பைத்தியக்கார தத்துவஞானி நீட்சே
பைத்தியக்கார தத்துவஞானி என்றே ஜெர்மனைச் சேர்ந்த தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவை (Friedrich Nietzsche) குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் மனிதர்கள் மீதும் மனிதம் மீதும் திணிக்கப்பட்டிருந்த அத்தனை கருத்துக்களையும் தகர்த்தெறிந்து, ஆதிமனிதராக மாறுவதற்கு வழி காட்டினார். உலகில் நடப்பவைகளெல்லாம் அதிமனிதன் வரவுக்காக என்கிறார் நீட்சே.
தத்துவ அறிஞர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் பிரெட்ரிக் நீட்சே, 1844-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். இலக்கியம், மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். பண்பாட்டு விமர்சனம், வரலாறு குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் கவிதை, இசை போன்றவற்றிலும் நாட்டம் கொண்டவர்.
நீட்சே சிறுவனாய் இருந்தபோதே தந்தையை பறிகொடுத்தார் .நீட்சேவின் தாய் அவரை பாதிரியாராக்குவதற்கு விரும்பினார். ஆனால், கல்வியில் சிறந்து விளங்கிய நீட்சேவுக்கு தத்துவவியல் மீது ஆர்வம் அதிகம். எனவே அதில் மூழ்கினார்.
இயற்கையின் விதிகளைத் தவிர்த்து கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாதவர் நீட்சே. சூரியன் மேற்கில் உதிக்கட்டும் நான் ஆலயத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறேன் என்றார்.
நீட்சே மதங்களையும் கடவுளையும் ஒருசேர எதிர்த்து நின்றார். அவர், ’’வாழ்க்கையை நீ மட்டும் தனியே எதிர்கொள்ளப் போவதில்லை கடவுள் இருக்கிறார் என்கிறது மதம். இது, மனிதனுக்கு வசதியாகப் போய்விட்டது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று பாரத்தை இறக்கி வைக்க முடிகிறது. இதற்காகவே மனிதனுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.
விதிப்படிதான் நடக்குமென்றால் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்க முடிந்திருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அறிவியல் உண்மைகளை முனை மழுங்கச் செய்திருப்பதும் மதம் தான். இன்றும் ஜோதிடத்தில் சூரியனை கோள் என்கிறார்கள்.
கிறிஸ்துவுக்கு முன்னூறு ஆண்டுகள் முன்பே அரிஸ்டார்கஸ் என்ற அறிஞர் சூரியனை மையப்படுத்தியே பூமி உட்பட கோள்கள் சுழலுகின்றன என்ற கோட்பாட்டை வெளியிட்டார். அதை திருச்சபை ஏற்றுக் கொள்வதற்கு எத்தனை நூற்றாண்டுகளானது தெரியுமா? கடவுள் ஆறு நாட்கள் உலகைப் படைத்தார் ஏழாம் நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார் என்றால் அதற்கு பிறகு என்ன செய்தார்..?
உலகத்தைப் பேணிக் காத்தார் என்கிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள். அதுசரி, உலகைப் படைப்பதற்கு முன்பு கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?. கடவுள் தனிமையை வெறுத்தார் என்றால் ஒரு பெண்ணைப் படைத்திருக்கலாம். ஏதோ வீட்டுக் கொல்லையில் கத்திரிக்காய் விதைப்பதை போல உலகைப் படைத்தார் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
ஒன்றுமில்லாததிலிருந்து உலகம் வந்தது. பெரு வெடிப்புக்குப் (Big bang) பிறகுதான் காலமே தோன்றி இருக்க வேண்டும். இழப்பதோ அடைவதோ அல்ல காலம் ஒன்றிலிருந்து மேலான மற்றொன்றுக்கு கடந்து செல்வதே அது. சூரியனைப் போன்றே பல கோடி நட்சத்திரங்கள் பேரண்டத்தில் உள்ளன. எத்தனையோ சூரிய குடும்பங்கள் இருப்பதாக கோட்பாடுகூட முன்வைக்கப்படுகிறது.
கோள்கள் எவ்வாறு ஒன்றையொன்று ஈர்க்கின்றனவோ அவ்வாறே ஒன்றையொன்று விலக்கவும் செய்கின்றன. இதனால் அண்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
காலமற்றதுக்கு செல்வதென்பது மனித இனத்துக்கே வைக்கும் முற்றுப்புள்ளி. நீர் ஆவியாவதும் சூரியன் உதிப்பதும் யாருடைய கட்டளைகளையும் கேட்டு நடைபெறும் காரியமல்ல. பேரண்டத்தின் நிகழ்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தி கடவுள் என்றால் அதற்கு நூறு விழுக்காடு சாத்தியமில்லை.
இயற்கையான நிகழ்வுகளில் தலை நுழைக்கக்கூடிய சக்தி வெறும் கற்பனாவாதமே தவிர நிரூபணம் செய்ய முடியாது…’’ என்றார். நீட்சேவின் அதிமனித கோட்பாடு கடவுளை நிராகரித்தது.
