சென்னை வெள்ளம் மீட்பு நடவடிக்கைகள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 448

2015 சென்னையை பெருமழைக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு மட்டும் காரணம் இல்லை என்று கூறிய மேயர் சைதை துரைசாமி, அதற்கான விளக்கத்தைக் கொடுத்தார்.

இது குறித்து அவர், ‘’செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து  அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல முறை இதேபோல தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் வினாடிக்கு 14,400 கன அடியும்,  அதற்கு  முன்னர் 1976-ம் ஆண்டு வினாடிக்கு 25,000 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.  அப்போதெல்லாம் இதுபோன்ற பேரழிவு ஏற்படவில்லை. ஏனெனில் அன்று இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் பெருமழை பெய்யவில்லை. அந்த நேரத்தில் மேற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள் நிரம்பி அவற்றின் உபரிநீரும் அடையாற்றில் கலக்கவில்லை. 

இப்படி வரலாறு காணாத மழையினால் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதே தவிர, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் இந்த பேரழிவு ஏற்படவில்லை. இந்த நேரத்தில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை இங்கு பதியவைக்க விரும்புகிறேன்.

மழை வெள்ளம் சூழ்ந்து,  பாதிப்புக்கு உள்ளான  19.63 லட்சம் பொதுமக்கள்  பாதுகாப்பாக  மீட்கப்பட்டனர். தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத அபூர்வ எண்ணிக்கை இது. பொதுவாக ஆற்றங் கரைகளில் குடியிருக்கும் ஏழை மக்கள் மட்டும்தான் மழைக் காலங்களில் மீட்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போது ஆற்றங்கரையைத் தாண்டி அக்கம்பக்க வீடுகளுக்குள்ளும் நீர் நுழைந்தது. அதனால் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வகுப்பினரும் இந்த மழையின்போது மீட்கப்பட்டனர்.  தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த   பொது மக்கள் சென்னை மாநகராட்சி,  தேசிய பேரிடர் மேலாண்மை குழு, மீன் வளத்துறை, தீயணைப்பு துறை  மற்றும் தேசிய கப்பற் படைகளைச் சார்ந்த  சுமார் 60க்கும் மேற்பட்ட  படகுகள்  மூலம்   மீட்கப்பட்டு,   நிவாரண  முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்

பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 7,150 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நபர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. இதுவன்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 1,28,28,582 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலம் தவிர ரொட்டிகள், பால், படுக்கை, விரிப்பு,  போர்வை, கொசுவர்த்தி சுருள், டார்ச் லைட்  போன்றவை  வழங்கப்பட்டன…’’ என்றார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment