ஞானகுரு பதில்கள்
ஆரோக்கிய உடல், அமைதியான மனம், போதிய பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைக்க வழி காட்டுபவர் ஞானகுரு. வாசகர்கள் கேள்விக்கு அவரது பதில்கள் இங்கே….
கேள்வி : திருமணத்திற்கு பெண் அமையவே இல்லை, முரட்டு சிங்கிளாகவே என் வாழ்க்கை முடிந்துவிடுமா..?
- பி.ராஜேஷ்குமார், மயிலம்.
ஞானகுரு :
பெற்றோர் அல்லது உறவினர் கையில் பெண் பார்க்கும் பொறுப்பைக் கொடுக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த பெண்ணைத் தேர்வு செய்யுங்கள். வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தால், நேரடியாக அவரிடம் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். அவர் ஏற்றுக்கொண்டால் நல்லது, இல்லையென்றால் அடுத்து ஒரு விருப்பமான பெண்ணைத் தேடுங்கள்.
நிராகரிப்புகளுக்கு வருத்தம் வேண்டாம். அதேநேரம் என்ன காரணத்திற்காக நிராகரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த குறையை சீர்செய்துகொள்ளுங்கள். நிராகரிப்புகளைக் கண்டு மனம் தளராமல் முயற்சி செய்பவர் நிச்சயம் சரியான பெண்ணைத் தேர்வு செய்துவிடுவார்.
கேள்வி : மனைவி என்றாலே சண்டை போடுவார்களா..? திருமணம் முடிக்க அச்சமாக இருக்கிறது..?
- என்.பரமசிவம், திருவிடந்தை.
ஞானகுரு :
ஒவ்வொரு மனிதரும் தனி உலகத்தில் வாழ்கிறார்கள். அவர் தனியாக இருக்கும்போது சண்டை வருவதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டாவது நபர் நுழைந்துவிட்டால் கருத்துவேறுபாடு ஏற்படுவதும் முரண்படுவதும் இயல்பான ஒன்று.
திருமணத்தில் இன்னொரு நபருக்காக தங்கள் தனிப்பட்ட ஆசை, கருத்து, பழக்கம், உணர்வுகளை மாற்றிக்கொள்வது அல்லது விட்டுக்கொடுக்கும் சூழல் உருவாகிறது. அதோடு அன்பு, பணம், நேரம், கவனம், பாதுகாப்பு, அங்கீகாரம் போன்றவற்றில் சந்தேகம் வரும்போது சண்டை போடுகிறார்கள்.
உண்மை என்னவென்றால் சண்டை போடுவது நல்லது. அன்பு, பாசம், காதல் இருக்கும் நபர்களே சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில்தான் ஒருவர் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார், எல்லைக்கோடு என்ன என்பது போன்ற பல விஷயங்களைக் கண்டறிய முடியும்.
சண்டை போடாத தம்பதி என்றால், அவர்களுக்குள் உறவு சரியில்லை என்பதே அர்த்தம். ஒருவரையொருவர் கண்டுகொள்ளாமல் ஒரே வீட்டில் இருவரும் கடமைக்காக வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அதனால் சண்டை போடுவது நல்லது என்கிறது உளவியல்.
