மந்திரச்சொல்
வாழ்க்கையில் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பது தர்மசஙக்டத்தை உருவாக்குகிறது. எல்லோரையும் திருப்திபடுத்த யாராலும் முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்வதுதான், தனித்துவத்தின் தொடக்கம்.
இல்லை என்றாலும் முடியாது என்றாலும் வெளிப்படையாகச் சொல்வதற்கு நிறையவே தயங்குகிறார்கள். தவறாக நினைப்பார்கள், சுயநலவாதி என்று குற்றம் சாட்டுவார்கள், உறவு பாதிக்கும் என்றெல்லாம் பயப்படுகிறார்கள். அதனால் விருப்பமில்லாத விஷயங்களுக்கும் சரி என்று சொல்லிவிட்டு, பின்னர் மனதுக்குள் வருந்துகிறார்கள், கோபப்படுகிறார்கள்.
மற்றவர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடப்பது, தனக்கான எல்லைகளை பலவீனப்படுத்துகிறது. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக, நாமே நம்மை மதிக்க முடியாமல் போகிறது. எனவே, இல்லை என்பதை உறுதியாகச் சொல்லுங்கள். நேரமில்லை என்றால் இல்லை. விருப்பமில்லை என்றால் இல்லை. மதிப்புகளுக்கு எதிரானது என்றால் இல்லை. மனரீதியாக சோர்வடையச் செய்யும் என்றால் இல்லை. இதற்காக யாருக்கும் நீண்ட விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அதிகப்படியான விளக்கம் பல நேரங்களில் நம் முடிவை நாமே சந்தேகப்பட வைத்துவிடும்.
ஸ்டீவ் ஜாப்ஸ் தனது தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கொள்கையை வலியுறுத்தினார். எதைச் செய்வது என்பதைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, எதைச் செய்யாமல் இருப்பது என்பதை தீர்மானிப்பதும் முக்கியம் என்றார். அதனால் ஒவ்வொரு வாய்ப்புக்கும் ஆம் சொல்வது வளர்ச்சி அல்ல. இல்லை என்று சொன்ன பிறகு குற்ற உணர்வு வந்தால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எல்லையை மதிக்காத ஒருவரை மகிழ்விப்பதற்காக, உங்கள் மன அமைதியை இழக்க வேண்டியதில்லை.
இல்லை என்பது எதிர்ப்பின் வார்த்தை அல்ல. அது நம்முடைய எல்லையை அறிவிக்கும் வார்த்தை. நடைமுறையில் நீண்ட விளக்கங்களுக்குப் பதிலாக சில எளிய வார்த்தைகள் போதும். மன்னிக்கவும், என்னால் முடியாது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இது எனக்கு வசதியாக இல்லை. இந்தப் பொறுப்பை என்னால் ஏற்க முடியாது. நான் முடிவு செய்துவிட்டேன். இதில் நான் ஈடுபட விரும்பவில்லை. தயவுசெய்து என் முடிவை மதியுங்கள் என்று சுருக்கமாக உறுதியாகச் சொல்லுங்கள்.
யாராவது மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால், அவர்களுக்காக புதிய காரணங்களை உருவாக்க வேண்டியதில்லை. நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என் முடிவு மாறாது என்பதை அமைதியாகச் சொல்லுங்கள். இதுதான் உறுதியான எல்லை. சில நேரங்களில் வாழ்க்கையை மாற்றுவது, ‘ஆம்’ அல்ல. உறுதியான “இல்லை” என்பதுதான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
