மந்திரச்சொல்
குழந்தைகள் சின்னச்சின்ன விஷயங்களுக்கும் சிரிக்கிறார்கள். ஒரு விளையாட்டு, ஒரு பரிசு, ஒரு வேடிக்கை, ஒரு சத்தம் என எதுவாக இருந்தாலும் மனதாரச் சிரிக்கிறார்கள். வயது அதிகரிக்கும்போது இந்தக் குழந்தைத்தனமான மகிழ்ச்சியை மனிதர்கள் மறந்து விடுகிறார்கள்.
அதனால், முகத்தை இறுக்கமாக வைத்திருப்பவர்களிடம் பேசுவதற்குத் தயங்குகிறார்கள். புன்னகை புரிபவர்களிடம் இயல்பாகவே நெருக்கம் வருகிறது. சிரிப்பு உங்களுக்குச் சொந்தமானது. ஆனால், அது இன்னொருவர் மனதிலும் மகிழ்ச்சியை உருவாக்குவதுதான் மேஜிக்.
முகத்தில் சுருக்கங்கள் விழுவதை யாராலும் தடுக்க முடியாது. தலைமுடி நரைப்பதையும் தடுக்க முடியாது. ஆனால், மனம் முதுமை எண்ணத்தை சிரிப்பு தள்ளிப்போடுகிறது. உளவியல் ரீதியாகவும் சிரிப்பு மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனதாரச் சிரிக்கும்போது. எண்டார்பின் போன்ற நரம்பியல் வேதிப்பொருட்களின் செயல்பாடு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்துகிறது.
ஒரு பிரச்சினையை நினைத்து அழுவதற்கும், அதே பிரச்சினையைச் சற்று நகைச்சுவையுடன் அணுகுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பிரச்சினை உடனடியாகத் தீர்ந்துவிடாது. ஆனால், அதை எதிர்கொள்ளும் மனநிலை மாறிவிடும். சிரிப்பது துன்பத்தை மறுப்பதல்ல. துன்பம் நம்முடைய வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமிப்பதைத் தடுக்கிறது.
உலகையே சிரிக்க வைத்த கலைஞர் சார்லி சாப்ளின். ஆனால், அவருடைய வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. வறுமையான சூழலில் பிறந்தவர். சிறுவயதில் குடும்ப வறுமை, தந்தையின் மறைவு, தாயின் மனநலப் பிரச்சினைகள், துணைவியர் விலகல், பிள்ளைகள் பிரச்னை எனப் பல துயரங்களைச் சந்தித்தார். ஆனால், அந்தத் துயரங்களிலிருந்து உருவான அனுபவங்களை தனது கலைக்கு அடித்தளமாக மாற்றிக்கொண்டார்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்க்கையில் துன்பமே இருக்கக்கூடாது என்பதில்லை. துன்பங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் சார்லி சாப்ளின் நமக்கு சொல்லித்தரும் பாடம். சார்லி சாப்ளின் தனது 88-வது வயதில் மறைந்தார். அவருடைய கலை இன்றும் தலைமுறைகளைக் கடந்து மக்களைச் சிரிக்க வைக்கிறது.
தினமும் சிரிப்பதற்காகப் பெரிய காரணங்களைத் தேட வேண்டியதில்லை. காலையில் எழுந்ததும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்த்து ஒரு புன்னகை செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பாருங்கள். குடும்பத்தினருடன் தினமும் சிறிது நேரம் மனம்விட்டுச் சிரித்துப் பேசுங்கள்.
சிறிய தவறுகளுக்காக உங்களையே வெறுக்காதீர்கள். மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்க்காமல் அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களையும் பாருங்கள். உங்களுடைய வயதை நினைத்து வருத்தப்படாமல், இன்னும் வாழ வேண்டிய வாழ்க்கையை நினைத்து மகிழுங்கள். சிரிப்பு என்பது எல்லா நோய்களுக்கும் மருந்து அல்ல. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அது ஒரு நல்ல துணை.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
