அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 455

2015 பெருநகர சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி செய்த உதவிகளை பட்டியலிட்டார் மேயர் சைதை துரைசாமி.

மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’காய்கறிகள் வரத்துக் குறைவால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற சிந்தனையுடன், மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் செயல்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மின் கட்டணம்  செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற நிலையை மாற்றி, அபராதமின்றி காலதாமதமாக மின் கட்டணம் கட்டுவதற்கு உதவி செய்யப்பட்டது.

மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூரில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, சென்னை பெருநகர அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது

வெள்ளத்தில் தங்கள் நிலம், வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இழந்த மக்களின் துன்பத்தைப் போக்கும் வகையில், நகல்களை உடனடியாக வழங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தால் மூழ்கி பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை, எவ்வித கட்டணமும் இன்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தருவதற்கு 200க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் கட்டணமில்லா சிறப்பு சேவை முகாம் நடத்தப்பட்டது. மாநகராட்சிப் பகுதியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக, தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் வெளிமாநில டேங்கர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன…’’ என்றார்.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment