மந்திரச்சொல்
அம்மா ஒரு முக்கியமான வேலையில் இருக்கிறார். அப்போது அவரது குழந்தை அழுதுகொண்டு ஓடிவருகிறது. கண்ணீர் சிந்துகிறது என்றால் தாய் துடித்துவிடுவார். கையிலிருக்கும் வேலையை தள்ளிவைத்துவிட்டு, அந்தக் குழந்தையை அணைத்துக்கொண்டு காரணம் கேட்பார். குழந்தையின் கண்ணீரை நிறுத்துவதுதான் தாய்க்கு முன்னுரிமையாக இருக்கும்.
அதே குழந்தை தெருவில் செல்லும் ஒரு நபரிடம் சென்று கண்ணீர் சிந்தினால், அவர் திரும்பிக்கூட பார்க்காமல் போகலாம். ஏனென்றால், கண்ணீரின் மதிப்பு, அதை உணரும் இதயத்தில்தான் இருக்கிறது.
மனித வாழ்க்கையில் மிகவும் வலிமையான உணர்வு அன்பு. அதே நேரத்தில், மிகவும் பலவீனமான உணர்வும் அன்புதான். ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது, அவரிடம் மனதை, நேரத்தை, நம்பிக்கையை ஒப்படைக்கிறோம். சில சமயங்களில் அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம்.
அவர்களிடம் கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் இருந்தால் நல்லது. அழுகையின் அர்த்தம் உணரப்பட்டதாக மகிழ்கிறோம். ஏனென்றால் கண்ணீர் என்பது வெறும் தண்ணீர் அல்ல. அதில் நிறைவேறாத எதிர்பார்ப்புகள், உடைந்த நம்பிக்கைகள், கிடைக்காத அன்பு, சொல்ல முடியாத வலி, இழக்க விரும்பாத உறவு இருக்கிறது. எனவே கண்ணீரை மதிப்பதும் ஒருவரின் மனதை மதிப்பதும் ஒன்றுதான்.
ஒரு சிலரிடம் அழுதாலும், கண்ணீர் சிந்தினாலும் அவர்கள் நெஞ்சில் எந்த மாற்றமும் ஏற்படாது. நாம் விலகினாலும், உடைந்தாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒருவரிடம் தொடர்ந்து அன்பை நிரூபிக்க முயல்வது, நம் இதயத்தை நாமே காயப்படுத்துவதற்கு சமம்.
அன்பு என்றால் கண்ணீர் சிந்த வைப்பதல்ல. உண்மையான அன்பு சில நேரங்களில் காயப்படுத்தலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சண்டைகள் வரலாம். ஆனால் உண்மையாக நேசிப்பவர் கண்ணீரைப் பார்த்து மகிழமாட்டார். இவ்வளவு காயப்படுத்திவிட்டேனா என்று கவலைப்படுவார்.
ஆனால், கண்ணீரை ஒரு நாடகமாகக் கருதுபவருக்கு அன்பின் மதிப்பு தெரியாது. அவர்களுக்காக அழுவது, தண்ணீர் இல்லாத நிலத்தில் தொடர்ந்து விதைப்பது போன்றது.
கண்ணீரால் ஒருவரை மாற்ற முடியும் என்று சிலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள். நான் வலியுடன் இருப்பதை அவர் ஒருநாள் புரிந்துகொள்வார். என் அழுகையை உணர்வார். நான் இல்லாத நேரத்தில் என் மதிப்பு தெரியும் என்று காலம் முழுக்க காத்திருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? புரிந்துகொள்ள விரும்பாதவருக்கு ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் புரியாது. மதிக்க விரும்பாதவரிடம் ஆயிரம் முறை அழுதாலும் மதிப்பு கிடைக்காது. ஒருவரின் மனதில் இடம் இல்லையென்றால், உங்கள் கண்ணீரால் அந்த இடத்தை அடைய முடியாது.
அந்த இடத்தில் விலகுவதுதான் சுயமரியாதை. ஒருவரை நேசிப்பது தவறு அல்ல. அவருக்காக அழுவதும் தவறு அல்ல. ஆனால் தொடர்ந்து காயப்படுத்தும் நபருக்காக வாழ்க்கை முழுவதும் அழுவது, உங்களுக்கே நீங்கள் செய்யும் அநீதி. அப்படிப்பட்ட உறவுகளிலிருந்து விலகுங்கள். அது, தோல்வி அல்ல. சில மனிதர்களை மறப்பது துரோகம் அல்ல. சில கதவுகளை மூடுவது கோபம் அல்ல. அது சுயமரியாதை.
கண்ணீரை மதிக்காதவர்கள், மனதைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் உங்கள் அன்பை நிரூபிக்காதீர்கள். கண்ணீரை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஏனென்றால், கண்ணீர் மிகவும் மதிப்புமிக்கது. அதைத் துடைக்கத் தெரிந்த கரங்களுக்கு மட்டும் வாழ்க்கையில் இடம் கொடுங்கள், மதிக்காதவர்கள் நம் கண்ணீருக்குத் தகுதியானவர்கள் இல்லை என்பதை புரிந்து விலகுங்கள்.
