சும்மாவேனும் வெளியே சென்று வாருங்கள். இல்லையென்றால் உங்கள் அறையே சிறையாகிவிடும்.

மந்திரச்சொல்

மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் வெளியே செல்வதற்கு பலரும் விரும்புகிறார்கள். உண்மையில், வெளியே சென்று செயல்படத் தொடங்கினால்தான் மனதில் மகிழ்ச்சிக்கான இடம் உருவாகும்.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு பொழுதுபோக்குவதையே நிம்மதி என்று நினைக்கிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது ஒருசில விஷயம் தவிர வேறு எதுவும் யோசிக்க முடியாது. எனவே தனிமை, கவலை, ஏமாற்றம், எதிர்கால பயம் போன்ற சிந்தனைகளுடன் அறைக்குள் முடங்கிக் கிடப்பவருடைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கத் தொடங்கிவிடும்.

ஆரம்பத்தில் அது ஓய்வாகத் தோன்றும். பிறகு பழக்கமாகும். ஒருகட்டத்தில் வெளியே செல்வதற்கே விருப்பமில்லாத மனநிலை உருவாகும். அப்போது அறை என்பது ஓய்வெடுக்கும் இடமாக இல்லாமல், சிறையாக மாறிவிடுகிறது.

உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல்களின் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலையும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்தார். திருமண வாழ்க்கை முறிந்திருந்தது. குழந்தையுடன் தனியாக வாழ்ந்தார். வேலைவாய்ப்பும் பொருளாதார நிலையும் சவாலாக இருந்தன.

அந்தச் சூழலில் வீட்டுக்குள் தன்னை முடக்கிக்கொள்ளாமல், வெளியே சென்று தனது எழுத்துப் பணியை மேற்கொண்டார். எடின்பரோவில் உள்ள கஃபே, நிக்கல்சன்ஸ் கஃபே, எலிபன்ட் ஹவுஸ் போன்ற இடங்களில் அமர்ந்து எழுதினார். இதனால் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் மறையவில்லை. ஆனால், தனது சூழலை மாற்றிக்கொண்டு, எழுதுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு, தனது படைப்புப் பயணத்தைத் தொடர்ந்ததன் விளைவாக மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றான ஹாரி பாட்டர் உருவானது.

இவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் பாடம் என்னவென்றால், சூழ்நிலைகள் சரியாகும் வரை காத்திருக்காமல், கிடைக்கும் சூழலில் இருந்தே புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். நம்முடைய அறை நமக்குப் பாதுகாப்பைக் கொடுக்கலாம். ஆனால் அதுவே நம்முடைய உலகமாகிவிடக் கூடாது.

வெளியே செல்லுங்கள். புதிய மனிதர்களைப் பாருங்கள். புதிய இடங்களைச் சந்தியுங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு கடைக்குச் செல்லுங்கள். சாலையோர மரத்தின் நிழலில் அமருங்கள். மழையை ரசித்துப் பாருங்கள். எந்த நோக்கமும் இல்லாமல் கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள்.

வாழ்க்கை என்பது சம்பாதிப்பது, சாதிப்பது, பொறுப்புகளை நிறைவேற்றுவது மட்டுமல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் அழகான விஷயங்களைப் பார்ப்பதும், அனுபவிப்பதும், ரசிப்பதும்கூட வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.

நீங்கள் வெளியே செல்லாமல் இருந்தால் உலகம் நின்றுவிடாது. ஆனால் உலகத்தின் அழகான பல அனுபவங்களை நீங்கள் இழந்துவிடுவீர்கள். எனவே, எதற்காகவும் காத்திருக்காதீர்கள். மனம் சரியில்லை என்றாலும் வெளியே செல்லுங்கள். காரணம் இல்லையென்றாலும் வெளியே செல்லுங்கள். யாரும் அழைக்கவில்லை என்றாலும் வெளியே செல்லுங்கள்.

உங்கள் அறை உங்களுக்கான ஓய்விடமாக இருக்கட்டும்; வாழ்க்கை முழுவதையும் கழிக்கும் சிறையாக மாறிவிட வேண்டாம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment