ஞானகுரு பதில்கள்
ஆரோக்கிய உடல், அமைதியான மனம், போதிய பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைக்க வழி காட்டுபவர் ஞானகுரு. வாசகர்கள் கேள்விக்கு அவரது பதில்கள் இங்கே….
கேள்வி : மனிதருக்கு பாடம் சொல்லித்தருவது வெற்றியா… தோல்வியா..?
- எம்.பவளக்குமார், சிவகாசி.
ஞானகுரு :
கற்றுக்கொள்ளும் பக்குவம் எங்கு, எப்படி, எப்போது கிடைக்கிறது என்பதில்தான் படிப்பினை இருக்கிறது. வெற்றியில் பாடம் படித்தவர்களும் உண்டு, தோல்வியில் பாடம் படிக்காமல் மீண்டும் மீண்டும் தோற்றுக்கொண்டே இருப்பவர்களும் உண்டு.
கேள்வி ; என் கணவருக்கு கிட்னி கெட்டுவிட்டது, அதனால் என் கிட்னியை தானம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி கொடுக்கலாமா..?
- எஸ்.தேவிகா, சென்னை.
ஞானகுரு :
யாரிடமும் ஆலோசனை கேட்காமல் கிட்னி கொடுப்பது என்று நீங்கள் முடிவெடுத்திருந்தால், அது சரியான செயல். கிட்னி கொடுப்பதா வேண்டாமா என்ற கேள்வியும் குழப்பமும் வந்துவிட்டாலே, விருப்பமில்லை என்பதே அர்த்தம். எனவே ஊர் என்ன சொல்லும், பிறர் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசிக்காமல், ’கொடுக்க விருப்பமில்லை’ என்று உறுதியுடன் சொல்லுங்கள். முழுமையான அன்பு, பாசம் இருப்பதை கிட்னி கொடுத்தே நிரூபிக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. உங்கள் கணவருக்கு வாய்ப்பு இருந்தால் கிட்னி தானம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருங்கள். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
