மந்திரச்சொல்
எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவு, திடீர் நஷ்டம் போன்ற பெரிய செலவுகள் மட்டுமே ஒருவரை ஏழையாக்குவதில்லை. பல நேரங்களில் கவனிக்கப்படாத சின்னச்சின்ன செலவுகளும் செல்வத்தைக் கரைத்துவிடலாம்.
தினமும் பஸ் அல்லது டிரெயின் பிடித்து வீட்டுக்குத் திரும்புவது எரிச்சலாக, அவஸ்தையாக இருக்கலாம். அதற்காக ஆட்டோவில் வீடு திரும்புவதால் தினமும் 300 ரூபாய் செலவாகிறது என்றால், இது சம்பளத்தில் பெரிய தொகையாகத் தெரியாது. ஆனால், ஒரு வருடத்திற்கு என்று கணக்குப்போட்டு பார்த்தால், அது ஒரு லட்சமாக இருக்கும். பஸ் பாஸ் அல்லது டூவீலர் வாங்குவது தீர்வாக இருக்கலாம்.
இதேபோல், தேவையில்லாத ஆன்லைன் ஆர்டர்கள், பயன்படுத்தாத சப்ஸ்கிரிப்ஷன், வாரம் ஒரு நாள் ஹோட்டல் போன்றவை ஒட்டுமொத்த செலவாகப் பார்த்தால் மிகப்பெரும் தொகையாக பயமுறுத்தும். பொதுவாக மனிதரின் மூளை சிறிய இழப்புகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. சூப்பர் மார்க்கெட்டில் தேவையான பொருட்களை வாங்குவதுடன் நில்லாமல், ஆஃபர் என்றும், ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்றும் நிறைய பொருட்களை வாங்குவது பணத்தை மிச்சப்படுத்தும் செயலாகத் தோன்றும். ஆனால், இவை எல்லாமே தேவையில்லாத செலவுகள்.
சிறிய செலவுகளை கண்டுகொள்ளாத மனநிலையில் இருப்பவர்களுக்கு, இந்த செலவுகள் தவிர்க்க முடியாத வாழ்க்கை முறையாக மாறிவிடுகின்றன. இது மிகப்பெரும் ஆபத்து. ஏனென்றால், பல சிறிய செலவுகளுக்கு பின்னால் உண்மையான தேவை இருக்காது. ஆனாலும், வாங்கிக்கொண்டே இருப்பார்கள். சலிப்பு தோன்றும்போது சிலருடன் சேர்ந்து டீ குடிப்பது, போரடிக்கிறது என்று லாங் டிரைவ் போவது போன்றவை அந்த சில நிமிடங்கள் மகிழ்ச்சி தரும். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கலாம்.
எனவே பண மேலாண்மையில் ஒவ்வொரு செலவு செய்யும்போதும், “எனக்கு இது உண்மையிலே தேவையா அல்லது இப்போது எனக்கு இதை வாங்க வேண்டும் என்று தோன்றுகிறதா?” என்ற கேள்வி முக்கியம். இந்த இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதேநேரம், சின்னச் செலவுக்குப் பயந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் சேமிப்பது நல்ல பண மேலாண்மை அல்ல. பணத்தின் நோக்கம் பணத்தை மட்டும் குவிப்பது அல்ல. வாழ்க்கையை பாதுகாப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ உதவுவதுதான். ஒவ்வொரு மாதமும் செலவுகளை முழுமையாகப் பார்த்து மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
1. வீட்டு வாடகை, உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை அடிப்படை தேவைகள்.
2. டியூஷன், ஹோட்டல், டூர் போன்றவை மகிழ்ச்சிக்கானவை.
3. உடனடி பயன்பாடு இல்லாத செலவுகள்.
இந்த மூன்றாவது பிரிவை முழுமையாக அழிக்க வேண்டியதில்லை. ஆனால் அதை புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த செலவு தேவையா என்று கேட்க வேண்டும். தேவை என்றால், அது அவசியம். தேவையில்லை என்றால் அது ஆடம்பரம்.
சிறிய செலவுகள் சேர்ந்து பெரிய இழப்பை உருவாக்குவது போல, சிறிய சேமிப்புகளும் சேர்ந்து பெரிய பாதுகாப்பை உருவாக்கும். 100 ரூபாய் தினமும் சேமிப்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அது ஒரு நாள் எதிர்பாராத பலன் கொடுக்கும்.
படகை மூழ்கடிப்பது எப்போதும் பெரிய ஓட்டை மட்டுமல்ல. தொடர்ந்து கவனிக்கப்படாத சிறிய ஓட்டையும்தான். பணத்தை மதிப்பது என்பது ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்யாமல் இருப்பது அல்ல. ஒவ்வொரு ரூபாயும் எங்கு செல்கிறது என்பதை அறிந்து செலவழிப்பதுதான்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
