பாலியல் பாடம்
ரொம்பவே சலிப்புடன் ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். ‘’கல்யாணம் முடிச்சு 20 வருஷமாச்சு. இன்னமும் பொண்டாட்டி கூட சண்டை வந்துக்கிட்டே இருக்கு. வீட்டுக்குப் போகவே பிடிக்கலை. அவளை ஆசையா நெருங்க நினைச்சாலே பயமா இருக்கு. ஆனா, அவ மட்டும் எல்லா நேரமும் சந்தோஷமா இருக்கா… அது எப்படின்னு தெரியலை..?’’ என்று கேட்டார்.
‘’அவர் உன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை, அவராகவே மகிழ்ச்சி அடையும் வழிகளை கண்டுபிடித்துவிட்டார் என்று அர்த்தம்’’ என்றார் ஞானகுரு.
‘’அது எப்படி..? ஆண் மகிழ்ச்சியாக இருந்தால்தானே பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?’’
‘’அப்படி யார் சொன்னது..? இந்த உலகில் ஆண்களை விட பெண்களே அதிக காலம் வாழ்கிறார்கள். ஆண்களின் ஆயுட்காலத்தை விட பெண்ணின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 6 வருடங்கள் அதிகம் என்பது அறிவியல்பூர்வ உண்மை. இது எப்படி சாத்தியம் என்றால் அவர்கள் எல்லா சிக்கலுக்கு இடையிலும் சந்தோஷம் அடைகிறார்கள் என்பது தான். எல்லா விஷயங்களிலும் பெண் சந்தோஷம் அடைகிறாள்.
ஆனால், ஆண்களுக்கு மூன்று விஷயங்களில் மட்டுமே அதிக மகிழ்ச்சி அடைக்கிறது. நல்ல உணவு, பாலியல் இன்பம். கேளிக்கை ஆகிய மூன்றுக்காக மட்டுமே உயிர் வாழ்கிறான் என்றே சொல்லலாம். இந்த மூன்றில் ஒன்று இல்லை என்றாலும் தன்னுடைய வாழ்க்கையை குற்றம் சொல்லி சோக கீதம் பாடுவான்.
பாலியல் இன்பம் என்பது அவனுடைய ஆசையை மட்டுமே நிறைவேற்றுவது ஆகும். பெண்ணின் ஆசையை நிறைவேற்றும் அக்கறையும் அன்பும் ஆணின் இயல்பிலேயே கிடையாது. அதனால் தான் பாலியல் வேட்டை முடிந்ததும் தூங்கிப் போகிறான். ஆணின் கூடல் முடிந்ததும் எந்தப் பெண்ணும் உடனடியாக தூங்குவதில்லை. அவளால் தூங்க முடியாது. அதனால் தூங்கும் கணவனைப் பார்த்து தன் ஆசையை தணித்துக் கொள்கிறாள்…’’
‘’அதெப்படி..?’’
’’காலகாலமாக பெண்கள் பாலியல் ஆசையை அப்படித்தான் தீர்த்துக்கொள்கிறார்கள். பெண்ணின் பாலியல் ஆசையை, ஆர்வத்தை ஆண்களால் தீர்த்துவைக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே படுக்கை அறை குறித்து பெரிதாக பெண்கள் கனவு காண்பது இல்லை. எத்தனை கனவு கண்டாலும், ஆசைப்பட்டாலும் ஏமாற்றமே கிடைக்கும் என்பதால் தனிமையில் இன்பம் அடைந்துகொள்கிறார்கள்.
அதேநேரம், தன் உடலை ஆண் பயன்படுத்திக்கொள்வதில் பெரும் திருப்தி அடைகிறாள். கணவனுக்குக் காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள். கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடுவதில் மகிழ்ச்சி அடைகிறாள். இன்னும் சொல்லப்போனால் கணவனுடன் சண்டை போடுவதிலும் அவள் மகிழ்ச்சி அடைக்கிறாள். அவனுடைய குழந்தைகளை அவனை விட சிறப்பாக வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறாள்.
ஆண்கள் உடல் வழியே பார்க்கும் பாலியல் இன்பத்தை பெண் உணர்வு வழியே பார்க்கிறாள். அதனால் தான் இன்னமும் குடும்பம் என்ற அமைப்பு நிலைத்து நிற்கிறது. அதாவது பெண்ணின் காம ஆசை வெறும் கலவியில் இல்லை என்ற உண்மை எல்லாம் ஆண்களுக்குப் புரிவதே இல்லை. குடும்பம் என்ற அமைப்பு, உணவு, உறக்கம், கேளிக்கை வேண்டும் என்றால் பெண்ணின் அடிமையாக வீட்டில் இரு…’’ என்றார் ஞானகுரு.
அமைதியாக கேட்டுக்கொண்டார் மகேந்திரன்.