எம்.ஆர்.ஐ. இருக்க சி.டி.ஸ்கேன் எதற்கு..?

Image
  • ஆபத்தை விளக்குகிறார் மருத்துவர் வீ.புகழேந்தி

ஒரு நோய் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை பரிசோதனைகள் மூலம் அறிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே அலோபதி மருத்துவத்தின் அடிப்படை என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். பரிசோதனைக்குப் பின்னே இருக்கும் பின்விளைவுகள் குறித்து பெரும்பாலோர் அறிவதே இல்லை. இன்னும் குறிப்பாக கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்து மக்களுக்குத் தெரியவே இல்லை. அதனால் தான், சி.டி.ஸ்கேன் எடுப்பதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதே இல்லை.

சமீபத்தில் சாரா மெக்டொனால்ட் நடத்திய ஆய்வின் மூலம் சி.டி.ஸ்கேன் எடுப்பதால் மனிதர்கள் உட்பெறும் குறைந்தபட்ச கதிர்வீச்சு (10-15 மைக்ரோ கிரே அல்லது மில்லி சீவர்ட்ஸ்) காரணமாக ரத்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர், இளைஞர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் கதிர்வீச்சின் காரணமாக எழும் ரத்தப் புற்றுநோய் பாதிப்பிற்கு கூடுதலாக ஆளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, மிகவும் அவசியம் இருந்தால் தவிர சி.டி.ஸ்கேனை தவிர்ப்பது நல்லது.

ஒரு சி.டி.ஸ்கேன் எடுப்பதால் மனிதர்கள் பெறும் கதிர்வீச்சின் அளாவு 10-20 மில்லி சீவர்ட்ஸ் ஆகும். இதுகுறித்து முன்னாள் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ‘பரிசோதனைக்காக 1 சி.டி.ஸ்கேன் எடுக்கும் போது நாம் 33 எக்ஸ்-ரே எடுப்பதால் கிடைக்கும் கதிர்வீச்சின் அளவைப் பெறுகிறோம்’ என எச்சரிக்கை செய்திருக்கிறார்.

மருத்துவத் துறையில் சி.டி.ஸ்கேன் மூலமே மனிதர்கள் அதிகபட்ச கதிர்வீச்சிற்கு ஆளாகின்றனர். ஏற்கனவே இன்டர்நேஷனல் ஏஜென்சி ஃபார் ரிசர்ச் ஃபார் கேன்சர்  அமைப்பின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள 276 மருத்துவமனைகளில் இருந்து 22 வயதிற்கு முன்னர் சி.டி.ஸ்கேன் எடுத்த 9,48,174 பேரை ஆராய்ந்துள்ளனர்.

இறுதி ஆய்வு 9,00,000 நோயாளிகளில் 1.3 மில்லியன் சி.டி.ஸ்கேனை ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. இவர்களில் 51% பேர் 20 வயதிற்கு குறைவானவர்கள். 88.5% பேர் 30 வயதிற்கு குறைவானவர்கள். முதல் சி.டி.ஸ்கேன் எடுத்து அடுத்த 2 ஆண்டுகள் வரை தொடர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 790 பேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 578 பேருக்கு நிணநீர் புற்றுநோயும் (காட்ஜ்கின்ஸ் மற்றும் நான்காட்ஜ்கின்ஸ் லிம்போ…), 203 பேருக்கு மையலாட் லுக்கீமியா, ஆக்யூட் லுக்கீமியா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சராசரி தொடர்ஆய்வு 7.8 ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வின் முடிவில் சி.டி.ஸ்கேனால் உள்வாங்கப்படும் குறைந்தபட்ச கதிர்வீச்சிலும் ரத்தப் புற்றுநோய் பாதிப்பு (மல்டிபிள் மயலோமா உட்பட) இருப்பது உறுதியாகியுள்ளது. எலும்பு மஜ்ஜை உள்வாங்கிய கதிர்வீச்சின் அளவு இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டது.

10,000 குழந்தைகளுக்கு சி.டி.ஸ்கேன் எடுத்தால் (சராசரி கதிர்வீச்சின் அளவு 8 மைக்ரோ கிரே) 2 குழந்தைகள் ரத்தப் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.  சில ஆய்வுகளில் 2,000 சி.டி.ஸ்கேன் எடுத்தால் 1 குழந்தை புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவதாக செய்தி வெளியாகியுள்ளது. 1 சி.டி.ஸ்கேன் எடுப்பதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 16% அதிகமாக இருப்பதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் டாக்டர் ஜான் டி மத்தேவ் குழுவினர் செய்த ஆய்வில் 4.5 மில்லி சீவர்ட்ஸ் சராசரி கதிர்வீச்சு அளவில், 7.5 வருட தொடர்ஆய்விற்குப் பின், புற்றுநோய் பாதிப்பு 24% அதிகமாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  தற்போதைய ஆய்வில் ஆக்டிவ் போன் மாரோ டோஸ் 10-15 மைக்ரோ கிரே என்றுள்ளது.

இந்த ஆய்வு ஏறக்குறைய 1 மில்லியன் பேரிடம் மேற்கொள்ளப்பட்டதால், ஆய்வுமுடிவுகளை கணக்கில் கொண்டு இனியாவது சி.டி.ஸ்கேன் எடுக்கும் முன்னர் மக்கள் ரத்தப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியம்.  

2003ல் நான் கல்பாக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் மல்டிபிள் மயலோமா எனும் ரத்தப் புற்றுநோய் இறப்பு விகிதம் அணுசக்தி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் அதிகம் இருப்பதை (4 மடங்கு) எனது சிறு ஆய்வில் உறுதிபடுத்தியிருந்தேன். அமெரிக்கா, ஜப்பான் போன்ற மேலைநாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க தனிச் சட்டங்கள் இருக்கையில், இந்தியாவில் அத்தகைய சட்டங்கள் இல்லை என எடுத்துரைத்தேன். அப்போது  அணுசக்தி நிர்வாகம் + அடையாறு புற்றுநோய் துறை முன்னாள் தலைவர் .சாந்தா அவர்கள், ’ஊழியர்கள் உடலில் இருக்கும் கதிர்வீச்சின் அளவு மிகக் குறைவான அளவு என்பதால் நோய் வர காரணம் இல்லை’ என்று கூறியது அறிவியல்ரீதியாகத் தவறு என தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது. 

இனியாவது அணுசக்தி ஊழியர்கள் + சுற்றுப்புற மக்கள் நலன் காக்க அரசு மல்டிபிள் மயலோமா நோய் ஏற்பட குறைந்த பட்ச கதிர்வீச்சும் காரணம் என ஏற்றுக் கொண்டு, கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளுக்கு இழப்பீடுத் தொகை கொடுக்க தனிச் சட்டங்களை இந்தியாவில் கொண்டுவர முன்வர வேண்டும்.

மக்களும்,மருத்துவர்களும் 1 சி.டி. ஸ்கேன் எடுத்தாலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளதால் முடிந்த வரையிலும் அதை தவிர்த்து கதிர்வீச்சில்லாத எம்.ஆர்.ஐ.  போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த புரிதலை ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்படுத்தவும் வேண்டும்.

தொடர்புக்கு : 8870578769