பயிற்சியில் உள்ளது தீர்வு.
கை, கால் விளங்காமல் போனால் அவ்வளவு தானா? ஒண்ணுமே செய்ய முடியாதா என்று தங்கள் வாழ்க்கையே பறிபோனதாக நினைத்து அஞ்சுகிறார்கள். இவர்கள் நடிகை ஷெரான் ஸ்டோன் வாழ்க்கையைப் படித்தால், இதில் அச்சப்பட அவசியம் இல்லை என்கிறார் மருத்துவர் ஹரிகரன்.
காரணம் என்ன?
ஸ்ட்ரோக் என்பது, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் டக்கென அடைத்துக் கொள்வது. எந்த மூளைப்பகுதி பாதித்திருக்கிறதோ, அதற்குண்டான உடல் பாதிப்பு இருக்கும். சிலருக்கு ஒரு கால் மட்டும் செயல்படாது, சிலருக்கு இடது பக்க உடம்பே செயல்படாது. சிலருக்குப் பேச்சு மட்டும் போகும். பிரஷர் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்கத் தவறுவதுதான் 75% ஸ்ட்ரோக்குகளுக்குக் காரணம்.
மேலும் கிராமப்பகுதிகளில் தான் இது அதிகம். பிரஷர் இருப்பதே தெரியாமல் இருப்பது, அதைப்பற்றிய புரிதல் இல்லாமை, சரியாக மருந்து எடுக்காமை ஆகியவற்றால் இது நேர்கிறது. படுபயங்கர தலைவலி அல்லது கைகால் வலுவிழந்து போகுதல் போன்ற அறிகுறிகள் வந்த நாலரை மணி நேரத்தில் (Golden Hour) மருத்துவமனை வந்து விட்டால், உடலில் எந்தச் செயல் குறைபாடும் இல்லாமல் தப்பித்து விடலாம்.
ஆனால் 40% நபர்கள், லேட்டாக மருத்துவமனைக்கு வந்ததால் ஊனமுறுகிறார்கள். ஸ்ட்ரோக் வந்த 24-48 மணி நேரத்திற்குள் செயல்படாத உடல் பாகங்களுக்குப் பயிற்சிகள் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் பக்கவாதம் சரியாகி விடும். இன்றும் கூட சாலையில் கையைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லாரும் கைகால்கள் மறுபடி செயல்படச் சரியான பயிற்சி எடுக்காதவர்களே.
புதிய வயரிங் சிஸ்டம்
மூளைக்கு Neuro Plasticity என்ற விஷயம் உள்ளது. அதாவது ஒயரிங் பாதிக்கப்பட்டதால் தானே பக்கவாதம் வந்தது? பயிற்சி செய்தால் புது வயரிங் ஏற்பட்டு, பழைய மாதிரி நார்மலாகி விடலாம். என் கிளினிக்கிற்கு வந்த சிலரிடம் பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். 2-3 வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்தது, இன்னும் சரியாகவில்லை என்பார்கள்.
ஒழுங்காகப் பயிற்சிகள் செய்திருந்தால் ஆறு மாதத்திலேயே நார்மலாகி இருக்க முடியும். அதை விட்டு விட்டு 2-3 வருடம் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், எப்படி சரியாகும்? “பிசியோதெரபி செய்தீர்களா?” “ஆமா சார். ஒரு மாசம் வீட்டுக்கு வந்தாரு, மசாஜ் எல்லாம் தந்தாரு, சரியாகலன்னு நிறுத்திட்டோம்.” என்கிறார்கள்.
பிசியோதெரபி என்றால் மசாஜ் செய்வார்கள் என்றுதான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிசியோதெரபி என்றால் உங்களை வேலை செய்ய வைப்பது. விளங்காத காலை வைத்து நடக்கப் பழகுவது, செயலற்ற கைகளை நீங்களே மடக்க முயற்சிப்பது, அவ்வளவே. அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு ‘Coach’ மட்டுமே. மாதக்கணக்கில் நீங்கள்தான் பயிற்சி செய்ய வேண்டும்.
நடிகை ஷரோன் ஸ்டோன்
பேசிக் இன்ஸ்டண்ட் படத்தில் நடித்த ஷரோன் ஸ்டோன் (Sharon Stone), அவரது 42-வது வயதில் ஸ்ட்ரோக் வந்து, 1% தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் இருந்தவர். அதிலிருந்து மீண்டு, ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போனாலும் கடினப் பயிற்சி செய்து, முற்றிலும் குணமடைந்து, அடுத்த சில வருடங்களில் மீண்டும் சினிமாவில் சாதித்தார். வெறும் 1% வாய்ப்புள்ள நபர் மீண்டு வர முடிகிறது என்றால் நம்மாலும் முடியும்.
ஸ்ட்ரோக் வந்து பல வருடங்கள் ஆனாலும் சரி, இப்போது நினைத்தாலும் பயிற்சி செய்து பழைய மாதிரி நடக்க முடியும். முடியாது என்று நினைத்தால், முடியாது தான். சாலையில் யாராவது இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்தால், அவர்களுக்குச் சரியான பிசியோதெரபி பற்றி எடுத்துச் சொல்லுங்கள். ‘இனிமேல் சரியாகாது’ என்ற எண்ணத்தை மாற்ற உதவுங்கள். நம்பிக்கை பாதி மருந்து, பயிற்சி மீதி மருந்து!
- Dr. V. Hariharan, MD, (PhD) Diet Consultant & Metabolic Scientist
