மந்திரச்சொல்
நீண்ட காலப் பயணங்களால் மட்டுமே வாழ்க்கை மாறுவதில்லை. சில நேரங்களில் ஒரே ஒரு நொடி போதும். ஒரு முடிவு, ஒரு சந்திப்பு, ஒரு துணிச்சலான முயற்சி, ஒரு வாய்ப்பு, ஏன்… ஒரே ஒரு வார்த்தைகூட ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலும் வேறொரு பாதைக்குக் கொண்டு சென்றுவிடும்.
நேற்று வரை சாதாரண மனிதராக இருந்த ஒருவர், இன்று உலகமே வியந்து பார்க்கும் ஆளுமையாக மாறலாம். தோல்விகளால் துவண்டு போயிருந்த ஒருவர், திடீரென வெற்றியின் உச்சத்தில் நிற்கலாம். இதற்கெல்லாம் பின்னே பல ஆண்டுகால உழைப்பு இருக்கலாம். ஆனால், அந்த உழைப்புக்கான பலனை வெளிப்படுத்தும் திருப்புமுனை ஒரே ஒரு நொடியில் நிகழ்ந்திருக்கலாம்.
ஒருவர் நீண்ட காலமாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், தோல்வி பயத்தால் முதல் அடியை எடுத்து வைக்காமல் இருக்கலாம். ஒருநாள் அந்தப் பயத்தைப் புறந்தள்ளி, ‘இனி முயற்சி செய்துதான் பார்ப்போம்’ என்று அவர் எடுக்கும் ஒரு முடிவு, அவருடைய எதிர்காலத்தையே மாற்றிவிடலாம்.
அந்த ஒரு முடிவு உடனடியாக வெற்றியைக் கொடுத்துவிடாது. ஆனால், அதுவரை செல்லாத பாதையில் பயணிக்கத் தொடங்குவதற்கான கதவைத் திறந்துவிடும். மாற்றத்திற்கான முதல் தேவை பெரிய வாய்ப்பு அல்ல; மாற்றத்தைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைதான்.
தோல்வியடைந்த பிறகும் மீண்டும் முயற்சி செய்யத் தீர்மானிக்கும் நொடி. உங்களை அவமதிப்பவர்களிடம் இருந்து விலக முடிவெடுக்கும் நொடி. பயத்தைவிட உங்கள் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நொடி. இனியும் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று உணரும் நொடி. உங்களுடைய திறமையை நீங்களே நம்பத் தொடங்கும் நொடி. மற்றவர்களுக்காக வாழ்வதைவிட உங்களுடைய வாழ்க்கையைச் சீரமைக்க முடிவெடுக்கும் நொடி. இப்படிப்பட்ட நொடிகள் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அவை உருவாக்கும் விளைவுகள் அசாதாரணமானவை.
இதற்கு உதாரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை பொருத்தமாக இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த தோனி, கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் போராடியவர். குடும்பத்தின் பொருளாதார நிலை, எதிர்காலம் குறித்த கவலை ஆகியவற்றுக்கு இடையே இந்திய ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார்.
ஆனால், கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. 2004-ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். தொடக்கத்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்தார்.
2005-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 183 ரன்கள் குவித்தது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தோனியின் வாழ்க்கையை மாற்றியது ஒரே ஒரு போட்டி. ஆனால், அந்தப் போட்டியில் வெளிப்பட்ட திறமைக்குப் பின்னால் இருந்தது பல ஆண்டுகாலப் பயிற்சியும் விடாமுயற்சியும்தான்.
ஒரு நாள் உங்களுடைய வாழ்க்கையிலும் இப்படியொரு திருப்புமுனை வரலாம். இன்று உங்களை யாரும் கவனிக்காமல் இருக்கலாம். உங்களுடைய திறமையை யாரும் அங்கீகரிக்காமல் இருக்கலாம். ஆனால், அதற்காக உங்களுடைய முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.
நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நாளைய வாழ்க்கையைச் சிறப்பாக்குவதற்கான முதல் முடிவை இன்று உங்களால் எடுக்க முடியும். ஒரே ஒரு நொடி உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றிவிடும். அந்த நொடி எப்போது வரும் என்று காத்திருக்காதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை மாற்றும் அந்த நொடியை நீங்களே உருவாக்குங்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
