நீங்கள் திருப்தியடையாத உங்கள் வாழ்க்கை, பலருடைய கனவு வாழ்க்கையாக இருக்கிறது.

மந்திரச்சொல்

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் நிறைய குறைகள் இருக்கிறது. நினைத்தபடி வீடு அமையவில்லை, விரும்பிய பதவி கிடைக்கவில்லை, வாழ்க்கைத் துணை போதிய அன்பு செலுத்தவில்லை. குழந்தைகள் சொல்வதைக் கேட்பதில்லை என்று பல குறைகள் மனதை அரித்துக்கொண்டு இருக்கும்.

ஆனால், நீங்கள் சாதாரணமாகக் கருதும் இந்த வாழ்க்கையை பெறுவதற்கு, எத்தனையோ பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு, நீங்கள் வசிக்கும் வீடு, உங்களிடம் இருக்கும் குடும்பம், உறவுகள், வேலை, வருமானம், உடல்நலம் என நீங்கள் பெரிதாக மதிக்காத பல விஷயங்கள், வேறு ஒருவர் தேடிக்கொண்டிருக்கும் பெரும் செல்வங்களாக இருக்கலாம்.

இதுதான் வாழ்க்கையின் விசித்திரம். நம்மிடம் இருப்பதைவிட இல்லாதவற்றின் மீதுதான் மனித மனம் அதிகக் கவனம் செலுத்துகிறது. நம்மைவிட வசதியாக வாழ்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால், நம்மைவிடப் பல சிரமங்களை எதிர்கொள்பவர்களைப் பார்க்க மறந்துவிடுகிறோம்.

மற்றவர்களின் வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே பார்க்கிறோம். அவர்களுடைய போராட்டங்களையும் கண்ணீரையும் பார்ப்பதில்லை. இதனால்தான் மற்றவர்களின் வாழ்க்கை அழகாகவும், நம்முடைய வாழ்க்கை குறைகளுடனும் தெரிவது இயல்பாகிவிடுகிறது.

நிக் வுயிச்சிச் (Nick Vujicic) வாழ்க்கையைப் பார்த்தால் நமது வாழ்க்கையின் அருமை புரியும்.  ஆஸ்திரேலியாவில் பிறந்த நிக், கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் பிறந்தவர். சிறுவயதில் மனவேதனையையும், தாழ்வு மனப்பான்மையையும், தற்கொலை எண்ணங்களையும் எதிர்கொண்டவர்.

ஆனால், தன்னிடம் இல்லாதவற்றை மட்டுமே நினைத்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. தன்னிடம் இருக்கும் திறன்களைக் கொண்டு வாழ முடிவு செய்தார். பின்னாளில் உலகம் முழுவதும் பயணம் செய்து லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டும் உரைகளை வழங்கும் பேச்சாளராக உயர்ந்தார். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையும் அமைத்துக்கொண்டார்.

நம்முடைய குறைகளைத் தாண்டியும் வாழ்க்கையில் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் உருவாக்க முடியும் என்பதை அவருடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

மனதிற்குப் பிடித்த மனிதர்களுடன் பேசுவது, குடும்பத்தினருடன் உணவு சாப்பிடுவது, நோயின்றி நடப்பது, விரும்பிய புத்தகத்தைப் படிப்பது, காலையில் எழுந்து ஒரு புதிய நாளைப் பார்ப்பது என நாம் சாதாரணமாகக் கருதும் பல விஷயங்கள்தான் வாழ்க்கையின் உண்மையான செல்வங்கள்.

இதற்காக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையைக் கைவிட வேண்டியதில்லை. இன்னும் நல்ல வேலை வேண்டும், அதிக வருமானம் வேண்டும், அழகான வீடு வேண்டும், உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. ஆனால், நாளைய மகிழ்ச்சிக்காக இன்றைய மகிழ்ச்சியைத் தொலைத்துவிடக் கூடாது.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஆசையும் இருக்க வேண்டும்; ஏற்கெனவே கிடைத்திருப்பதை ரசிப்பதற்கான மனமும் இருக்க வேண்டும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment