கவிஞர் கண்ணதாசனின் அரசியல் குறிப்புகள்
கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகிய இருவருக்கும் நண்பராகவும், எதிரியாகவும், நண்பராகவும் இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். அரசியல் தனக்கு சரிப்படாது என்பதை உணர்ந்ததும் முழுநேர அரசியலில் இருந்து அதிலிருந்து வெளியேறிவிட்டார் என்றாலும், அன்றாட அரசியல் அவருக்கு அத்துப்படி.
எம்.ஜி.ஆரை நீக்கியதால் கருணாநிதி பட்ட அவஸ்தைகள் பற்றி, ’நான் பார்த்த அரசியல்’ என்ற புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.
அதிலிருந்து குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் இங்கே….
குறைத்து மதிப்பிட்ட கருணாநிதி
“இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் ‘கணக்கு அனுப்ப வேண்டும்’ என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று. “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
எம்.ஜிஆர். நீக்கம்
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
1971 பொதுத் தேர்தலே சான்று. அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டுகொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

எம்.ஜி.ஆரை அரசியல்வாதியாக்கியவர்
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.
எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை.
ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான். ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். தொண்டர்கள்
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.
