மகிழ்ச்சி தரும் வண்ண விளையாட்டு  

Image

ரூபிக் க்யூப்



ரூபிக் க்யூப் விளையாடிய அனுபவம் இருக்கிறதா? முப்பரிமாண வடிவம் கொண்ட கனசதுரமே இந்த விளையாட்டின் மூலதனம் ஆகும். இதன்மூலம் கணக்கு பாடத்தை எளிமையாகக் கற்றுத்தர முடியும். இதை எல்லோரும், எப்போதும், எங்கு வேண்டுமானாலும் மிக எளிய முறையில், மிகக் குறைந்த செலவில் வாங்கி விளையாடலாம் என்பதுதான் தனிச்சிறப்பு.
இதை, 1974ம் ஆண்டில் ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் உருவாக்கினார். அவர் ஹங்கேரியின் தலைநகர் புடா பெஸ்ட்டில், கட்டடங்களின் உள் அலங்காரம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அது சம்பந்தமாக இடத்தை அடைத்துக்கொள்ளாதவாறும், அதே சமயம் பல பொருட்களை வைக்கக்கூடியதுமான அலமாரி ஒன்றின் மாதிரியை அவர் வடிவமைக்க விரும்பினார். அது, பழைய வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் அதேசமயத்தில் பயன்படுத்துவருக்கு எளிமையாகவும் இருக்க வேண்டும் என அவர் எண்ணினார். அந்த சிந்தனையில் உருவானதே இந்த ரூபிக் க்யூப்.

அவர் உருவாக்கிய கனசதுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வண்ணத்தைத் தடவினார்.  அதனை, தன் மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி, முப்பரிமாண  வடிவங்கள் குறித்து வகுப்பெடுத்தார். இதைத் தொடர்ந்து, 1977ம் ஆண்டு அவர், ரூபிக் க்யூப்பை சந்தைப்படுத்த விரும்பினார். அதற்காக ஹங்கேரியில் இருந்த பொம்மை நிறுவனம் ஒன்றை அணுகினார். அதை  தயார்படுத்தி விற்பனையும் செய்தது, அந்நிறுவனம். ஆனால், க்யூப்பை வாங்கிய பலரும் அதை செயல்படுத்த முடியவில்லை என புகார் செய்தனர். எனவே அந்த நிறுவனம் மேலும் கியூப்கள் தயாரிக்க மாட்டோம்  என மறுத்துவிட்டதுடன், கியூப் விளையாட்டு ஒரு முழுத் தோல்வி எனவும் அறிவித்தது.

ஓராண்டு கழிந்த நிலையில், அந்த க்யூப்பைவைத்து உணவு விடுதி ஊழியர் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தார். இதை வாங்கிப் பார்த்த ஆஸ்திரிய நாட்டுச் செல்வந்தர் டியோர் லாக்சி,  ‘இந்தப் பொருள் உலகின் மிகப் பெரிய அதிசயம். இதை உருவாக்கியவர் நிச்சயம் ஒரு மாமேதையாகத்தான் இருக்க வேண்டும்’ என நினைத்ததுடன், அதுகுறித்த விவரங்களை ஊழியரிடம் கேட்டதுடன், அதை ஒரு டாலர் விலைக்கும் வாங்கிக்கொண்டார். அதற்குக் காரணம், அவர் அடிப்படையில்  கணிதப் புதிர்கள் மேல் அதிகம் ஈடுபாடு கொண்டவர்.

பின் பொம்மைகள் தயாரிப்பதில் மாபெரும் திறமைசாலியாக விளங்கிய டாம் க்ரெமெரைச் சந்தித்த டியோர் லாக்சி, க்யூப் குறித்து அவரிடம் எடுத்துரைத்தார். அவர்மூலம் தயாரிக்கப்பட்ட ரூபிக் க்யூப் (இதன் ஆரம்பகாலப் பெயர் மேஜிக் க்யூப்), 1979ம் ஆண்டு நுரெம் பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இடம்பெற்றது. அந்த கண்காட்சிக்கு வந்திருந்த டாம் க்ரெமெர், ரூபிக் க்யூப்புக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இதை உலகம் முழுவதிலும் சந்தைப்படுத்த எர்னோ ரூபிக்கின் ஒப்புதலைப் பெற்றார். அவருடைய நினைவாக, ரூபிக் க்யூப் என்ற பெயரில் இந்த விளையாட்டுப் பொருள் கடந்த 1980ம் ஆண்டு உலகச் சந்தையில் விற்பனைக்கு வந்ததுடன், அதே ஆண்டில் ஜெர்மனி நாட்டின் சிறந்த விளையாட்டுக்கான விருதையும் பெற்றது. தவிர 1980ம் ஆண்டின் முடிவில் ஏறத்தாழ 3 லட்சம் கியூப் வடிவ கீ செயின்கள் விற்றுத் தீர்ந்தனவாம். எந்த நிறுவனம் ஆரம்பத்தில்  க்யூப்களைத் தயாரிக்க மறுத்ததோ, அதுவே இந்த கீ செயின்களை தயாரித்து லாபம் ஈட்டியது.

