வெள்ளத்தில் கைகொடுத்த அம்மா உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 452

சென்னையை புயலும் மழையும் 2015ம் ஆண்டு புரட்டிப்போட்டது என்றால், மக்களுக்கு அந்த நேரத்தில் பெரிதும் கை கொடுத்தது அம்மா உணவகம்.

இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, ‘’சென்னை மாநகராட்சியில் துவங்கப்பட்டு நடைமுறையில் உள்ள 252 அம்மா உணவகங்கள்,  கடந்த கன மழை மற்றும் வெள்ளத்தின்போது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் உணவு வழங்க பெருமளவில்  பயன்படுத்தப்பட்டன.

 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாநகராட்சியின் 4   சமையல் கூடங்களில் மட்டுமே உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படும். இந்த நான்கு உணவு சமையல் கூடங்களின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மட்டுமே தயாரித்து வழங்க முடியும்.  ஆனால், தற்போது ஏற்பட்ட இயற்கை பேரிடரான பெருமழை மற்றும் வெள்ளத்தின்போது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 14,50,840 (பதினான்கு லட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூற்று நாற்பது) எண்ணிக்கையிலான உணவு பொட்டலங்கள் வீதம் மொத்தமாக  1 கோடியே 28 லட்சத்து  28 ஆயிரத்து 582 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அம்மா உணவகங்கள்  வார்டு அளவில் இயங்கி வருவதால்,  உடனுக்குடன் தேவைப்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  சரியான நேரத்தில் சூடான, சுவையான மற்றும் தரமான உணவு வழங்கப்பட்டது.  மழை வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை காரணமாக தேநீர் விடுதிகளோ, தனியார் உணவகங்களோ திறக்கப்படவில்லை. மக்கள் ஒரு ரொட்டித் துண்டு கிடைக்காதா, ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைக்காதா என்று ஏங்கிய நிலையில் அம்மா உணவகங்கள் முழு அளவில் செயல்பட்டு உணவு வழங்கும் நிவாரணப் பணிகளில் பெரும் பங்கு வகித்தன.  மாநகராட்சியின் மைய  சமையல் கூடங்களில் மட்டுமே சமையல் செய்து உணவு வழங்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்   சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட்டிருக்க முடியாது…’’ என்றார்.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment