சினிமா எனும் வாழ்க்கை
கொண்டாட்டமும் கும்மாளமும் நிரம்பி வழியட்டும்…
மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தாடையும் பட்டாசுகளும் நம் நாட்டினருக்கு தீபாவளி சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது என்றால் கேக்கும் பரிசுகளும் நிறைய மக்களுக்கு கிறிஸ்மஸ் ஆனந்தம் தருகின்றன.
இயேசு பிறந்த நாளே கிறிஸ்மஸ் என்று கொண்டாடப்படுகிறது என்றாலும், பைபிளில் எந்த இடத்திலும் இயேசு கிறிஸ்து பிறந்த தேதியைப் பற்றி தகவல்கள் தெளிவாக இல்லை. ’பாவப்பட்ட மக்களை மீட்டெடுக்க இறைவனின் திருமகன் வசந்தகாலம் தோன்றும்போது இந்த மண்ணுலகில் மகனாகப் பிறப்பார்’ என்ற வேத வசனங்களே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் ஆரம்பப்புள்ளி. எனவே, கிறிஸ்மஸை இயேசுவின் பிறந்த தினமாக பலரும் ஏற்பதில்லை என்றாலும் இந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். பெரியவர்களுக்கு நம்பிக்கையும் சிறியவர்களுக்கு மகிழ்ச்சியும் தரும் கிறிஸ்மஸ் எப்படி உருவானது என்பதற்கான ஒரு சுவாரஸ்ய கற்பனையே எ பாய் கால்டு கிறிஸ்மஸ்.
சமீபத்தில் தாயை இழந்த மூன்று குழந்தைகளின் தந்தை மாட். கிறிஸ்மஸ் தினத்தன்று அவசர வேலையாக மாட் வெளியே செல்வதால், அன்றைய இரவு அத்தை ரூத் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்கிறார். தாயைப் பிரிந்த வருத்தத்திலிருக்கும் குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்குகிறார்.
மரவெட்டியான ஜோயலும் சிறுவன் நிகோலஸும் பின்லாந்தின் காட்டுப்பகுதியில் வசிக்கிறார்கள். நிகோலஸின் தாயை சமீபத்தில் ஒரு கரடி கொன்றுவிட்டது. அவள் நிகோலஸ் மீது பேரன்பு கொண்டவள். தாய் சிறுமியாக இருந்த நேரத்தில் காட்டுக்குள் தொலைந்து போனதாகவும், அவளுக்கு எல்ஃப் எனப்படும் மாயாஜால உலகத்தினர் உதவி செய்ததாகவும் நிகோலஸுக்குச் சொல்லியிருக்கிறார். எல்ஃப் வசிக்கும் இடத்தில் நம்பிக்கை நிறைந்திருப்பதாகவும், அங்கே மகிழ்ச்சி வெள்ளமாக பெருகியிருக்கும் என்றும் சொல்கிறாள். தாய் இறந்தபிறகு அதே கதையை தந்தையின் மூலம் கேட்கிறான். ஆனால், எல்ஃப் எனப்படும் மாயாஜால உலகம் எப்போதுமே இல்லை என்றும், அது தாயின் கற்பனை என்றும் தந்தை சொல்கிறார். ஆனாலும், நிகோலஸ் மாயாஜால உலகத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறான்.
வீட்டுக்குள் வரும் சிறிய எலியை தந்தை அடித்து கொல்லப்போகும் நேரத்தில் அதனை தடுத்து காப்பாற்றுகிறான். அந்த எலிக்கு மைக்கா என்று பெயர் சூட்டி வளர்க்கும் நிகோலஸ், அதற்கு பேசுவதற்கு கற்றுத்தருகிறான்.
இந்த நேரத்தில் அந்த நாட்டு அரசன் மக்களை ஒன்றுதிரட்டி, ‘இப்போது மக்களுக்கு நம்பிக்கை தேவையாக இருக்கிறது. அப்படி நம்பிக்கையளிக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டுவருபவருக்கு அற்புதமான பரிசு வழங்கப்படும்’ என்று அறிவிக்கிறார். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நம்பும் ஜோயலின் நண்பர்கள், அப்படியொன்றைத் தேடிச் செல்வதற்கு முடிவெடுக்கிறார்கள். ஆகவே, சிறுவன் நிகோலஸை தனது சகோதரி கார்லோட்டாவின் பொறுப்பில் விட்டுச் செல்கிறான் ஜோயல்.
இனிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் அத்தை கார்லோட்டா சிறுவன் நிகோலஸை மிகவும் கொடுமைப்படுத்துகிறாள். பனி பொழியும் நேரத்திலும் வீட்டுக்கு வெளியே படுக்க வைக்கிறாள். தாய் விட்டுச்சென்றிருக்கும் ஒரு மேப் நிகோலஸுக்குக் கிடைக்கிறது. அதன் மூலம் மாயஜால உலகத்திற்கு செல்லமுடியும் என்று நிகோலஸ் நம்புகிறான். அதே நேரத்தில் தந்தை ஆபத்தில் இருப்பதாகவும் உணர்கிறான். ஆகவே, வீட்டிலிருந்து தன்னுடைய தோழனான மைக்காவுடன் மாய உலகத்தைத் தேடி கிளம்புகிறான்.
