சிம்பிள் டிப்ஸ்
வீட்டை அழகாக்குவது, அதில் நாம் வாங்கிப் போட்டிருக்கும் பொருட்கள்தான். ஆம், தேவையில்லாத நிறைய பொருட்களை வாங்கி வீட்டில் அடைத்துவைப்பதால், வீடு குப்பையாவதுடன் வீடும் அழகின்றிக் காட்சி தரும். இதனால், நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்கூட நம் வீட்டைப் பார்த்து முகம் சுளிப்பர். ஆகையால், முதலில் வேண்டாதவற்றை வீட்டுக்குள் சேர்க்காமல் இருக்க வேண்டும். பின், வீணாக அடைத்துக்கொண்டிருக்கும் பொருள்களை அகற்ற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? இதோ சில எளிய வழிகள்…
குளியலறை
பொதுவாக குளியறையில், காலியான ஷாம்பூ, கண்டிஷனர், பற்பசை, காலாவதியான தலைக்கான ஜெல் என அத்தனையும் முதலில் தூக்கி எறிய வேண்டும். நாம் பரிசாகப் பெற்ற, உபயோகப்படுத்தாத சீர்படுத்தும் சாதனங்கள் ஆகியவற்றை தேவையானவர்களுக்கு கொடுத்துவிடலாம். ஆண், பெண், குழந்தைகளுக்கென அவரவர் பொருட்களுக்கு தனித்தனி இடங்களை ஒதுக்குவது அறையின் அழகைக் கூட்டுதவதோடு மட்டுமின்றி, தினந்தோறும் நமக்குத் தேவையானதை சுலபமாக எடுக்கவும் உதவும். குளியலறை மூலைகளில் வைப்பதற்கென பிரத்யேகமாக வரும் ஸ்டாண்ட் அல்லது சுவர்கள், கண்ணாடியின் மேல், தொட்டியின் அடியில் என இடத்திற்கேற்றார்போல் ஸ்டாண்ட் அமைத்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.
படுக்கையறை
நாம் பெரும்பாலும் அதிக நேரத்தை படுக்கையறையிலேயே செலவிடுகிறோம். ஆழமான, நிம்மதியான உறக்கத்திற்கு, அடைசல் இல்லாத சுத்தமான படுக்கையறை மிக அவசியம். வேலை தொடர்பான பொருட்களே (மடிக்கணினி, காபி கோப்பை. ஃபைல்) நம் படுக்கை அருகில் அதிகம் இடம்பெற்றிருக்கும். இப்படி இருந்தால், இவை அனைத்தையும் வேறு இடத்திற்கு உடனே மாற்ற வேண்டும். அதுபோல், நாம் படித்து முடித்த புத்தகங்களையும் அதன் இடத்திலேயே திரும்ப வைத்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
சமையலறை
இந்த அறையில்தான் பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், மின் சாதனங்கள் என அதிக அளவிலான பொருட்கள் குவிந்திருக்கும். ஆகையால், இந்த அறையை அடைப்பில்லாமல் வைத்துக்கொள்வது மிக முக்கியம். எதைச் சீரமைக்க வேண்டும் அல்லது எந்த இடத்தைச் சரியாக்க வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்து, பின் தொடங்குவது வேலையைச் சுலபமாக்கும். உதாரணத்திற்கு குளிர்சாதனப் பெட்டியில் தொடங்கி, பின் மேல் அலமாரி, கீழ்ப் பகுதி எனப் பிரித்து ஒழுங்குபடுத்த வேண்டும். அடுத்து, விரைவில் காலாவதியாகப் போகும் உணவுப் பொருட்களை தனியாக அடுக்கி அவற்றை தினந்தோறும் உபயோகப்படுத்தலாம்.
வாழறை
இங்குதான் அதிகமாக ஃபர்னிச்சர்கள் இடம்பெற்றிருக்கும். புத்தக ஷெல்ஃப் அல்லது தொலைக்காட்சி வைக்கும் இடத்தில் தான் பெரும்பாலும் மற்ற பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். அதுவும் இந்த அறையை மிகவும் அழகாக வைத்திருப்பது என்பது சவாலானது. புத்தகத்தை அதன் இடத்திலேயே திரும்பவைப்பது என சின்னச் சின்ன விஷயங்களை மேற்கொண்டால், பராமரிப்பை எளிதுபடுத்தலாம். பொருட்களை வைப்பதற்கு அதிக இடம் இருக்கும்படியான ஷெல்ஃப் அல்லது அலங்கார வைப்புகள் ஆகியவற்றை வாங்குவதும் பராமரிப்பை இலகுவாக்க உதவும்.
நுழைவாயில் மற்றும் பால்கனி
பால்கனியையும், நுழைவாயிலையும் சுலபமாக பராமரிப்பது என்பது சவாலான விஷயம். நம்மில் பலர் காலணிகளை அப்படியே கழட்டி விட்டெறிவோம். ஆகையால், நுழைவாயில் அருகில் காலணி ஸ்டாண்ட் ஒன்றை வைத்து வீட்டில் உள்ள அனைவரும் காலணிகளை ஒழுங்காக அடுக்கி வைக்கலாம். வீட்டு சாவி, கார் சாவி ஆகியவற்றை வைப்பதற்கு அதற்கான ஸ்டாண்டு ஒன்றைப் பொருத்திடலாம். இந்த இடங்களில் தேவையில்லாத குப்பைகளை சேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள், தேவையான அளவில், தேவையான இடத்தில் இருப்பதுதான் வீட்டை அழகாக்குகிறது.