மகிழ்ச்சி தரும் மந்திரம்
தினமும் அன்றாட வேலைகளில் பொழுது கழிகிறது. பெரிய சிக்கல், துன்பம் இல்லை என்றாலும் மகிழ்ச்சியும் இல்லை. எங்கு, எப்படி மகிழ்ச்சி கிடைக்கும் என தெரியவில்லை என்பது நிறைய மனிதர்களின் கவலையாக இருக்கிறது.
மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கத் தெரியாதவர்களுக்கு உதவுகிறது, ஹேப்பி மேன் தியரி.
தினமும் காலை முதல் இரவு வரையிலும் ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்துசெல்லும் சூழல் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கிறது. கிராமங்களில் வாழும் மனிதர் என்றாலும் நூற்றுக்கணக்கான மனிதர்களை கடந்து செல்கிறார்கள். இந்த மனிதர்களில் எத்தனை பேர் சிரித்துக்கொண்டு அல்லது புன்னகையுடன் இருந்தார்கள் என்று கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா..?

ரோட்டில் யார் யாரோ சிரிப்பதை எல்லாம் எதற்கு கணக்கிட வேண்டும் என்று கேட்கிறீர்களா..?
காரணம் இருக்கிறது. ஒரு மனிதர் சிரிப்பதை பார்க்கும்போது உங்களுக்கு 25 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்படி மதிப்பெண் கிடைக்கும் என்றால் நிச்சயம் அக்கம்பக்கத்து மனிதர்களை ஆழ்ந்து பார்க்கத் தொடங்குவீர்கள். அப்படி தினமும் 4 மனிதர்கள் சிரிப்பதை அல்லது புன்னகை செய்வதை மட்டும் பார்த்துவிட்டாலே போதும், உங்களுக்கு 100 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.
அப்படி 100 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உடனடியாக மகிழ்ச்சி கிடைத்துவிடும் என்பது தான் ஹேப்பி மேன் 100 தியரி.
சிரிப்பு, அழுகை, சோம்பல், உற்சாகம் போன்ற உணர்வுகள் எல்லாமே மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. எனவே உற்றுப் பார்க்கும்போது, சிரிக்கும் நபர்கள் எப்படிப்பட்ட சூழலில் இருக்கிறார்கள் என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். பூ விற்பனை செய்யும் பெண், ஆட்டோ ரிக்ஷாகாரர், பள்ளி மாணவர்கள், டீ குடிக்கும் நண்பர்கள், உயர் அதிகாரிகள் என்று யார் யாரோ ஏதேதோ சூழலில் சிரிப்பதைக் காண நேர்ந்தால், உங்கள் உதட்டிலும் புன்னகை ஒட்டிக்கொள்ளும் என்பதே இந்த விதி.
நான்கு பேரை பார்த்தாலே மகிழ்ச்சி எனும்போது 40 பேர் சிரிப்பதைப் பார்த்துவிட்டால் எத்தனை மகிழ்ச்சி வந்து சேரும் என்று எண்ணிப் பாருங்கள். சின்னச்சின்ன விஷயங்களே மகிழ்ச்சி தரக்கூடியது என்ற உண்மையையும் இதன் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதன் பிறகு உங்கள் முகத்திலும் புன்னகை திகழும். உங்களைப் பார்த்தும் சிலர் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆகவே, சிரிப்பவர்களைத் தேடுங்கள்… ஹேப்பி மேனாக சிரியுங்கள்.
- எஸ்.கே.முருகன்