என்ன செய்தார் சைதை துரைசாமி – 456
சென்னை பெருநகர வெள்ளத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதேபோன்று மீண்டும் ஒரு பேரழிவு ஏறபடக்கூடாது என்று திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி.
இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’எதிர்காலத்தில் 2015 வெள்ளம் போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்குரிய பணிகளையும் இப்போதே மேற்கொள்ள வேண்டும். அடையாற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி, அதன் முழு அகலத்திற்கு நதி ஓடுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவதுதான் தீர்வு.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி முழுமையாக மீட்க வேன்டும். இதற்காக சர்வே வரைபடங்கள் வைத்து கால்வாய்கள் அனைத்தையும் அடையாளம் கண்டு, அவற்றை செப்பனிட்டு கரைகளை கட்டி காப்பாற்ற வேன்டிய கடமையும் நமக்கு உள்ளது. இதற்காக விரிவான திட்டம் தீட்டி சென்னை மாநகரை மறுகட்டமைப்பு செய்யவேண்டியது அவசியம். – என்று மேயர் உரை நிகழ்த்தினார்.
மேயரின் உரையைக் கேட்டு எதிர்க்கட்சியினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். பேரிடர் நேரத்தில் மாநகராட்சி எத்தனை தீவிரமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டது என்பதை தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். சென்னை பெருவெள்ள நேரத்தில் அதிமுக சரிவர செயலாற்றவில்லை என்று பொய்யாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மேயர் ஆதாரபூர்வமாக விளக்கம் கொடுத்தார். அதிமுக மேல் வீசப்பட்ட்ட கறையை இந்த உரை போக்கியது. அதனாலே மேயரின் இந்தப் பேச்சு முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சென்னை பெருவெள்ளத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி எதிர்காலத்தில் பேரிடர் ஏற்படாமல் தடுப்பதற்குரிய வழிகளையும் மேயர் சுட்டிக்காட்டி இருந்தார். அதோடு சென்னை நகருக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதற்கு மனிதத் தவறு காரணம் அல்ல என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்லி இருந்தார். இதுதவிர, தமிழக அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னையை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை மிகத் தெளிவாக ஆதாரபூர்வமாக பட்டியல் போட்டு காட்டிருந்தார். மழை வெள்ள நேரத்தில் அதிமுக அரசு சரிவர இயங்கவில்லை என்று மக்களிடம் பரப்பப்பட்ட பொய் குற்றச்சாட்டை துடைப்பதற்கு சைதையின் மாமன்ற உரை பயன்பட்டது. அதனாலே ஜெயலலிதா மேயரின் உரையை மனம் திறந்து பாராட்டினார்.
முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டு வாங்குவது எத்தனை கடினம் என்று அவருடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் முக்கிய அமைச்சர் பெருமக்களுக்கும்தான் தெரியும். வியக்கவைக்கும் அளவுக்கு தனித்தன்மையை ஒருவரிடம் காண நேரிட்டால் மட்டுமே ஜெயலலிதா பாராட்டுவார். அதனால் முதல்வர் வாயால் வசிஷ்டர் பட்டம் பெற்றதுபோல் கட்சியினர் சைதையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
- நாளை பார்க்கலாம்.