எலியான மைக்காவுடன் பேசிக்கொண்டே நகரும் நிகோலஸிடம் திடீரென மைக்கா பேசத் தொடங்குகிறது. எலியான உன்னால் எப்படி பேச முடிகிறது என்று நிகோலஸ் கேட்கும்போது, ‘உன்னுடைய நம்பிக்கைதான் என்னை பேச வைக்கிறது..’ என்று சொல்கிறது. காட்டுக்குள் போய்க்கொண்டே இருக்கிறான் நிகோலஸ். அம்பு குத்தி காயப்பட்டிருக்கும் பனி மான் ஒன்றை பார்க்கும் நிகோலஸ், அதற்கு சிகிச்சையளிக்கிறான். காட்டுக்குள் செல்வதற்கு அவனுக்கு உதவுவதற்கு முன்வரும் பனி மானுக்கு பிளிட்ஸன் என்று பெயர் சூட்டுகிறான்.
தாயின் மேப் காட்டும் வழியின்படி எல்ஃப் இருக்கும் இடத்தை நிகோலஸ் மிகவும் சிரமப்பட்டு அடைகிறான். அங்கு தந்தையின் கத்தி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். அதேநேரம் அங்கே எல்ஃப் யாரையும் கண்டுபிடிக்க முடியாமல் நம்பிக்கை இழக்கிறான். அப்போது அங்கே வரும் லிட்டில் நூஸ் மற்றும் ஃபாதர் டோபோவும் நிகோலஸுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்கள். எல்ஃப் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் நீ பார்த்தால் எல்லாவற்றையும் காண முடியும் என்கிறார்கள். அந்த நம்பிக்கையுடன் பார்த்தவுடன், அவர்கள் அனைவருமே இப்போது எல்ஃப் கட்டுப்பாட்டிலுள்ள ஊருக்குள் இருப்பதை அறிகிறான்.
மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டிய எல்ஃப் இப்போது துயரத்துடன் இருக்கிறார்கள். ஏனென்றால், அழிந்துவிட்டதாக சொல்லப்படும் எல்ஃப் இன்னமும் இருக்கிறது என்ற நம்பிக்கையை அரசனிடம் கொடுப்பதற்காக அவர்களின் குழந்தையை மனிதர்கள் கடத்தியிருக்கிறார்கள். தன்னுடைய தந்தையும் அவரது நண்பர்களுமே இந்த கடத்தலை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்ததும் அதிர்ந்துபோகிறான். எல்ஃப் சமூகத்தினரிடம், ‘நான் நிச்சயம் உங்கள் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வருவேன்…’ என்று நம்பிக்கை தருகிறான்.
ஆனாலும், மனிதர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்ட எல்ஃப் மகாராணி நிகோலஸை கைது செய்கிறாள். அந்த ஜெயிலில் இருந்து ஒரு குட்டித் தேவதையின் உதவியுடன் தப்பும் நிகோலஸ் தந்தையைக் கண்டுபிடிக்கிறான். ஒரு குழந்தையை பிடித்து பரிசு பெறுவது தவறு என்று எடுத்துக்கூறுகிறான். தன்னுடைய தவறை உணரும் தந்தை, அந்த குழந்தையுடன் நிகோலஸ் செல்வதற்கு அனுமதிக்கிறான். அந்த குழந்தையுடன் எல்ஃப் மக்களை சந்திக்கும் நிகோலஸுக்கு எல்ஃப் மக்கள் எல்லோரும் அன்புடன் நிறைய நிறைய பரிசுப் பொருட்கள் கொடுக்கிறார்கள்.
பறக்கும் மானில் ஏறி நாட்டுக்குத் திரும்பும் நிகோலஸ் நள்ளிரவில் அரசனை சந்திக்கிறான். இந்த பரிசு பொருட்களை எல்லாம் மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களுடைய அறையில் வைத்துவிட்டால், காலையில் அவர்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்கிறான். அப்படியே அந்த அரசர் கிறிஸ்மஸ் தாத்தா உடையில் மான் மீது ஏறி ஒவ்வொரு வீட்டுக்கும் ஜன்னல் வழியே நுழைந்து பரிசுகளை வைத்துவிட்டு வருகிறார். விடியும்போது, அந்த நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுகிறார்கள். இப்படித்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஆரம்பமானது என்று கதை சொல்லி முடிகிறார் அத்தை.
கதை சொல்லி முடித்ததும் வீட்டுக்குக் கிளம்பும் அத்தையை வழியனுப்ப ஹாலுக்கு வரும் குழந்தைகள் அங்கே கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்கான அலங்காரம் பிரமாண்டமாக செய்யப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள். இந்த எதிர்பாராத மகிழ்ச்சியைத் தருவதற்காக தந்தை இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் மூன்று பிள்ளைகளும் ஆனந்தத்தின் எல்லைக்கே போகிறார்கள். அத்தை குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு வெளியேறும் நேரத்தில் அவளுடன் கொண்டாட்டமும் கொடி கட்டிப் பறக்கிறது.
கற்பனை உலகத்தை இந்த படம் காட்டுகிறது என்றாலும் குழந்தைகள் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஆழமாக விதைக்கிறது. தாய் இழந்த சோகத்தில் தவிக்கும் குழந்தைகளிடம், ‘இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். இவற்றையும் ஏற்றுக்கொண்டு நகரத்தான் வேண்டும்’ என்று அழுத்தமாக சொல்லிவைக்கிறது.
2015ம் ஆண்டு இதே பெயரில் வெளியான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாரிக்கப்பட்டு 2021ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. கிறிஸ்மஸ் கொண்டாட்டம் குறித்து இதுவரை ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளியாகியுள்ளன என்றாலும், இது ரொம்பவே ஸ்பெஷல். எத்தனை இழப்புகள், வேதனைகளுக்கு நடுவில் வாழ்க்கை இருந்தாலும், நம்பிக்கை மட்டும் இருந்தால் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை குதூகலமாக சொல்லித்தருகிறது. நீங்களும் குடும்பத்தோடு கண்டுகளியுங்கள்.