மந்திரச்சொல்
ஒரு குழந்தை மழையில் நனைகிறது. தெருவில் நடனமாடுகிறது. பிடித்த பாடலை உரக்கப் பாடுகிறது. யாராவது சிரிப்பார்களா, கேலி செய்வார்களா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. ஏனென்றால், குழந்தையின் கவனம் மற்றவர்களின் பார்வையில் இல்லை, தன்னுடைய மகிழ்ச்சியில் இருக்கிறது.
ஆனால், அதே குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது அப்படி இருப்பதில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கிறான். தனக்குப் பிடித்த உடையை அணியத் தயங்குகிறான். ஆசைப்பட்ட இடத்திற்குச் செல்லத் தயங்குகிறான். வாய் விட்டு சிரிப்பதற்கும் யோசிக்கிறான்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பதிலாக, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவதற்காக வாழத் தொடங்குகிறான். ஏனென்றால், மனிதர்களுக்கு மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற இயல்பான விருப்பம் இருக்கிறது. சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பம் தவறானதல்ல. ஆனால், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையே வாழ்க்கையின் அளவுகோலாக மாற்றிக்கொள்ளும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது.
மற்றவர்கள் நம்மைத் தவறாக மதிப்பிடுவார்களோ என்ற பயம் அதிகமாகும்போது, ஒருவர் தனது விருப்பங்களை ஒதுக்கிவைக்கிறார். புதிய முயற்சிகளைத் தவிர்க்கிறார். தனக்காக வாழ்வதைவிட மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக வாழத் தொடங்கிவிடுகிறார்.
உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி என்பது மற்றவர்களின் ஒப்புதலைப் பொறுத்து இருக்கக்கூடாது. நமக்குப் பிடித்த புத்தகத்தைப் படிப்பதற்கு, நமக்குப் பிடித்த உடையை அணிவதற்கு, நக்குப் பிடித்த துறையில் சாதிப்பதற்கு மற்றவர்களின் அங்கீகாரம் தேவையில்லை. எல்லோரையும் திருப்திப்படுத்த முயற்சி செய்தால், ஒருநாள் நம்முடைய வாழ்க்கையிலேயே நமக்குத் திருப்தி இல்லாமல் போய்விடும்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர்களுடைய உரிமை. நாம் எப்படி வாழ வேண்டும் என்பது நம்முடைய உரிமை. இதற்கு உதாரணமா ஸ்டீவ் ஜாப்ஸ்ஸை சொல்லலாம்.
தனது இளமைக்காலத்தில் வழக்கமான வாழ்க்கைப் பாதையைப் பின்பற்றாமல், கல்லூரிப் படிப்பிலிருந்து விலகி, தனக்கு ஆர்வமிருந்த பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். குறிப்பாக, கலை மற்றும் எழுத்துரு வடிவமைப்பு தொடர்பான வகுப்புகளில் ஆர்வம் காட்டினார்.
அப்போது அந்தப் படிப்புகள் எதிர்காலத்தில் தனக்கு என்ன பயன் தரும் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால், அந்த ஆர்வம் பின்னாளில் ஆப்பிள் கணினிகளின் எழுத்துரு வடிவமைப்பில் முக்கியப் பங்கு வகித்தது.
அவர் தனது புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழக உரையில், பிறருடைய கருத்துகளின் இரைச்சல் நம்முடைய உள்ளத்தின் குரலை மறைத்துவிட அனுமதிக்காதீர்கள் என்று வலியுறுத்தினார். அதாவது, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக நம்முடைய வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதே அவரது வாழ்க்கை அனுபவம் உணர்த்தும் செய்தி.
குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் அவர்களுடைய விளையாட்டுத்தனம் மட்டுமல்ல, மகிழ்ச்சியை ஒத்திவைக்காமல் அனுபவிக்கும் மனநிலையும்தான்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உலகத்தின் ஒப்புதல் தேவையில்லை. நம்முடைய மனதின் ஒப்புதல் மட்டுமே போதும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
