ஐம்பதிலும் ஆனந்தம்
கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸைவிட, இரண்டாவது இன்னிங்ஸே சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் இன்னிங்ஸ் இதுவே.
அப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கையும். ஆம், 50 வயதுக்குப் பிறகுதான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். அது புரியாமல் பலரும் ஐம்பதைத் தொடும்போதே சோர்வுக்கு ஆளாகி துவண்டுவிடுகிறார்கள்.
50 வயதில் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டுப் பார்த்தாலே, சுவாரஸ்யமாக வாழ்வதற்கு உரிய காரணங்கள் கிடைத்துவிடும்.
50 வயதில் பலமான, வளமான அறிவு கிடைத்துவிடுகிறது. அதுவரை பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பக்குவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எளிதாகக் கிடைக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு, அதற்காக சண்டை போடலாமா, உறவு முக்கியமா இல்லையா என்பது போன்ற பல விஷயங்களில் தெளிவு வந்திருக்கும். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற கவலை இருக்காது. தனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்துவிடுகிறது.
50 வயதுக்குப் பிறகும் வாழ்வதற்கு என ஒரு லட்சியம் என்று ஒன்று இல்லையே என்று பலர் சோர்வு அடைகிறார்கள். எல்லோருக்கும் லட்சியம் தேவை இல்லை. ஆம், வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வது மட்டுமே மிகச்சிறந்த லட்சியம். இதுவரையில் அம்மாவுக்காக, மனைவிக்காக, பிள்ளைகளுக்காக என்று வாழ்ந்திருப்பதை விடுத்து, தங்களுக்கு என்று வாழ்க்கையை வாழத்தொடங்கலாம்.
50 வயதுக்குப் பிறகும் புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்க வேண்டாம். இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்.
வயதானதும் பலரும் உடை தேர்வில் ரசனையைக் குறைத்துவிடுகிறார்கள். அதற்கு அவசியம் இல்லை. இந்த வயதிலும் அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான். உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், 50 வயதை தாண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எந்த தயக்கமும் இல்லாமல் வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள். நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள். சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்.
விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள். மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்.
பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள். மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளை விமர்சனம் செய்யாதீர்கள்.
முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்.
இவற்றை எல்லாம் செய்துவந்தால் உடல் ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை. ஆம், மனம் இளமையோடு இருக்கும்போது உடலும் இளமைத் துள்ளலாகவே இருக்கும்.
அனுபவம், அன்பு, சகிப்புத்தன்மையுடன் வருங்காலத்தை வழிநடத்தலாம்.