இதற்கிடையே, பூட்டு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று புகழ்பெற்ற வங்கி ஒன்றின் சேமிப்புக் கிடங்கில் க்யூப் வடிவில் பூட்டு ஒன்றைத் தயாரித்து பூட்டிவிட்டது. ஆனால், அதை எவ்வளவோ முயன்றும் திறக்க முடியவில்லை. எனவே, அன்றாட வாழ்வில் பிற இடங்களில் இந்த க்யூப் வடிவத்தைப் பயன்படுத்தக் கூடாது என முடிவுசெய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க… மறுபுறம்,  ஹங்கேரிக்கு உலக வரலாற்றில் பெருமை தேடித் தந்த ரூபிக், ஹங்கேரி பொறியியல் கழகத்தின் தலைவராக 1990ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், அலமாரியை வடிவமைக்க விரும்பிய்  ரூபிக், அதன்பிறகு கட்டடக் கலையில்  கவனம் செலுத்த முடியாமல் போனார்.

ரூபிக் க்யூப் விளையாட்டுப் பொருளானது, உலகின் எல்லாக் கண்டங்களிலும் எல்லா நாடுகளிலும் விற்பனையாகும் நம்பர் ஒன் பொருள் என்ற சிறப்பைக் கொண்டது. இது, சந்தைக்கு வந்த நாளிலிருந்து இன்றுவரை இதன் விற்பனை சாதனையை வெறெந்த விளையாட்டுப் பொருளும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரூபிக் க்யூப் அசல் பொம்மைகளைவிட, போலி பொம்மைகள் விற்பனை அபாரமாக இருந்தது. எனவே, அசல் பொம்மைகளின் நடு சதுரத்தில்  ‘த’ என்ற குறியீட்டைப் பதித்தனர். இதில் பக்கத்திற்கு ஒன்றாக வெள்ளை, சிவப்பு, நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள் என ஆறு வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட வரிசையில் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வெள்ளைக்கு எதிரே பச்சை வண்ணம், ஆரஞ்சிற்கு நேர் எதிரே சிவப்பு வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலான மக்கள், இந்த வண்ணங்களின் அமைப்பை மனப்பாடம் செய்துகொண்ட பிறகே இந்தப் புதிரை விடுவிக்கின்றனர். அனைத்து நிறங்களைக் கொண்ட கனசதுர கட்டங்களையும் முறையாக ஒழுங்குப்படுத்தி ரூபிக் க்யூப் புதிரை விடுவிப்பதில் நிமிடங்களையும் கடந்து வினாடிகள் கணக்கில் பல்வேறு உலக சாதனைகள் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த சாரா என்னும் 6 வயது சிறுமி, கின்னஸ் சாதனைக்காக ரூபிக் க்யூப் இணைக்கும் சாதனையை மேற்கொண்டார்.  அவர், கண்களைக் கட்டிக்கொண்டு வெறும் 2 நிமிடங்கள் 7 விநாடிகளில் இப்புதிரை நிறைவுசெய்து சாதனை படைத்தார். அதுபோல் 2018ம் ஆண்டு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில்  ஒரே இடத்தில் மிக அதிகமானவர்கள் ஒன்றுகூடி, ரூபிக் க்யூப் புதிரை விடுவித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினர். இதில் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து  இச்சாதனையை நிகழ்த்தினர்.

இங்கிலாந்தின் இப்ஸ்விட்ச் பகுதியைச் சேர்ந்த டோனி பிஷ்செர் என்பவர்,  6 அடி 8 அங்குல உயரத்தில் மிகப்பெரிய ரூபிக் க்யூப்பை உருவாக்கி தனது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.  இதற்கு முன்பு 5 அடி 1.7 அங்குலம் உயரத்தில் ரூபிக் க்யூப்பை உருவாக்கி இவர் கின்னஸ் சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமின்றி, உலகிலேயே 0.22 அங்குலம் அளவிலான மிகச்சிறிய ரூபிக் க்யூப்பை உருவாக்கி சாதனை படைத்தவரும் டோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ரூபிக் க்யூப்,  பக்க‍வாட்டில் நான்கு புறங்களும், மேலும்கீழுமாக இரண்டு புறங்களும் என மொத்த‍ம் ஆறு பக்க‍ங்களைக் கொண்டதாக இருக்கும். ஒருபக்க‍த்திற்கு ஒன்பது கட்ட‍ங்கள் வீதம் இருக்கும். அதில் மேற்சொன்ன ஆறு வண்ண‍ங்கள் தீட்ட‍ப்பட்டிருக்கும். இந்த வண்ணங்களில் அதே வண்ண‍முடைய கட்ட‍ங்களைச் சேர்ந்து வருவதுபோல் வைக்க‍ வேண்டும். உதாரணமாக‌, வெள்ளை நிறமுள்ள‍ கட்ட‍ங்களை உடைய ஒன்பது கட்ட‍ங்களையும் ஒருபக்க‍மாக  வருமாறு  அமைக்க‍ வேண்டும். இதுபோன்ற பிற வண்ண‍க் கட்ட‍ங்களையும் அதே வண்ண‍ கட்டங்களுடன் இணைத்து ஒரே பக்க‍த்தில் வருமாறு அமைப்பதே விளையாட்டின் வெற்றியாகும்.

உலகளவில் மொத்தம் 2,500க்கும் மேற்பட்ட க்யூப் விளையாட்டுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவைப்பொறுத்தவரை 10 விதமான க்யூப் விளையாட்டுகள்தான்  நடைமுறையில் இருக்கிறது என்கிறார், தமிழ்நாடு ரூபிக்ஸ் க்யூப் அசோஷியேசனின் தலைவர் சந்திரிகா. இதில், இந்தியாவில் கிடைக்காத க்யூப் வகைகளை அவர் வெளிநாடுகளிலிருந்து வாங்கி பயிற்சி மேற்கொண்டிருப்பதுடன், அதில் 300 வகையான க்யூப்களில் விளையாடியும் வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment