என்ன செய்தார் சைதை துரைசாமி – 451
சென்னை பெருநகர மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி 2015 பெருவெள்ளத்திற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்துப் பட்டியலிட்டார்.
அந்த வகையில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகரத்தில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகளை அகற்றி, வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து முதல் கட்டமாக 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனுடன் சென்னை மாநகராட்சிப் பகுதியில் 25,000 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கூடுதலாக 7,500 துப்புரவுப் பணியாளர்களை பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அடுத்த கட்டமாக வரவழைக்கப்பட்டனர்.
மேலும், தமிழ்நாட்டின் இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இருந்து கூடுதலாக 25 துப்புரவு ஆய்வாளர்கள், 44 துப்புரவு மேற்பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த துப்புரவுப்படுத்தும் தூய பணிக்கு பேருதவியாக அமையும் வகையில் 392 டிப்பர் லாரிகள் மற்றும் 122 ஜெ.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் மண்டலம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ உதவிகள் முறையாக அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி, ஓசூர், நெல்லை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரம் பேர் கீழ்ப்பாக்கம், ஜெ.ஜெ. உள் விளையாட்டு அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மற்ற துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி சமூக நலக்கூடங்கள், சுகாதார நிலையம், மாநகராட்சிப் பள்ளி மற்றும் தனியார் திருமண மண்டபம் என்று 78 இடங்களில் தக்க வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டனர். துப்புரவுப் பணியாளர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உதவிகள் செய்ய சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததும் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டன.
சென்னை மாநகராட்சி மற்றும் வெளி மாவட்ட துப்புரவுப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து, உத்வேகத்துடன் பணியாற்றியதன் பயனாக, மழை வெள்ளத்தால் எங்கெங்கிருந்தோ அடித்து வரப்பட்ட 1 லட்சத்து 84 ஆயிரத்து 745.34 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
தினந்தோறும் பாதாள சாக்கடை அடைப்புகள் கண்டறியப்பட்டு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது. மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்வதற்கு வீடு வீடாக பிளீச்சிங் பவுடர் வழங்கப்பட்டுள்ளது. கைகளால் எடுத்துச் செல்லும் 384 கொசு புகை மருந்து இயந்திரங்களைக் கொண்டு மூன்று முறையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 42 கொசுபுகை மருந்து இயந்திரங்களைக் கொண்டு காலை மற்றும் மாலை இரண்டு முறையும் கொசு மருந்து அடிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர துண்டு பிரசுரம் மூலமும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட மைக் மூலமும் தொற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது..’’ என்றார்.
நாளை பார்க்கலாம்.
