மந்திரச்சொல்
ஒருவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்பதை அவர்களுடைய இயல்பு தீர்மானிப்பதில்லை; அதை யார், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதுதான் தீர்மானிக்கிறது.
புல்வெளியில் வாழும் மான் உயிருக்கு புலியால் ஆபத்து வருகிறது. புலியின் காலடிச் சத்தம் கேட்டாலே மான் நடுங்கும். புலியின் கண்களில் அது ஒரு கொடூரமான அரக்கனைப் பார்க்கிறது. அதனால் மான்கள் எழுதும் கதையில்,
புலி ஒரு கொடிய தீய சக்தி.
அதேநேரம், புற்களைக் காப்பாற்றும் கடவுளாக புலி இருக்கிறது. ஏனென்றால் புலி ஒருபோதும் புல்லைத் தின்பதில்லை. புற்களைத் தின்னும் மான்களை வேட்டையாடி புற்களைப் பாதுகாக்கிறது. அதனால் புற்களின் கதையில் அந்த புலி ஒரு கடவுளாக இருக்கிறது.
அதேபோல், மனிதர்கள் அனைவரும் அவரவர் கதையில் ஹீரோவாக இருக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் தவறு செய்வதாக நினைப்பதேயில்லை.
சூழ்நிலையால் திருடுகிறேன் என்று ஒரு திருடன் சொல்கிறார். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கண்டிக்கிறோம் என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். குடும்ப கெளரவத்தைக் காப்பாற்ற ஆணவக் கொலை செய்தேன் என்கிறார் ஒரு தந்தை.
என் நிறுவனத்தைக் காப்பாற்ற 50 பேரை வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார் முதலாளி. பொதுமக்களைக் காப்பதற்காக ரோட்டில் அத்துமீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல் அதிகாரி சொல்கிறார்.
இப்படி, ஒவ்வொருவரும் அவரவர் கதையில் நியாயமாக இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு சரி என்று நம்புகிறார்கள். அதாவது, மனித மனம் உண்மையப் பார்ப்பதில்லை. தனக்குத் தேவையானதைப் பார்க்கிறது.
ஒருவர் வெற்றி பெற்றால், “என் திறமையால் வென்றேன்” என்கிறார். அவரே தோல்வியடைந்தால், ‘என் வெற்றியைத் தடுக்க சதி நடந்திருக்கிறது’ என்கிறார். அவர் தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால், தோல்வி அடுத்தவரால் மட்டுமே வந்தது என்று நம்புகிறார். இதுதான் மனிதர்களின் குணம்.
நான் குடும்பத்திற்காக இரவு பகலாக உழைக்கிறேன். ஆனால் என் மனைவி என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று கணவர் வருந்துகிறார். அதேநேரம் மனைவி, ‘எனக்காக கணவர் ஒரு மணி நேரம்கூட ஒதுக்குவதே இல்லை. எப்போது பார்த்தாலும் ஆபிஸே கதி என்று கிடக்கிறார். அவருக்கு எதற்கு திருமணம்?’ என்று மனைவி கேட்கிறார்.
கணவனின் கதையில் அவர் தியாகி. மனைவியின் கதையில் அவர் பொறுப்பில்லாதவர். இங்கு இருவருமே தங்கள் இடத்தில் சரி. பிரச்சினை என்னவென்றால், நாம் எப்போதும் நம் கதையை மட்டுமே கேட்கிறோம். மற்றவரின் கதையை கேட்க மறுக்கிறோம்.
காலம் மாறும்போது சில உண்மைகள் மாறுகிறது. ஆசிரியர் கண்டிப்பானவர், தந்தை தண்டிக்கிறார் என்றெல்லாம் வருத்தப்படும் பிள்ளை, பெரியவராக வளர்ந்ததும், ‘என்னுடைய வாழ்க்கையை ஆசிரியர் செதுக்கினார், அப்பா எனக்கு நல்ல குணங்களை கற்றுக்கொடுத்தார்’ என்று பெருமைப்படுகிறது. இப்போது அவரது பார்வை மாறிவிட்டது.
சர்க்கரை இனிப்பாக இருக்கும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு கேடு. கசப்பான மருந்து சுவையாக இருக்காது. ஆனால் உயிரைக் காப்பாற்றும். அதேபோல வாழ்க்கையிலும், உங்களுக்கு மகிழ்ச்சி தருபவர் நல்லவர் என்று அவசியமில்லை.
உங்களுக்கு வலி தருபவர் கெட்டவர் என்றும் அவசியமில்லை.
மான் புல்லைத் தின்பது அதன் உணவுக்காக. புலி மானைப் பிடிப்பது அதன் உணவுக்காக. எனவே இங்கு நல்லவர், கெட்டவர் என்று யாரும் இல்லை. அவரவர் போராட்டம் அவரவருக்கு நன்மைக்கானது.
அதேநேரம், தவறை நியாயப்படுத்தக்கூடாது. எந்தவொரு கொடுமையான மனிதரும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடன் சண்டை போட்ட மனைவியை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர் எதற்கு சண்டை போட்டார், அவரது நியாயம் என்னவாக இருக்கும் என்று அவர் பக்கத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். அவரது பயம் என்ன? அவரது பிரச்னை என்ன? அவரது எதிர்பார்ப்பு என்ன என்றெல்லாம் அவருடைய கதையைப் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டால், அவர் மீதான வெறுப்பு குறைந்துவிடும். தங்கள் தவறு புரிந்துவிடும்.
எல்லோருடைய கதையிலும் நாம் ஹீரோவாக இருக்க முயற்சிப்பது தேவையற்ற சுமை. ஆனால், நான் மட்டுமே சரி என்று நினைக்காமல், எனக்குத் தெரியாத இன்னொரு கதை இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வதுதான் மனிதம்.
எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
