தெளிவு இல்லாதவர் கையில் கிடைத்தால், அவருக்கு வைரமும் ஒரு கண்ணாடிக் கல்.

மந்திரச்சொல்

ஒருவரிடம் இருக்கும் திறமை எல்லோருடைய கண்ணுக்கும் தெரிவதில்லை. ஆனால் அதை அடையாளம் காணும் ஒருவர் கிடைத்தால், அந்த மனிதரின் வாழ்க்கையே மாறிவிடும்.

வைரம் போன்று உலகத்தில் விலைமதிப்பற்ற பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் மதிப்பை உணரக்கூடிய அறிவும் பக்குவமும் எல்லோரிடமும் இருப்பதில்லை. வைரத்தின் அருமை அறிந்த ஒருவருக்கு மட்டுமே அதன் உண்மையான மதிப்பு புரியும்.

தங்கத்தைப் பார்க்கும் குழந்தைக்கு அது ஓர் உலோகம். அதன் மதிப்பை அறிந்தவருக்கு அது செல்வம். ஒரு புத்தகத்தைப் பார்க்கும் ஒருவருக்கு அது காகிதங்களின் தொகுப்பு. அறிவைத் தேடுபவருக்கு அது ஒரு வாழ்க்கையின் வழிகாட்டி. ஒரு நல்ல மனிதரைப் பார்க்கும் ஒருவருக்கு அவர் சாதாரண மனிதர். அவருடைய குணத்தையும் அறிவையும் புரிந்துகொள்பவருக்கு அவர் ஓர் அரிய பொக்கிஷம்.

வைரம் தன்னை வைரம் என்று நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதன் தரம் அதை அடையாளம் காட்டிவிடும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் மாயா ஏஞ்சலோ. அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், சமூக உரிமைப் போராளி.

சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளான அவர், அதனால் ஏற்பட்ட மன அதிர்ச்சியில் சுமார் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார். பலர் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர். ஆனால் அவருடைய குடும்பத்தில் திருமதி ஃப்ளவர்ஸ் என்ற கல்வியறிவு மிக்க பெண்மணி அவருக்குள் இருந்த திறமையை அடையாளம் கண்டார்.

அவரிடம் பேசி, வாசிப்பின் மீதும் மொழியின் மீதும் ஆர்வத்தை வளர்த்தார். பின்னர் அதே சிறுமி உலகம் போற்றும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் வளர்ந்தார். அவருடைய I Know Why the Caged Bird Sings என்ற சுயசரிதை உலகப் புகழ்பெற்ற நூலானது.

எனவே, வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெறுவதைவிட, நமக்குக் கிடைத்திருப்பவற்றின் மதிப்பை உணர்வது முக்கியம். தோல்வியில் ஒருவர் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். இன்னொருவர் தனது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக நினைக்கலாம்.

ஒருவருடைய மனதில் பொறாமை அதிகமாக இருந்தால், மற்றவர்களின் வளர்ச்சியைக்கூட அவரால் பாராட்ட முடியாது. தாழ்வு மனப்பான்மை இருந்தால், மற்றவர்களின் திறமையை ஏற்றுக்கொள்ள முடியாது. மனதில் தெளிவு இல்லாதபோது, கண்முன்னே இருக்கும் உயர்ந்த விஷயங்களைக்கூட நம்மால் அடையாளம் காண முடியாது.

அதேநேரம், ஒருவர் உங்களுடைய உழைப்பைப் பாராட்டவில்லை என்பதால் உங்கள் உழைப்பு வீணாகிவிடாது. ஒருவர் உங்களுடைய அன்பைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்காக உங்கள் அன்பு மதிப்பற்றதாகிவிடாது. ஒருவர் உங்களுடைய திறமையை அடையாளம் காணவில்லை என்பதற்காக உங்களிடம் திறமை இல்லை என்று அர்த்தமல்ல.

உலகம் உங்களை எப்படி மதிப்பிடுகிறது என்பதைவிட, உங்களுடைய உண்மையான மதிப்பு என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பதுதான் முக்கியம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment