மந்திரச்சொல்
மூளையின் முக்கியமான வேலை உடலையும் மனதையும் காப்பாற்றுவதுதான். அதனால் எந்த ஒரு ஆபத்தையும் முன்கூட்டி கணித்து, நம்மைப் பாதுகாக்க முயற்சிக்கிறது.
எதிர்காலத்துக்குத் தேவையான முன்னெச்சரிக்கை என்பதற்கும், தேவையற்ற கவலைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மூளை உணர்த்துவதில்லை. அதாவது, எதிர்காலத்துக்குத் தயாராவது புத்திசாலித்தனம். நடக்காத ஒன்றுக்காக மீண்டும் மீண்டும் கவலைப்படுவது மூடத்தனம்.
நாளைக்கான திட்டம் தேவை. எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கலாம். ஆனால் நாளைய பயத்தை இன்றே அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. இன்று செய்ய வேண்டியதை இன்று செய்யுங்கள். நாளை செய்ய வேண்டியதை நாளை செய்யுங்கள்.
நாளை இன்னும் பிறக்கவில்லை என்பதால் அந்த கவலையை இன்று பிறக்க விடாதீர்கள். இதற்கு ஒரு குட்டிக் கதை.
நான்கு பேர் இண்டர்வியூ வந்தனர். அவர்கள் நால்வருக்கும் பொதுவான கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஒரு தனி அறையில் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென்று மேல்கூரை இடிந்து விழப்போகிறது. வாசல் பக்கம் தீ எரிகிறது. ஜன்னல் பக்கம் ஒரு பாம்பு நிற்கிறது. பூகம்பத்தில் திடீரென கட்டடம் ஆடத் தொடங்குகிறது. இந்த சூழலில் என்ன செய்வீர்கள்.
ஒருவர் தீயைத் தாண்டிச் செல்வேன் என்கிறார். ஒருவர் பாம்பை தீயில் தள்ளிவிட்டு ஜன்னல் வழியே வெளியேறுவேன் என்கிறார். இன்னொருவர் டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொள்வேன் என்கிறார். நான்காவது நபர் அமைதியாக, ‘என் கற்பனைய நிறுத்திக் கொல்வேன்’ என்று சொன்னார்.
இதுதான் சரியான வழி. தேவையற்ற கற்பனைகளை நிறுத்துவதுதான் நாளைய தினத்தை எதிர்கொள்வதற்கு சரியான வழி. நம் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் நிஜமாக நடப்பதற்கு முன்பே, நம் மனதில் நடந்து முடிந்துவிடுகின்றன.
நாளை அந்தப் பிரச்சினை வந்தால் என்ன செய்வது?, அப்படி நடந்தால் என்ன செய்ய முடியும். இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே இருக்கும். நிஜ வாழ்க்கையில் நாளை எனப்படும் கதவு திறக்கவே இல்லை. ஆனால், நம் கற்பனைக்குள் அந்தக் கதவுக்குப் பின்னால் ஆயிரம் பிரச்சினைகளை உருவாக்குகிறோம். கற்பனையை நிறுத்துங்கள். இன்றைய தினத்தில் வாழுங்கள். அதுவே, நாளைய திட்டம் தீட்டுவதற்கு சிறப்பான வழி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
