ஒரே நாளில் வாழ்க்கை மாற வேண்டுமா..?

Image

இதுதான் அந்த ரகசியம்..!

எல்லா மனிதர்களுக்கும் தங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையவேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், அதற்காக கடுமையாக உழைக்கவேண்டும் என்பதைத்தான் உணர்வதில்லை.

மந்திரத்தில் மாங்காய் பழுப்பது போன்று, சட்டென்று தங்கள் வாழ்க்கை ஒளிமயமாகிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இன்று முன்னேறிய ஒவ்வொரு மனிதரும் கடுமையான உழைப்பால்தான் அந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். கடின உழைப்பு என்றால் தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டும். அந்த உழைப்பு உங்கள் ரத்தம், சதை ஆகியவற்றில் ஊறி இருக்க வேண்டும். அதுவே கடின உழைப்பு.

ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. விதை ஒரே நாளில் மரமாவதில்லை. அதனால் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தால், அதற்கான பலன் நிச்சயம் வந்தே தீரும். உலகின் மிகப்பெரிய பணக்காரரான ராக்பெல்லரிடம், ‘உங்கள் முன்னேற்றத்தின் ரகசியம் என்ன’ என கேட்டபோது ஒரு நொடிகூட தாமதிக்காமல், ‘கடுமையான உழைப்புதான் என் முன்னேற்றத்தின் ரகசியம்’ என்றார். ஆம், உழைக்காமல் எவரும் முன்னுக்கு வரவே முடியாது.

ஒரு விஞ்ஞானி நோபல் பரிசு பெறுகிறார் என்றால், அதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் எத்தனை கடினமாக உழைத்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள். உழைப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்று காத்திருக்காமல் எறும்பு, தேனியைப் போன்று உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

உழைப்புதான் நல்ல ஆரோக்கியம் கொடுக்கும். நிம்மதியான தூக்கம் கொடுக்கும். தேவையற்ற சிந்தனைகளை அருகே நெருங்கவிடாது. உழைப்பு என்பது மிகவும் அவசியம். அதேநேரம் அந்த உழைப்பு திட்டமிட்ட உழைப்பாக இருக்க வேண்டும். கடல் தண்ணீரை வற்றச் செய்கிறேன் என்று இரைத்து ஊற்றுவது மூடத்தனம். ஆகவே, தெளிவாக திட்டமிட்டு உழைக்க வேண்டும். தொழிலதிபராக வேண்டுமா, உயர் பதவியை அடைய வேண்டுமா, சாதனை படைக்க வேண்டுமா என்று உங்களை நீங்களே கேள்விகள் கேட்டுக்கொள்ளுங்கள். அதை நோக்கி சிந்தித்து அதற்கேற்ப கடுமையாக உழையுங்கள்.

நமது திறமை, பலவீனம், வாய்ப்புகள் மற்றும் அபாயங்கள் என்ன என்பதை அலசி ஆராய்வது அவசியம். இதை ஆங்கிலத்தில் SWOT Analysis (Strength, Weakness, Opportunity and Threats) என்பர். அதற்கு தகுந்தாற்போன்ற தொழிலில் ஈடுபட்டு கடினமாக உழைப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். இன்னும் சுருக்கமாக சொல்வது என்றால் புத்திசாலித்தனத்துடன் உழைப்பவர்களுக்கு நிச்சய வெற்றி கிடைக்கும்.

பெட்டிக் கடை வைத்திருந்து, அதன் சூட்சுமம் அறிந்து மிகப்பெரிய ஹோட்டல் உரிமையாளராக மாறியவர்தான் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி. தள்ளுவண்டியில் பிரியாணி கடை வைத்தவர் சேலம் RR பிரியாணி கடைகளின் உரிமையாளர்.

இவர்களைப் போன்று உழைத்தவர்கள் மட்டுமே முன்னேறி இருக்கிறார்கள். இன்றும், உழைப்புக்கு உதாரணமாக காட்டப்படுகிறது ஜப்பான். ஆம், இரண்டாம் உலகப் போரில் நிர்மூலமாகிய அந்த நாடு உழைப்பின் மூலம்தான் மகத்தான வளர்ச்சி பெற்றுள்ளது.

கடின உழைப்பு உடனடி வெற்றி தராவிட்டாலும், வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம் அதிகப்படுத்தும். ஆகவே உழைக்கத் தயங்க வேண்டாம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்