மந்திரச்சொல்
ஒரு பொருளை வாங்கும்போது காலாவதி தேதி பார்க்கிறோம். மருந்தைப் பயன்படுத்தும்போது அதன் இறுதித் தேதியைக் கவனிக்கிறோம். அதேபோல் நம் வாழ்க்கைக்கும் எக்ஸ்ஃபயரி காலம் உண்டு. அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது.
இதுதான் மனித வாழ்க்கையின் மிகப்பெரிய நிச்சயமற்ற தன்மை. ஆனாலும், மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பிரகாசமான எதிர்காலத்திற்குக் காத்திருக்கிறோம்.
பணம் சம்பாதித்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கலாம். வீடு கட்டிய பிறகு நிம்மதியாக இருக்கலாம். கடன் தீர்ந்த பிறகு சுற்றுலா செல்லலாம். பிள்ளைகள் படித்து முடித்த பிறகு நமக்காக நேரம் ஒதுக்கலாம். ஓய்வுபெற்ற பிறகு பிடித்த விஷயங்களைச் செய்யலாம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு ஆசையையும் தள்ளிப்போடுகிறோம்.
ஆனால், அந்தத் தேதி வருவதற்குள் வாழ்க்கை எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்துவிடுகிறது. பணத்தைச் சம்பாதிக்கிறோம், ஆனால் அதை அனுபவிப்பதற்கான ஆரோக்கியம் இல்லாமல் போகலாம். வீடு கட்டுகிறோம், மற்றவர்கள் அருகில் இல்லாமல் போகலாம். பிள்ளைகள் வளர்ந்துவிடுகிறார்கள், ஆனால் அவர்களோடு குழந்தைப் பருவத்தில் விளையாடத் தவறிய நாட்களை மீண்டும் கொண்டுவர முடியாது. இதுதான் வாழ்க்கையின் கசப்பான உண்மை.
உடனடியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தவிர்த்து, எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் பெரிய பலனுக்காகக் காத்திருப்பதை உளவியலில் டிலைடு கிராடிஃபிகேஷன் என்கிறார்கள் இது எல்லா நேரங்களிலும் தவறானதல்ல. படிப்பதற்காக விளையாட்டைத் தள்ளிப்போடுவது, பணத்தைச் சேமிப்பதற்காகத் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது, பெரிய இலக்குக்காகச் சில ஆசைகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை ஆரோக்கியமான சுயக்கட்டுப்பாடுகள். ஆனால், இதுவே வாழ்க்கையின் எல்லா மகிழ்ச்சிகளையும் ஒத்திவைக்கும் பழக்கமாக மாறிவிடக் கூடாது.
வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பது இயல்பு. அவற்றுக்கு நடுவிலும் மகிழ்ச்சியாக வாழக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக் கலை!
வாரன் பஃபெட் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்தாலும், மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது பணம் மட்டுமல்ல. விரும்பும் மனிதர்களுடன் செலவிடும் நேரமும் வாழ்க்கையில் கிடைக்கும் திருப்தியும்தான் என்கிறார்.
பணம் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைக் கொடுக்கலாம். பாதுகாப்பைக் கொடுக்கலாம். வாய்ப்புகளைக் கொடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு மகிழ்ச்சியான அனுபவத்தையும் பணத்தால் வாங்கிவிட முடியாது. சில மகிழ்ச்சிகள் விலை கொடுத்து வாங்க முடியாதவை. அவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பு இருக்கும்போதே அனுபவிக்க வேண்டும்.
விரும்பும் உணவைச் சாப்பிடுங்கள். பிடித்த பாடலைக் கேளுங்கள். நண்பர்களைச் சந்தியுங்கள். இயற்கையை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படியுங்கள். உங்களுக்காகவும் சிறிது நேரம் வாழுங்கள்.
வாழ்க்கையின் இறுதித் தேதி தெரியாததுதான் அதன் மிகப்பெரிய எச்சரிக்கை. ஒருநாள் முடிந்துவிடப்போகும் வாழ்க்கையில், தேவையற்ற வெறுப்புகளையும் பழிவாங்கும் எண்ணங்களையும் சுமந்துகொண்டு வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் மனிதர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். மன்னிக்க முடிந்தவர்களை மன்னியுங்கள். பிடித்தவர்களிடம் பேசுங்கள். பார்க்க நினைப்பவர்களைச் சந்தியுங்கள். விரும்பும் நல்ல விஷயங்களைத் தொடங்குங்கள்.
நாளை என்ற வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, இன்றே மகிழ்ச்சியாக மாறத் தொடங்குங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
