குழந்தை செல்போன் கேட்டு அடம் பிடிக்கிறதா..?

சிம்பிள் தீர்வுகள்

அடம் பிடிக்கும் குழந்தையை சமாளிப்பதற்கும், அதிகம் சாப்பிட வைக்கவும் குழந்தையின் கையில் செல்போன் கொடுத்துவிடுகிறார்கள். அது, சமர்த்தாக செல்போனில் விளையாடுகிறது. அந்த நேரத்தில் வேலைகளை முடித்துவிடுகிறார்கள், அதிகம் சாப்பிடவும் வைத்துவிடுகிறார்கள்.

குழந்தை கையில் செல்போன் கொடுப்பதும் போதைப் பொருள் கொடுப்பது போன்ற செயல்தான். இதனால் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஏற்படும் ஆறு சீரியஸ் பாதிப்புகளைப் பார்க்கலாம்.  

  1. நீண்ட நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு கண் சோர்வு, பார்வை மங்குதல், கண் உலர்வு போன்ற டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெயின் பிரச்னைகள் உண்டாகிறது.
  2. செல்போன் திரையிலிருந்து வரும் ப்ளூ லைட் குழந்தைகளின் தூக்கத்தைப் பாதிப்பதால் மூளையில் சுரக்கும் மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைகிறது. இதனால் தூக்கமின்மை, சோர்வு உருவாகின்றன.
  3. செல்போன் கேரக்டர் போன்று எல்லாமே வேகமாக நடக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பெற்றோர், நண்பர்கள் நிறைவேற்ற முடியாது என்பதால் பெற்றோரை வெறுக்கிறார்கள்.
  4. செல்போன் விளையாட்டுகள், வீடியோக்கள் மூளையில் டோபமைன் ஹார்மோனை அதிகமாக தூண்டுவதால் செல்போன் போதைக்கு அடிமையாகிறார்கள். செல்போனைப் பிடுங்கினால் அதீத கோபம் வரும், கண்டதையும் தூக்கி எறிவார்கள். சுயமாக சிந்திக்க முடியாமல் மந்தமாகிறார்கள்.
  5. ஆழ்ந்த தூக்கத்தில்தான் குழந்தைகளுக்கு குரோத் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. செல்போன் பழக்கத்தால் இந்த ஹார்மோன் சுரப்பு குறைவதால் உயரம், தசை வளர்ச்சிகள் பாதிக்கப்படலாம். உடல் பருமன் உண்டாகலாம்.
  6. செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளின் மூளையில் மன அழுத்தம் அதிகரித்து கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தி அதிகமாகலாம். இதனால் பதட்டம், கவலை, எரிச்சல் போன்ற பிரச்னைகள் குழந்தைக்கு ஏற்படலாம்.

மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போனை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. எனவே, வீட்டில் பெற்றோரும் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். குழந்தையின் முன்பு செல்போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

குழந்தையின் முன்பு அமர்ந்து ரீல்ஸ் பார்ப்பது, கேம் ஆடுவது வேண்டாம். குழந்தை கேட்கும்போது டம்மி செல்போன் கொடுங்கள். நிஜ செல்போன் என்றால் ஒரே ஒரு ஸ்க்ரீன் மட்டும் ஓப்பன் ஆவது போன்று ஸ்க்ரீன் பின்னிங் செட்டிங் செய்து கொடுங்கள். மீண்டும் மீண்டும் அதே ஸ்க்ரீன் வருவதை குழந்தை விரும்பாது. செல்போன் கேட்டு அடம் பிடிக்காது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment