பாலியல் பாடம்
‘’ஒரு சில நேரங்களில் கட்டுக்கடங்காத காம உணர்வு உண்டாகிறது. இதை புறக்கணிக்க நினைத்தாலும் முடிவதில்லை, என்ன செய்யவேண்டும்?’’ ஞானகுருவிடம் கேள்வி எழுப்பினார் மகேந்திரன்.
‘’காம உணர்வு என்பது இயல்பான ஒன்று. காட்டு மிருகங்கள், பறவைகள் காம உணர்வு தோன்றுகையில் அதை எப்படியேனும் தணிக்கவே அலையும். அதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொள்ளும். இனப்பெருக்கத்துக்காக மட்டுமே அந்த காமம் என்பதால் அதனை தணிக்கும் வரை அந்த நிலை கட்டுப்படவே கட்டுப்படாது. அது உயிரியல் விதி.
அதே வகையில், மனிதர்களுக்கு காம உணர்வு ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால், மிருகங்களைப் போன்று எதிர்பாலினத்தை விரட்டியும், அடக்கியும் இந்த உணர்வை தணிக்க முடியாது. அப்படி அடாவடியாக காமத்தை தணிக்க முயல்பவர் தான் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
குடும்ப உறவுக்குள் இருப்பவராலும் நினைத்தவுடன் காமத்தைத் தணித்துவிட முடியாது. ஆண்கள் மிக எளிதில் காம வயப்படுவார்கள். சட்டென்று உணர்வுபூர்வமாக மாறுவார்கள். ஆனால், பெண்கள் அதற்குத் தயாராக இருப்பதில்லை. அப்படி திடீரென அவர்கள் காமவயப்படுவதும் இல்லை.
எனவே, கட்டுக்குள் வராத காம உணர்வில் தவிப்பவர்களுக்கு சுய இன்பம் மட்டுமே எளிதாக, பாதுகாப்பான பயன் தருகிறது. அதேநேரம், காம வயப்படும் நேரத்தில் மனதை வேறு ஏதேனும் விஷயத்தில் திசை திருப்புவதும் நல்ல பயன் தரும். அதாவது தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் பேசுவது, வேறு ஏதேனும் வேலையை இழுத்துப்போட்டுச் செய்வது என்று முழுமையாக திசை திருப்ப வேண்டும்.
அரைகுறையாக திசை திருப்பும் பணியில் ஈடுபட்டால் உள்ளுக்குள் காம உணர்வு விழித்துக்கொண்டே இருக்கும். அடிக்கடி தலையைக் காட்டிக்கொண்டே இருக்கும். இப்படி அரைகுறையாக காமத்தை அடக்குபவர்களே தவறான வழிகளில் எல்லாம் இன்பம் தேட முற்படுவார்கள். இந்த முயற்சி ஆபத்தான விளைவுகளை உருவாக்கலாம்.
பொதுவாக ஆண்கள் வேலையில் ஈடுபடும் தருணங்களில் அதுவும் கடுமையான பணிச்சூழல் உள்ளவர்களுக்கு காம எண்ணம் வருவதே இல்லை. குடும்பத்துடன் ஒன்றிணைந்து இருப்பவர்கள் குழந்தை வளர்ப்பு, மனைவியின் பணிச்சுமை ஆகியவற்றை மனதில் கொண்டு தாங்களே அந்த உணர்வை அடக்கிக்கொள்கிறார்கள். காம உணர்வை குழந்தை வளர்ப்பிலும், மனைவிக்கு உதவி செய்வதிலும் காட்டி திருப்தி அடைய முடியும்.
ஆண்களுக்கு காம உணர்வு எத்தனை எளிதில் உருவாகிறதோ, அத்தனை எளிதில் அடங்கியும் போகிறது. ஆனால், பெண்கள் நிலை எதிர்மாறாக இருக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதில்லை. ஆனால், அரிதாக காம உணர்ச்சிக்கு ஆட்படும் நேரத்தில் அதை சுய இன்பத்தில் மூலம் தணித்தாலும், சிலருக்கு இதன் மூலம் கிடைக்கும் இன்பம் போதுமாக இருப்பதில்லை.
இந்த காலகட்டத்தில் தான் சில தவறான உறவுகள் உருவாகின்றன. பாதுகாப்பற்ற உறவு, சிக்கலான சீர்குலைவு ஏற்படுகிறது. தனிமையில் இன்பம் காண்பது போதாது என்ற நிலையிலே முறையற்ற உறவு உருவாகி குடும்பத்தைக் குலைத்துப் போடுகிறது.
பெரும்பாலான பெண்கள் காமத்தை தங்கள் பாசத்தின் முலம், அன்பின் மூலம் காட்டி திருப்தி அடைந்துகொள்கிறார்கள். நாகரிக உலகத்தில் இந்த கட்டுப்பாடுள்ள காமமே நல்லது. காமத்தின் மீது பழி போட்டு அடுத்தவரை பயனபடுத்துவதும் துன்புறுத்துவதும் முறையல்ல. சட்டத்தின் முன்பு மட்டுமல்ல, மனிதத் தன்மைக்கே இது எதிரானது’’ என்றார் ஞானகுரு.