சகோதரிக்கு எம்.பி. பதவி
தேர்தலில் நின்று வெற்றி பெறுவது ஆரோக்கியமான விஷயம். அதேநேரம், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் நிற்பது அயோக்கியத்தனம். இரண்டு தொகுதியிலும் நின்று ஜெயித்துவிட்டால், 14 நாட்களில் ஏதேனும் ஒரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அங்கு மீண்டும் ஒரு தேர்தல் வரும். ஏகப்பட்ட செலவாகும். மீண்டும் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டி இருக்கும்
ஏன் இந்த கேலிக் கூத்து..? தமிழகத்தின் பெரிய தலைவர்களும் இந்தியாவின் பெரிய தலைவர்களும் இப்படி நிற்பது சகஜம் தான். அதையே ராகுல் காந்தியும் செய்கிறார் என்றால், அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன தான் வித்தியாசம்..?
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எந்த தொகுதியை ராஜினாமா செய்யலாம் என்பதை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘ரேபரேலி தொகுதியில் ராகுல் எம்பியாக நீடிப்பார். வயநாடு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார். மேலும் வயநாடு மக்களவை தொகுதியில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்’ என்றும் தெரிவித்தார்.
அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளுடனும் உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்டிருப்பதால், இது எனக்கு கடினமான முடிவு. வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஐந்து வருடங்கள் மிகவும் அருமையான, மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. வயநாட்டு மக்கள் எனக்கு ஆதரவையும், அன்பையும், மிகவும் இக்கட்டான நேரத்தில் போராடும் ஆற்றலையும் கொடுத்தனர். அதை என்னால் மறக்க முடியாது. தொடர்ந்து வயநாடுக்கு வருவேன். வயநாட்டுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் 2 எம்.பி.க்கள் கிடைக்கும்’ என்றார்.
இதெல்லாம் சரி. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் நின்றதே தப்பு. இப்போது அந்த இடத்துக்கு மீண்டும் அவரது சொந்த சகோதரியை கொண்டுவந்து நிறுத்துவது அதை விட தப்பு. ஏன் கேரளாவில் பொருத்தமான காங்கிரஸ் தலைவர்களே இல்லையா?
ராகுல் காந்தியும் சராசரி அரசியல்வாதி தானா..?