என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 51
1972, அக்டோபர் 1. அகில உலக எம்.ஜி.ஆர். மன்றங்களின் தலைமை நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் சென்னை, சத்யா திருமண மண்டபத்தில் சென்னை – செங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் வந்து குவியத் தொடங்கினார்கள். எல்லோரையும் வரவேற்கிறார் சைதை துரைசாமி.
இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் தகவலை அறிந்துகொண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி, பாண்டிச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயர் மூலம் புரட்சித்தலைவரிடம், ’இனி நேர்மையான ஆட்சியும், ஜனநாயக வழியில் கட்சியும் நடத்துகிறேன்’ என்று சமாதானம் பேசிவிட்டார். எம்.ஜி.ஆரும் இதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், இப்படி ஒரு சந்திப்பு நடந்ததும், எம்.ஜி.ஆர். சமாதானம் ஆனதும் அறியாத ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். மேடையில் ஏறிய புரட்சித்தலைவர் அவருக்கே உரிய புன்முறுவலுடன், ‘’நீங்கள் மிகப் பெரிய ஆவலோடு வந்திருக்கிறீர்கள்’ என்றதுமே நிர்வாகிகள் விசில் எழுப்பி சந்தோஷத்தைத் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து பேசிய எம்.ஜி.ஆர்., ‘பேரறிஞர் அணணா கண்ட இருவர்ணக் கொடி தான் நமது அடையாளம். தனித்தக் கொடி அடையாளம் நமக்குத் தேவை இல்லை. ஒரு தாய் எத்தனைக் குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சேய் ஒருபோதும் தாயாக முடியாது” என்றவர் அடுத்து, ‘தாய் கழகமா? சேய் மன்றமா? என்று என்னைக் கேட்டால்” என்று எம்.ஜி.ஆர். சில விநாடிகள் பேச்சை நிறுத்தவே, நிர்வாகிகளும் அரங்க மேடையில் இருந்தவர்களும், ‘சேய் மன்றம்… சேய் மன்றம்” என்று குரல் கொடுத்தனர்.
ஆனால், புரட்சித் தலைவர் நிர்வாகிகளின் குரலை கண்டுகொள்ளாமல், ‘’நான் தாய்க் கழகம் என்று தான் சொல்லுவேன். தனித்த கொடி அடையாளம் வேண்டாம்” என்று அதிரடியாக அறிவிக்கிறார். அத்தனை நிர்வாகிகளும் இடி விழுந்தது போல் அதிர்ந்து நின்றார்கள்.
- நாளை பார்க்கலாம்.