புத்தரின் சூன்யவாதம் நீட்சேவுக்கு ஏற்கத்தக்கதாக இருந்தது. அதாவது சூன்யத்திலிருந்து வெளி வந்து திரும்பவும் சூன்யத்துக்குள்ளே புகுவது. இறப்புக்கு பிறகான வாழ்க்கை இல்லை. உடல் மண்ணுக்கு எருவாகப் போவதைவிட வேறு வழி இல்லை. ஆத்மா என்பதெல்லாம் வெறும் கனவு.
எத்தனையோ பேரரசர்களும், பேரழகிகளும் மண்ணுக்கு எருவாய்த்தான் போனார்கள். இன்று கோவில்களில் கூட்டம் குவிகிறதென்றால் அதற்கு மரண பயமே மூலகாரணம். நீட்சே சொல்லும் ஆதிமனிதன் பரிணாம வளர்ச்சியால் மனிதன் அடையும் நிலையாகக் கூட இருக்கலாம். வாழ்க்கை நீட்சேவின் வேர்களை ஆட்டிப்பார்த்தும் அவர் இறைமறுப்பு கொள்கையை கைவிடவில்லை.
கடவுளுக்கு இங்கு என்ன வேலை? இயற்கையின் வெல்லப்பட முடியாத விதி கடவுளை நிராகரிக்கின்றது.
மனிதனுக்கு ஆயுட்காலம் அறுபது ஆண்டுகள் என்றால் அவனால் உருவாக்கப்பட்ட கடவுள் பன்னெடுங்கால் பிரபஞ்சத்தை ஆளுகிறார் என்ற கருத்தை எப்படி அவர்கள் முன்வைக்க முடியும் என்று நீட்சே கேள்வி எழுப்பினார்.
எதிர்ப்பிலேயே வாழுங்கள், விதை முதற்கொண்டு எல்லா உலக ஜீவராசிகளும் எதிர்ப்பிலேயே தான் வாழுகின்றன. கடவுள் எல்லையற்ற சுதந்திரம் உடையவர் என்றால் அவரால் விதியின் மீது கை வைக்க முடியும் என்றாகிறது. அவரால் அப்படி குறுக்கிட முடிந்தால் அது விதியாகவே இருக்க முடியாது.
நீட்சேவின் கேள்விகளுக்கு புனித நூல்களில் பதில் இல்லை. மதத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் கிளிப்பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். அவர்கள் சுயஅறிவை அடகு வைத்தவர்கள். நான் தான் கடவுள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் பின்னால் மக்கள் அணிதிரள ஆரம்பித்தார்கள். வாழ்க்கை அர்த்தமிழந்தது. ஜனத்தொகை பெருகுவது போல கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது.
மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் எதிர்க்க முன்வரவில்லை. மேலும் மேலும் தாங்கள் பின்னிய வலையிலேயே சிக்கிக் கொண்டனர்.
ஒருவன் கீழ்மைகளிலிருந்து முயற்சி செய்து முன்னேறி மேலே வருவதற்கு கடவுள் தேவையில்லை நன்கு உழைத்தாலே போதும். புனித நூலில் சொல்லப்பட்டு இருப்பதற்காக விசுவாசிக்க வேண்டாம் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்த்தாலேயானால் மதம் உன் கைகளில் விலங்கிட்டு இருப்பதை அறியலாம்.
நீட்சேவின் மிகப்பிரபலமான கூற்றில் ஒன்று “Gott ist tot” – “கடவுள் இறந்துவிட்டான்”. இது ஒரு பிரச்சனையாக மதத்தை ஒழிக்கக் கூறும் நாத்திக நிலைமையல்ல. மாறாக, மேற்கத்திய சமுதாயத்தின் மதக் கொள்கைகளின் வீழ்ச்சி.
இது நீட்சேவின் பார்வையில் ஒரு மாபெரும் வெறுமைத் தருணம்: மனிதன் இனி ஒழுக்கத்திற்கும் அர்த்தத்திற்கும் கடவுளை அடிப்படையாக வைத்திருக்க முடியாது. புதிய அர்த்தங்களை மனிதனே உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
நீட்சேவின் தத்துவத்தில் முக்கியக் கருத்து உன்னத மனிதன். இது சாதாரண மனிதனின் எல்லைகளைத் தாண்டி, தானாகவே அர்த்தங்களை உருவாக்கும், வாழ்வின் முழுமையை ஏற்கும், சக்தி, சுதந்திரம், மற்றும் ஆனந்தத்தின் பிரதிநிதியாக விளங்கும் மனிதனை குறிக்கிறது.
நீட்சே ஒரு நவீன உலகத்தின் குரல். சிந்திக்க வைக்கிறார். அவருடைய சிந்தனைகள் எப்போதும் எளிமையானதல்ல. ஆனால் அவை வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவை.
