வழக்கறிஞர் எச்சரிக்கை
பவர் பத்திரங்கள் விஷயத்தில், வழக்கறிஞர் மற்றும் சார் பதிவாளர்களின் ஆலோசனைகளை அவசியம் பெற வேண்டும். இல்லையேல், அதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புண்டு என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிலா.

இதுகுறித்து நிலா, ‘சொத்து விற்பனை நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட முடியாதவர்கள், தங்கள் சார்பாக முகவரை நியமிக்க பவர் பத்திரம் வழிவகுக்கிறது. இதில் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள், வெளியாருக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள் என இரண்டு வகை உள்ளது. பொதுவாக குடும்ப உறுப்பினர்களுக்குள் வழங்கப்படும் பவர் பத்திரங்களை பதிவுத்துறை வணிகரீதியாகப் பார்ப்பதில்லை.
வெளியாருக்கு வழங்கப்படும் பவர் பத்திரங்கள் வணிக நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்குள் கொடுக்கப்படும் பவர் பத்திரமானாலும், சில அடிப்படை கட்டுப்பாடுகள் உள்ளன. பவர் முகவராக நியமிக்கப்படுபவர், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவர் சுயமாக முடிவெடுத்து தெளிவாக செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். பவர் முகவராக ஒரு நபரை நியமிக்கலாம். பிரிக்கப்படாத சொத்துக்கு குடும்ப வாரிசுகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டாகப் பவர் வழங்கலாம். பவர் பெறுபவர் தனி நபர் அல்லது நிறுவனமாக இருக்கலாம்.
தந்தையின் சொத்துக்கு வாரிசாகும் தகுதி உள்ள மகன் பவர் பெறுவதால், பத்திரப்பதிவில் பல்வேறு சிக்கல்கள் தவிர்க்கப்படும். அதேநேரத்தில், தந்தை இறந்த நிலையில், அந்த பவர் பத்திரத்தை வைத்து அவர் மற்ற வாரிசுகளின் உரிமையைப் பறிக்கக்கூடாது. சில இடங்களில், காலாவதியான பவர் பத்திர அடிப்படையில் சொத்துக்களின் மீது உரிமை கொண்டாடும் நபர்களால் குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பவர் கொடுப்பது, பெறுவது ஆகிய நிலைகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் அடிப்படை சட்ட விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தேவை அடிப்படையில் வழக்கறிஞர், சார் பதிவாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அதன்படி செயல்படுவது நல்லது. சிலர், பவர் பத்திரங்களை உயில் போன்று ரகசியமாக்க நினைக்கின்றனர். இதுவும் தவறான வழிமுறை’ என்கிறார்
பவர் விஷயத்தில் பக்கா எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.