நிம்மதி, சுதந்திரத்தை பறிக்கும் எதையும் அருகில் நெருங்கவிடாதீர்கள்.

மந்திரச்சொல்

வாழ்க்கையில் எதை இழந்தாலும் மீண்டும் சம்பாதித்துவிடலாம். பணம் இழந்தால் உழைத்துப் பெற்றுவிடலாம். வாய்ப்பு இழந்தால் புதிய வாய்ப்பு உருவாக்கலாம். ஆனால் மனநிம்மதி, தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட்டால், வாழ்க்கையின் மகிழ்ச்சி தொலைந்துபோகிறது.

நம்முடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. நம் நிம்மதியைப் பறிக்கும் எதற்கும் இடம் கொடுக்க வேண்டியதில்லை. மனநிம்மதி என்பது தனிப்பட்ட நபரின் தேர்வாகவே இருக்க வேண்டும்.  

சிலர் நமது வாழ்க்கைக்குள் நுழைந்து முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள். எதைச் செய்ய வேண்டும், யாரிடம் பேச வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் அன்பு என்ற பெயரிலும் சிலர் நட்பு என்ற பெயரிலும் பலவீனங்களைத் தெரிந்துகொண்டு குற்றவுணர்ச்சி உருவாக்குகிறார்கள்.

ஒருவரை நேசிக்கலாம். அதற்காக அவருடைய ஒவ்வொரு விருப்பத்திற்கும் அடிபணிய வேண்டியதில்லை. ஒருவருக்கு உதவலாம். ஆனால் அதற்காக நம்முடைய மகிழ்ச்சியைத் தியாகம் செய்ய வேண்டியதில்லை. ‘இல்லை’ என்று சொல்ல வேண்டிய இடத்தில் ‘இல்லை’ என்று சொல்வதும் ஒரு மனநலப் பாதுகாப்புதான். உண்மையான அன்பு என்பது ஒருவரைக் கட்டுப்படுத்துவது அல்ல; அவரை அவராகவே வாழ அனுமதிப்பது.

ஒரு மனிதர் நம்மை உண்மையாக நேசித்தால், அவருக்கு அருகில் இருக்கும்போது நம்முடைய மனம் அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய கருத்துகளைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும். தவறு செய்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்க வேண்டும்.

ஆனால் ஒருவரது நெருக்கம் பயத்திலும், குற்றவுணர்ச்சியிலும், மன அழுத்தத்திலும் வைத்திருந்தால், அந்த உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அன்பு என்பது ஒருவரை நம்முடன் வைத்துக்கொள்வது மட்டுமல்ல; அவர் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு இடம் கொடுப்பதும்தான்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அதிகாரம், பணம், புகழ் என அனைத்தும் இருந்தபோதிலும் எளிமை, மனிதநேயம், தனிப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கை வெற்றியை வெறும் பணத்தாலும் அதிகாரத்தாலும் அளவிட முடியாது. தனிப்பட்ட மதிப்புகளையும் மனிதநேயத்தையும் கைவிடாமல் வாழ்ந்ததிலும் அவருடைய தனித்துவம் வெளிப்படுகிறது. அவர் தலைமையில் டாடா குழுமம் வளர்ச்சியடைந்தபோதும், மனிதர்களின் நலன், நிறுவனத்தின் நற்பெயர், சமூகப் பொறுப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

வெற்றி பெறுவதற்காக நம்முடைய அடிப்படை மதிப்புகளையும், மனசாட்சியையும் இழக்க வேண்டியதில்லை என்பதுதான் ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பாடம்.

எனவே, நம்முடைய அன்பைப் பயன்படுத்தி நம்மை அடிமைப்படுத்துபவர்களுக்கு எல்லை வகுக்க வேண்டும். நம்பிக்கையைச் சிதைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுதந்திரத்தைப் பறிப்பவர்களிடம் உறுதியுடன் இருக்க வேண்டும். அதற்காக யாரையும் வெறுக்க வேண்டியதில்லை. பழிவாங்க வேண்டியதில்லை. சில நேரங்களில் அமைதியாக விலகி நிற்பதே போதும்.

மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மனிதர்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நிம்மதியைத் திருடும் சூழல்களிலிருந்து விலகி நில்லுங்கள். ஏனென்றால், நிம்மதியை இழந்து கிடைக்கும் எந்த வெற்றியும் முழுமையான வெற்றியல்ல.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment