நினைவு நாளில் ஒரு வரலாறு
எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில், பொதுச்செயலாளர் தேர்வு விதி புரட்சிகரமானது. தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விதி கொண்டுவந்ததற்குப் பின்னே ஒரு மிகப்பெரும் அரசியல் இருக்கிறது.
அதாவது, அ.இ.அ.தி.மு.க. பைலா விதி 43 திருத்தம் படி, ’கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும் திருத்தவும் நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆனால், இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக பொதுச்செயலாளரை கழக அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல. மேற்கூறிய கழக சட்ட விதிகளின்படி எல்லா மாநிலங்களிலும் உள்ள சிற்றூர் முதல் மாநகராட்சி வரை இயக்கத்தில் அடிப்படை உறுப்பினராகப் பதிவு செய்துகொண்ட தொண்டர்களே வாக்களித்து பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.’’ என்று கூறுகிறது.
அதாவது, பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் விதியை மட்டும் எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற இயலாது என்றும் மாற்றுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் எம்.ஜி.ஆர். ஏன் வகுத்தார் என்று தெரியுமா..?
தி.மு.க.வில் இருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கியதும் அவருடன் எந்த அமைச்சரும் மாவட்டச் செயலாளர்களும் வந்து சேரவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு தலைவராக வரத் தொடங்கினார்கள். தன்னை நோக்கி வரும் தலைவர்கள் உண்மையிலே கருணாநிதியை எதிர்த்து வருகிறார்களா அல்லது தன்னுடன் இருந்துகொண்டே தன்னை கவிழ்ப்பதற்கு கருணாநிதி அனுப்பி வைக்கிறாரா என்ற சந்தேகம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. மேலும், அ.தி.மு.க. நிர்வாகிகளை கருணாநிதி விலைக்கு வாங்க வாய்ப்பு இருப்பதாக நினைத்தார்.
அ.தி.மு.க.வில் இருக்கும் கருணாநிதியின் ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆரின் பொதுச்செயலாளர் பதவியை பறித்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் இருந்தார். அதனாலே தொண்டர்களிடம் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் பொறுப்பை வழங்கினார். தன்னை தொண்டர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடையும் வரை தொண்டர்களும் மக்களும் அவரை கைவிடவே இல்லை.