கவித்துவம்
சின்ன சின்ன வார்த்தைகளால் நெய்யப்படும் கவிதை எத்தனையோ மனிதர்களின் உயிரை உரசிவிடுகிறது. ஒரு கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. ஒரு கவிதை அழ வைக்கிறது. ஒரு கவிதை சிந்திக்க வைக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் செல்லும் குட்டிக் குட்டி கவிதைகளை படித்துப் பாருங்கள். இதயம் இனிக்கும்.
பசி
தேவை அதிகமில்லை
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்தி கீழே தள்ளியது,
இன்னும் சில காக்கைகள் வந்தன
தின்றது போக மிச்சம் வைத்துவிட்டு பறந்தன.
பின் மைனாக்கள் வந்தன
அவையும் தின்றது போக
மிச்சம் வைத்துவிட்டு பறந்தன.
பின் கற்றாழை குருவிகள் வந்தன
அவையும் புசித்தது போக
பின் மிச்சம் வைத்துவிட்டு பறந்தன
பின் சிட்டுக்குருவிகள் வந்தன
அவையும் எடுத்து போக
மிச்சம் வைத்துவிட்டு பறந்தன
பின் வண்டுகள் வந்தன
அவையும் தின்றது போக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன,
இப்போது சாரை சாரையாக
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்துக்கொண்டு கடக்கின்றன.
மனிதனுக்கு தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது
எண்ணிலா உயிர்க்கு,
இத்தனை எடுத்தது போக
இன்னமும் மிச்சமிருக்கிறது
பப்பாளிப்பழம்
- சௌமி
பாச வலை
நம்மிடம்
நல்ல விதமாக பழகுபவர்களிடம்
நம்மால் நல்லவிதமாக
பழக முடிவதில்லை.
நாம் நல்ல விதமாக பழகுபவர்கள்
ஏனோ நம்மிடம்
நல்ல விதமாக பழகுவதில்லை.
காலம் அதன் மொழியில்
என்னதான் சொல்ல முயற்சிக்கிறதோ,
இன்றுவரை விளங்கவில்லை.
– இளங்கோ பாரதி
