ஈகோ எனும் அசுரன்
ஒருவரை அழித்து ஒருவர் வாழ்வதே இன்றைய வெற்றிக்கு அடிப்படை என்று சொல்லித்தரப்படுகிறது. இது சரியாக இருக்குமா..? எல்லோருக்கும் பயன் தருமா என்று பார்த்தால், நிச்சயம் இல்லை.
ஏனென்றால், ஒரு எதிரி இருப்பது நூறு பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. அந்த எதிரியை நேரடியாக வெற்றி கொள்வது எல்லோருக்கும் எளிது அல்ல, அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அதை விட எளிது மன்னிப்பு.
ஆம், மனிதராய்ப் பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு நேரத்தில் தவறு செய்வது இயல்புதான். அந்தத் தவறுக்கு பிராயசித்தமாக பலர் உடனே மன்னிப்பு கேட்கிறார்கள். தன் மீது தவறு என்று தெரிந்தாலும் சிலர் மன்னிப்பு கேட்பதில்லை. காரணம், ஈகோ.
தவறுக்கு யாரேனும் ஒருவர் அல்லது இருவரும் காரணமாக இருப்பதுண்டு. தவறுக்கு யார் காரணமாக இருந்தால் என்ன? அந்த பிரச்னையை தீர்க்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே முன்வந்து மன்னிப்பு கேட்பவனே மனிதன். அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் மாமனிதன் ஆகிறான்.
ஆம், குற்றம் செய்தவரை தண்டிப்பதைவிட, கருணையுடன் மன்னிப்பதற்கே அதிக வலிமை தேவைப்படும். அந்த வலிமைதான் மற்றவர்கள்மீது இரக்கமும், கருணையும் கொண்டவராக நடந்துகொள்ளும் ஆற்றலை அளிக்கிறது. மன்னிப்பை, நாம் தேர்ந்தெடுக்கும்போது, அது நமக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது, அதேபோல நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை அளிக்கிறது.
இதற்கு உதாரணமாக ஒரு குட்டிக் கதை.
இரண்டு நண்பர்கள் காட்டுவழிப் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். ஒருவன் வயதில் மூத்தவன். அப்போது, இருவருக்கும் ஒருவிஷயத்தில் வாய்த் தகராறு ஏற்படவே, அவர்களில் மூத்தவன், இளையவனை அறைந்துவிட்டான். இளையவன் அதிர்ச்சி அடைந்தான் என்றாலும் கோபப்படாமல் அமைதியாக மணலில் அமர்ந்து, ‘இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்’ என எழுதினான். மூத்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். கொஞ்ச தூரம் நடந்ததுமே இளையவனுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.. மேற்கொண்டு நடக்கமுடியாமல் மரத்தடியில் படுத்துவிட்டான்.
மூத்தவன் காட்டில் அலைந்து திரிந்து ஒரு ஊற்றைக் கண்டுபிடித்து, அதிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து இளையவனுக்குக் கொடுத்தான். தண்ணீர் குடித்ததும் எழுந்துவிட இளையவன், அங்கிருந்த கற்பாறை ஒன்றின்மீது, ‘இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்’ என எழுதினான். இதைப் பார்த்ததும் மீண்டும் குழம்பிவிட்டான் மூத்தவன். உடனே, ‘உன்னை அறைந்தபோது மணலில் எழுதினாய். இப்போது உன்னைக் காப்பாற்றியபோது கல்லில் எழுதுகிறாய். இதற்கு என்ன அர்த்தம்’ என்று கேட்டான்.
அதற்கு இளையவன், ‘யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களைப் பற்றி மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு யாராவது நல்லது செய்தால், அதைக் கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்து அழியக்கூடாது’ என்று சொன்னான். அதைக் கேட்டதும், தவறுக்கு வருத்தம் தெரிவித்து நண்பனிடம் மன்னிப்பு கேட்டான் மூத்தவன். இருவரும் நீண்ட காலம் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர்.
ஒருவன் செய்த தவறுக்காக அவனை பழிவாங்குவதும், தண்டிப்பதும் அவன் திருந்துவதற்கு வழி காட்டாது. மன்னிப்பு மட்டுமே அவனிடம் உள்ள நல்ல உணர்வுகளைத் தூண்டி, தவறுகளில் இருந்து திருந்தி வாழ கற்றுக்கொடுக்கும்.
ஆக, பகைவரையும் மன்னிக்கக் கற்றுக்கொண்டால்,வாழ்வில் எதிரிகளே இல்லாமல் நிம்மதியாக வாழமுடியும்.