சைகை மொழி கத்துக்கோங்க

Image

எல்லோருக்கும் அதுவே தாய் மொழி


உலகில் பல ஆயிரம் மொழிகள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கும் குறைவான மொழிகளே, உலகில் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. ஏராளமான மொழிகள் எழுத்துகள் இல்லாமலும், அதிகம் பேசப்படாமலும் அழிந்துவருகின்றன. உலகில் பழைமையான மொழி என்ற கேள்விக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் ஒவ்வொரு நேரமும் ஒரு மொழியை சொல்லிவருகின்றனர்.
ஆனால் பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளைவிட மூத்த மொழி மனிதனின் சைகை மொழி என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. சைகையால் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துகள் தோன்றின. இன்றும் நமக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும், அந்த மொழிகளை அறியாத ஊருக்குச் சென்றால் நாம் சைகை மொழியில்தான் பேச வேண்டும்.
சைகை மொழி நமக்குள் மறைந்துகிடக்கிறது. நமது பேச்சு மற்றவர்களுக்குப் புரியாவிட்டாலோ அல்லது அவர்கள் பேசுவது நமக்குப் புரியவில்லை என்றாலோ, நம்மை அறியாமலே நமது கைகளும் கண்களும் சைகை மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடும். உலக அளவில் பொதுவான சைகை குறியீடுகள் உள்ளன. உணவு, நீர், வழிகேட்டல் போன்ற அடிப்படைகளுக்கான சைகை குறியீடுகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. அதில், பெரும்பாலானவை சைகை மொழியில் சார்ந்துபோகின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வரலாறு இருக்கும். சைகை மொழிக்கும் வரலாறும், சுவையான பின்னணியும் உண்டு.
பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முகப் பாவனைகளுடன் பேசப்படுவது சைகை மொழி ஆகும். மொழிகள் பலவற்றைப் போன்றே சைகை மொழிகளிலும் இந்திய, அமெரிக்க, பிரிட்டிஷ் சைகை மொழிகள் எனப் பல உள்ளன. அமெரிக்க சைகை மொழியில், ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துகளையும், ஒரே கையால் சைகை செய்கின்றனர். மேலும், 8,000க்கும் மேற்பட்ட கை சைகைகளையும் பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சைகை மொழியைப் பயன்படுத்துகிறார்கள். பிரிட்டிஷ் மற்றும் இந்திய சைகை மொழியை பயன்படுத்தும் மக்கள், இரு கைகளையும் பயன்படுத்துகின்றனர்.

சைகை மொழிகளுக்கும் இலக்கணங்கள் உண்டு. சரியான சைகையும், இமை மற்றும் உடல் அசைவுமே கேள்வி பதிலை புரியவைக்கின்றன. சைகை மொழியில் புருவ அசைவு முக்கியத்துவமானது. யார், என்ன, எங்கே, ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு, புருவம் கீழ்நோக்கி இறக்கப்பட வேண்டும். ஆம் அல்லது இல்லை என்பதைத் தெரிவிக்கும் சூழலில் புருவம் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்.

சைகை மொழியில் ஒவ்வொரு சைகைக்கும் 5 கூறுகள் உண்டு. அவற்றை மாற்றிக் காண்பித்தால் முழு அர்த்தமும் மாறிவிடும். ஒரே சைகையை இரு அசைவுகளாக காண்பிப்பது இரு வேறு அர்த்தங்களைக் குறிக்கும். பெண் மற்றும் பெண் தொடர்பான சைகைகள் தாடையின் அருகில் கைகளைக் கொண்டு செய்து காண்பிக்கப்படுகின்றன. ஆண் தொடர்பான சைகைளைக் குறிக்க, நெற்றியின் அருகே கைகளைக் கொண்டு சைகை செய்யப்படுகிறது.


இந்திய சைகை மொழியைக் கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாகத் தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உலகில் பல சைகை மொழிகளை, பலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனினும், சைகை மொழியின் தந்தை என்றும் காது கேளாதோரின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர், சார்லஸ் மைக்கேல் திலேப்பின் ஆவார். இவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர், பிறரின் உதடு அசைவுகளைக் கொண்டு, அவர்கள் பேசுவதைக் கணித்தனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை, பிறர் புரிந்துகொள்வதற்கென ஒரு மொழியை முதன்முதலில் உருவாக்கியவர், சார்லஸ் மைக்கேல் திலேப்பின். அதுவே, சைகை மொழி எனப்பட்டது. மூளை நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும், ‘குளோபல் அபேசியா’ போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சைகை மொழி பயன்படுகிறது.


உலக காது கேளாதோர் அமைப்பு, சுமார் 7 கோடி மக்கள் காது கேளாத தன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது. அவர்கள் சைகை மொழியில்தான் தகவல் தொடர்பு செய்கிறார்கள். அவர்கள் சைகையால்தான் பெரும்பாலான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தற்போது, சைகை மொழிக்கான பல புதிய வடிவங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பல,  தொலைக்காட்சியில், காது கேளாதோருக்கென வாசிக்கப்படும் செய்திகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்குத் துணை புரியும். உணமையைச் சொல்லப்போனால், நமக்கென பிரத்யேக சைகை குறியீடுகளை உருவாக்கி நம் பிரியமானவர்களுடன் சங்கேத பாஷையில் பேச முடியும் என்பது ஆச்சரியமான உண்மை. அதனால், எல்லோருமே சைகை மொழியை கற்றுக்கொள்வது நல்லது.

Leave a Comment