இத்தனை தீவிரமாகப் பேசியவரை மனநலம் குன்றியவர் என்றார்கள். அவருடைய புத்தகங்கள் பெரிதும் பாராட்டப்படவில்லை. சிலர் அவரை “பைத்தியக்கார தத்துவஞானி” என்றும் விமர்சித்தனர். ஆனால், மரணத்துக்குப் பிறகு தத்துவம், உளவியல், இலக்கியம், கலை, மற்றும் அரசியல் துறைகளில் அவரது தாக்கத்துக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
மனிதர்கள் செய்யும் மூன்று முக்கியமான தவறுகளை நீட்சே சுட்டிக்காட்டினார்.
- பிஸியான பணி
அதிக வேலைப்பளுவில் மூழ்கி இருக்கும் மனிதன் தன்னைத்தானே மறந்து விடுகிறான் என்கிறார் நீட்சே. இதையே பிஸியான வாழ்க்கை என்று மனிதர்கள் பெருமைப்படுகிறார்கள். உண்மையில், பிஸியான வாழ்க்கை தனிப்பட்ட மனித சிந்தனைகளுக்கு இடமளிக்காது. கனவுகள், இலக்குகள் எல்லாவற்றையும் பின்னே தள்ளி மனிதரை இயந்திரமாக்கிவிடும். நாம் யார்? எதற்காக வாழ்கிறோம்? என்ற கேள்விக்குப் பதில் தேடுவதற்கு யாருக்கும் நேரமில்லை.
- மேலோட்டமான மனநிலை
எதையும் முழுமையாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ளும் அக்கறையும் ஆர்வமும் இல்லாத மனிதர்களே அதிகம். எல்லாமே மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். எதையும் ஆழமாக அறிந்துகொள்ளாமல், நிபுணத்துவம் இல்லாமல் எல்லாம் தெரிந்தது போன்று செயல்படும் நிலை.
- எல்லோருக்கும் இரக்கம் காட்டுதல்
நல்லவர், கெட்டவர், நன்மை, தீமை, தேவை, தேவையில்லாதது என்று பிரித்துப் பார்க்காமல் எல்லோரிடமும் தேவைக்கு அதிகம் இரக்கம் காட்டுவது வாழ்க்கையை சிக்கலாக்கிவிடுகிறது. ஏனெனில் இந்த உலகம் ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, தேவையற்ற இரக்கம் மனிதன் செய்யும் மிகப்பெரும் தவறு என்கிறார்.
நீட்சேவின் சில அற்புத மொழிகள்.
- உங்கள் எதிரிகளை நேசியுங்கள், ஏனெனில் அவர்கள் உங்களில் உள்ள சிறந்ததை வெளிக்கொண்டுவருகிறார்கள்.
- இந்த உலகில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர், தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மற்றும் நம்ப விரும்புபவர்கள்.
- நான் இருளில் இருந்தேன், ஆனால் நான் மூன்று அடிகள் எடுத்துவைத்ததில் சொர்க்கத்தில் என்னைக் கண்டேன். முதல் அடி ஒரு நல்ல சிந்தனை, இரண்டாவது ஒரு நல்ல வார்த்தை, மூன்றாவது ஒரு நல்ல செயல்.
- சில நேரங்களில் மக்கள் உண்மையைக் கேட்க விரும்புவதில்லை. ஏனெனில் தங்கள் மாயைகள் அழிக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.
- நமக்கு முன் இருக்கும் பாதையில் எப்பொழுதும் கற்கள் இருக்கும். அவை தடைக்கற்களா அல்லது படிக்கற்களா என்பது நீங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
- நீங்கள் பொய் சொன்னதில் எனக்கு வருத்தம் இல்லை, இனிமேல் என்னால் உங்களை நம்ப முடியாது என்றுதான் எனக்கு வருத்தம்.
- ஒரு இளைஞனை கெடுப்பதற்கான உறுதியான வழி, வித்தியாசமாக சிந்திப்பவர்களை விட ஒரே மாதிரியாக சிந்திப்பவர்களை உயர்வாக மதிக்கும்படி அறிவுறுத்துவதாகும்.
- இந்த உலகம் அழகானது, ஆனால் அதற்கு மனிதன் என்று ஒரு நோய் உள்ளது.
- மகிழ்ச்சியற்ற திருமணங்களை உருவாக்குவது அன்பின் பற்றாக்குறை அல்ல, ஆனால் நட்பின் பற்றாக்குறை.
- சிறந்த விஷயங்கள் அனைத்தும் முதலில் சாத்தியமற்றதாகவே தோன்றும்.
- ஒருவர் தான் தேடியதைக் கண்டுபிடிக்கும் போது, எந்தப் பயணமும் சிறந்ததல்ல.
- எல்லா நேரத்திலும் தான் புகழப்பட வேண்டும் என்று விரும்பும் கடவுளை என்னால் நம்ப முடியாது.
- ஒரு எதிரிக்கு எதிரான சிறந்த ஆயுதம் மற்றொரு எதிரி.
- பழி வாங்குவதிலும் காதலிலும், ஆணை விட பெண் அதிக காட்டுமிராண்டித்தனம் உடையவள்.