப்பைகளை அகற்றுதல், கொடிகள் வளர்வதற்கு சரியான வழி ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை பார்த்து பக்குவமாக செய்ய வேண்டும்.
நீங்கள் எத்தனை அன்புடன் வளர்க்கிறீர்களோ, அத்தனை அருமையான பலன்களை செடிகளும் அள்ளிக் கொடுக்கும். வீட்டில் வளர்க்கும் காய்கறிகளை சாப்பிட்டுப் பாருங்கள், ஆரோக்கியமும் பெருகும், ஆனந்தமும் பெருகும்.