மனித உறவுகளில் மிகப்பெரிய உளவியல் உண்மை இருக்கிறது. ஒருவர் கொடுத்த பரிசு, பாராட்டு, உதவி, ஊக்கத்தை மறந்துவிடுவார்கள். ஆனால், பிறர் முன்பு அவமானப்படுத்தியதை ஒருபோதும் மறப்பதில்லை.
எனவே, ஒருவரை மதிப்பதற்கும், அவமானப்படுத்துவதற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவமானம் சுயமதிப்புக்கு நெருக்கமானது. பிறர் முன்னிலையில் அவமானப்படுத்துவது கோபமாக மாறலாம். பழி வாங்கும் உணர்வாக மாறலாம். மோசமான எதிரியை உருவாக்கலாம்.
தவறு செய்த பணியாளரை தனியாக அழைத்து கண்டிப்பதற்குப் பதிலாக, அனைவரது முன்னிலையிலும் கேலி செய்து அவமானப்படுத்துகிறார் என்றால், அப்போதைக்கு அவர் அமைதியாக இருக்கலாம். தவறுக்கு மன்னிப்பு கேட்கலாம். ஆனால், அதன்பிறகு ஒருபோதும் விசுவாசமாகவும் மதிப்புடனும் மேலதிகாரியை அணுக மாட்டார்.
கருத்து வேறுபாடு தவறில்லை. நம் கருத்தை ஏற்கவில்லை என்பதற்காக முட்டாள் என்று சிறுமைப்படுத்துவது மனக்கசப்பை உருவாக்கிவிடும். அதிகாரத்தால் ஒருவருடைய வாயை மூடிவிடலாம். ஆனால், அவர் மனதில் ஏற்படுத்திய காயத்தை அதிகாரத்தால் அழித்துவிட முடியாது.
அதேநேரம், நம் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவரிடம், ‘என் கருத்தை ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்’ எனும்போது, எதிரியும் அமைதியாகிறார். பழி வாங்கும் எண்ணத்தைக் கைவிடுகிறார். ஏனென்றால், அவரது சுயமரியாதை காப்பாற்றப்படுகிறது.
லிங்கன் வழக்கறிஞராக இருந்த காலத்தில், எட்வின் ஸ்டான்டன் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞர் அவரை இழிவாகப் பேசினார், அவருடைய தோற்றத்தையும் திறமையையும் கேலி செய்தார். ஆனாலும், லிங்கன் அமெரிக்க அதிபரானபோது, அதே ஸ்டான்டனைத் தனது அரசின் போர்த் துறைச் செயலராக நியமித்தார்.
லிங்கன் உள்நாட்டுப் போரின் மிகக் கடினமான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்த வேண்டியிருந்தது. அத்தகைய சூழலில், ஸ்டான்டனின் நிர்வாகத் திறன் நாட்டுக்குத் தேவை என்பதை அவர் உணர்ந்தார். தனிப்பட்ட முறையில் தன்னை மதிக்காத ஒருவரின் திறமையைக்கூட நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தத் தயங்கவில்லை. பின்னாளில் ஸ்டான்டன், லிங்கனின் அரசில் முக்கியப் பங்காற்றினார்.
லிங்கன் அவமானப்படுத்தப்பட்டதை மறந்துவிட்டார் என்பதல்ல. தன்னை இழிவுபடுத்தியவர் என்பதற்காக ஒருவரின் திறமையை நிராகரிக்கவில்லை. இதுவே உண்மையான மனவலிமை.
குடும்பத்தில் அன்பு இருக்கிறது என்பதற்காக எந்த வார்த்தையையும் பேசிவிடலாம் என்று நினைக்காதீர்கள். அன்பான உறவுகளில்தான் வார்த்தைகளின் தாக்கம் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அவர்களை எப்படியும் நடத்தலாம் என்பது தவறு. அவர்கள் நமக்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே அவர்களின் மனதை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும்.
யாரையும் எதிரியாக்காதீர்கள் என்பதற்காக, அவமானப்படுத்தும் நபர்களை சகித்துக்கொள்ள வேண்டியதில்லை. காயப்படுத்துபவர்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டியதில்லை. அவசியமான இடங்களில் உறுதியான எல்லைகளை அமைக்க வேண்டும். தவறான நடத்தையைத் தெளிவாக எதிர்க்க வேண்டும். அதற்காக அவரை இழிவுபடுத்தவோ, பழிவாங்கத் திட்டமிடவோ வேண்டியதில்லை.
ஒருவர் மீது கோபம் வரும்போது, அவரை வார்த்தைகளால் காயப்படுத்துவது எளிது. அந்த நேரத்தில் நமது கோபம் நியாயமானதாகவே தோன்றலாம். ஒருவரை அவமானப்படுத்தும்போது, அந்தக் கணத்தில் நாம் உயர்ந்துவிட்டதாக நினைக்கலாம். ஆனால், அவருடைய மனதில் நாம் ஏற்படுத்திய காயம் நம்முடைய உறவை பலவீனப்படுத்திவிடலாம். எதிரியை உருவாக்கிவிடலாம்.
எனவே, மனிதர்களின் மனதில் அன்பையும் நம்பிக்கையை விதையுங்கள். அவமானம், பகைமையை விட்டுத்தள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் சம்பாதிக்கும் மிகப்பெரிய சொத்து பணம், பதவி அல்ல. உங்களை நினைக்கும்போது மற்றவர்களின் மனதில் எழும் மரியாதைதான்.
- எஸ்.கே.முருகன்
