உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களா?

Image

ஜஸ்ட் திங்க்

எந்த முயற்சியும் செய்யாமல், தங்களால் முடியாது என்று ஒப்புக்கொள்ளும் நபர்களே அதிகம் இருக்கிறார்கள். அதேநேரம், தங்களுக்கு ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கவில்லை என்று புலம்பவும் செய்கிறார்கள்.

டாக்டர் படிப்புக்கு நிறைய மதிப்பெண்கள் வேண்டும், அதெல்லாம் என்னால் முடியாது என்று பொறியியல் தேர்வு செய்கிறார்கள். தினமும் பேப்பர் படிச்சு ஜெனரல் நாலேஜ் இருப்பவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் வெற்றியடைய முடியும் என்று யுபிஎஸ்சி தேர்வுகளில் கலந்துகொள்வதே இல்லை. உறவினர் சினிமா ஃபீல்டில் இருப்பவர் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற எண்ணத்தில் நுழைய மாட்டார்கள்.

அழகான பெண்ணுக்கு என்னைப் பிடிக்காது என்று காதலை சொல்ல மாட்டார்கள். புரமோஷன் தரமாட்டார்கள் என்று இவர்களாகவே முடிவு செய்து கேட்காமல் அமைதி காப்பார்கள். சொந்தத் தொழில் செய்வதற்கு ராசி இருக்க வேண்டும், அது என்னிடம் இல்லை என்று ஒதுங்கிவிடுவார்கள்.

இப்படி தாங்களாகவே முடியாது, முடியாது என்று நினைத்துக்கொள்பவர்களால் நிச்சயம் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், மனம் அதனை முழுமையாக நம்பிவிடும். அதனால் முயற்சி செய்யாமலே தோற்றுவிடுகிறார்கள்.

கிடைக்கும், கிடைக்காது என்ற கவலை மனிதர்களுக்குத் தேவையில்லை. தோல்வி பற்றிய அச்சமின்றி முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சி செய்யும் நேரத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வெற்றியின் பக்கத்தில் செல்ல முடியும். வெறுமனே முயற்சி செய்த காரணத்தாலே வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் உண்டு. எனவே, வெற்றி என்பது முக்கியம் இல்லை. முயற்சியே முக்கியம்.

எனவே, முடியும் என்று நம்புங்கள், முயற்சியுங்கள், வெற்றி பெறுங்கள். அதுவே, மகிழ்ச்சி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.

Leave a Comment