எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியுமா?

Image

வழிகாட்டும் சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ் ராஜ்

குடும்பத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அலுவலகத்தில் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும், நண்பர்கள் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கத்தான் செய்கிறது.

ஆனால், இது ஒருபோதும், எவர் ஒருவருக்கும் சாத்தியம் ஆகப்போவதில்லை என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் இப்படி நினைப்பது ஒரு பேராசை. ஆசையே துன்பம் தரும் எனும் பட்சத்தில், பேராசை பெரும் துன்பமே தரும்.

ஏன், இது நிறைவேற வாய்ப்பு இல்லை..?

மழையும், வெயிலும் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் நன்மை செய்வதில்லை. ரோட்டோரம் இட்லிக் கடை வைத்திருக்கும் அம்மணிக்கு மழை பெய்வது நிச்சயமாக ஒரு பெரும் துயரம். அதற்காக மழையை நாம் துயரம் என்று குற்றம் சாட்டிவிட முடியாது. அதாவது உங்களுக்கு நல்லவராகத் தெரிபவர், பிறர் பார்வைக்கு கெட்டவராகத் தெரியலாம். அதற்காக அவர் கெட்டவர் என்று அர்த்தம் இல்லை.

இதற்கு உதாரணம் காட்ட வேண்டும் என்றால், ’சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் வரும் பிரகாஷ் ராஜை சொல்லலாம். அந்த படத்தில் சிறகடித்துப் பறக்க நினைக்கும் ஜெயம் ரவிக்கு தந்தையான பிரகாஷ் ராஜ் வில்லனாகத் தெரிவார். இன்றைய யூத்களின் பாஷையில் சொல்வது என்றால், பிரகாஷ்ராஜ் ஒரு toxic. ஆனால், பிரகாஷ் ராஜ் மோசமான தந்தையோ, கெட்டவரோ  இல்லை.

ஒருவர் நல்லவராக இருக்கலாம், தியாகியாக இருக்கலாம், ஆனால் அந்த அதீத தியாகமே சிலருக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மகாத்மா காந்தியால் அவரது மனைவி கஸ்தூரிபாய்க்கும் பிள்ளைகளுக்கும் நிகழ்ந்த சிக்கல்களை நாம் இங்கே உதாரணமாகச் சொல்லலாம். எனவே யாரும், எல்லாருக்கும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது என்பதை  புரிந்துகொள்ளுதல் அவசியம்.

எல்லாருமே அறிந்தோ அறியாமலோ அவ்வப்போது சில நெகட்டிவ் நடத்தைகளை வெளிப்படுத்தவே செய்வார்கள். உடனே, அவரை குற்றவாளியாக கூண்டில் ஏற்றிவிடுவது நியாயமல்ல. ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்டகருத்து, சிந்தனை, நடத்தை இருக்கும், அதனை வெளிப்படுத்தும் உரிமை அவர்களுக்கு உண்டு.

மாற்றுக் கருத்துகளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாற்றுக் கருத்துக்காக சம்பந்தப்பட்ட நபரை தள்ளிவைக்கவும் வேண்டியதில்லை. அந்த மாற்றுக் கருத்தில் இருந்து தள்ளி நின்றாலே போதும்.  

அந்த மாற்றுக்கருத்து தவறு என்று அவரிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பது சரியல்ல. நீங்கள் சொல்வது சரி என்று அவருக்கே புரியவரும்போது ஏற்றுக்கொள்வார். ஒருவேளை, நீங்கள் சொல்வதும் தவறாக இருக்கலாம்.

ஒரு ஹோட்டலுக்கு காலை உணவுக்குப் போகிறீர்கள். அங்கே இட்லி, தோசை, இடியாப்பம், பூரி, சப்பாத்தி, பொங்கல், பிரட், உப்புமா என்று வகைவகையாக உணவுகள் அடுக்கியிருப்பதை பார்க்கலாம். அங்கு வரும் ஒவ்வொரு நபரும், அவற்றில் ஏதேனும் ஒன்றை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுச் செல்வதைப் பார்க்கலாம்.

நீங்கள் எப்போதும் இட்லி அல்லது தோசை சாப்பிடும் நபராக இருக்கலாம். அதற்காக, எப்படித்தான் காலையில் பொங்கல் அல்லது பூரி சாப்பிடுகிறார்களோ என்று ஒரு கருத்தை முன்வைத்தால், அது டாக்ஸிக் சிந்தனை.

என்ன வேண்டுமோ, அதை சாப்பிடுவது அவரவர் உரிமை. உங்களுக்குத் தேவையானதை மட்டும் நீங்கள் சாப்பிடலாமே தவிர, பிறர் மீது விமர்சனம் வைப்பது நச்சு சிந்தனை.

பொதுவாக அல்லது மருத்துவ ரீதியாக பொங்கல் சாப்பிட்டால், அது ஜீரணமாக தாமதமாகும், உறக்கம் வரும். ஆகவே, காலையில் இட்லி சாப்பிடுவதுதான் சரி என்று பிறரது உணவுப் பழக்கத்தில் தலையிட்டால், அதுதான் டாக்ஸிக்.

ஃபேஸ்புக் பக்கத்தில் நடக்கும் பெரும்பாலான சண்டை இந்த ரகமாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கருத்தையும் முன்வைப்பதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு. அதனை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். ஏன் இப்படிப்பட்ட கருத்தை பொதுவெளியில் வைக்க வேண்டும் என்று, உங்களுக்கு தெரிந்த கருத்தை முன்வைத்து வாதம் செய்வது டாக்ஸிக்.

வெளியே மட்டுமின்றி, வீட்டுக்குள்ளும் இந்த டாக்ஸிக் சிந்தனை தேவையில்லை. மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய மனைவி ஆசைப்படும்போது, அதில் எளிதாக கறை தெரியும் என்று கருத்தை சொல்லி, அவர் மனதை புண்படுத்த வேண்டாம். அது, உங்களைவிட அவருக்கு நன்றாகவே தெரியும். அப்படி தெரியவில்லை என்றாலும், இனியாவது அவர் தெரிந்துகொள்ளட்டும்.

நீங்கள் உங்கள் கருத்துடன் வாழுங்கள். பிறரையும் அப்படியே வாழ விடுங்கள்.

Leave a Comment