வெற்றி ஒரே நாளில் வருவதில்லை. ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக வரும்.

மந்திரச்சொல்

ஒரு விதை மண்ணுக்குள் விழுந்த அடுத்த நாளே மரமாவதில்லை. அது முதலில் மண்ணுக்குள் வேர்விடுகிறது. வெளியே எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கும். மழை, வெயில், காற்று எனப் பல தடைகளைத் தாண்டிய பிறகுதான் முளைக்கிறது. வளர்கிறது. ஒரு நாள் நிழல் தரும் மரமாகிறது.

மனித வாழ்க்கையும் அப்படித்தான். வெளியில் தெரியாத உழைப்புதான், ஒருநாள் எல்லோருக்கும் தெரியும் வெற்றியாக மாறுகிறது.

மனிதர்கள் பல நேரங்களில் தோல்வியால் முயற்சியைக் கைவிடுவதில்லை. முயற்சி செய்தும் அதற்குரிய பலன் கிடைக்காத விரக்தியால்தான் கைவிடுகிறார்கள். அதாவது நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் முடிவுகள் கிடைக்காதபோது, நம் திறமையை சந்தேகிக்கத் தொடங்குகிறோம்.

உண்மை என்னவென்றால், இன்றைய தோல்வி என்பது உங்களால் முடியாது என்பதற்கான நிரூபணம் அல்ல. நீங்கள் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அனுபவம். எனவே, தோல்வியைக் கண்டு உங்களைத் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். அணுகுமுறையை மாற்றுங்கள். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நேற்றைவிட இன்று சிறப்பாகச் செயல்படுங்கள்.

உலகம் உங்கள் முயற்சியை நிராகரித்தாலும், நீங்கள் உங்கள் கனவை நிராகரித்துவிடாதீர்கள். விடாமுயற்சிக்கும் தாமதமாகக் கிடைக்கும் வெற்றிக்கும் ஜேம்ஸ் டைசன் மிகச் சிறந்த உதாரணம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் வாக்வம் க்ளீனரில் தூசி உறிஞ்சும் கருவியின் பை அடிக்கடி அடைத்துக்கொள்வது அதன் விற்பனைக்கு இடையூறாக இருந்தது. இதற்கு  தீர்வு காண முயற்சி செய்தார். மீண்டும் மீண்டும் தோல்வி கிடைத்தது.

இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து பரிசோதனைகள் செய்தார். மொத்தம் 5,126 தோல்விக்குப் பிறகு, 1983ஆம் ஆண்டு தனது முதல் வெற்றிகரமான பை இல்லாத தூசி உறிஞ்சும் கருவியை உருவாக்கினார். அதன்பிறகு உலகளாவிய வெற்றியைப் பெற்றார்.

5,126 முறை முயற்சி செய்து தோல்வியடைந்தாலும், 5,127வது முயற்சியில் வெற்றி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் உழைத்தவர்தான் ஜேம்ஸ் டைசன். அவருக்கு வெற்றி ஒரே நாளில் வரவில்லை. ஆனால், பல ஆண்டுகளாகத் தொடர்ந்த முயற்சிக்கு ஒருநாள் உலகமே அங்கீகாரம் கொடுத்தது.

வெற்றிக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. வெற்றிக்குத் தகுதியான மனிதராக ஒவ்வொரு நாளும் உங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வெற்றி என்பது இன்று உங்களிடம் இல்லாதிருக்கலாம். ஆனால், அதை நோக்கிச் செல்லும் வாய்ப்பு இன்னும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

தாமதம் என்பது தோல்வியல்ல. முயற்சியைத் தொடர்வதற்கான இன்னொரு வாய்ப்பு. இன்றைய முயற்சியே நாளைய வெற்றி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment